தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்!- சொல்கிறார் கொழும்பு அசாத் சாலி!!


வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள நிலங்களை நிரந்தரமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 07:37.06 AM GMT ]
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை நிரந்தரமாக அபகரிப்பதற்கான சுற்றுநிருபம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இராணுவத்தினருக்கான நிலத்தை அபகரிப்பது தொடர்பில்,
காணி சுவீகரிப்பு திணைக்களத்தினால் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் கூட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணி சுவீகரிப்பு 460 பிரிவு 2ன் கீழ் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 24 கிராமசேவகர் பிரிவிலுள்ள காணிகளை அபகரிக்கத் திட்டமிடப்படுகின்றது.
இதன்படி இதற்கான சுற்று நிருபமும், உத்தியோகபூர்வ அறிவித்தல்களும். கோப்பாய், தெல்லிப்பளை பிரதேச செயலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பிரதேச செயலர்கள் மூலம் கிராமசேவர்களுக்கு குறித்த அபகரிப்பு தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 3ம் திகதிவரை அபகரிக்கப்படவுள்ள காணிகளில் அபகரிப்பிற்கான அறிவித்தல்கள் பிரதேச செயலகங்களினாலும், கிராமசேவகர்களினாலும் ஒட்டப்படவுள்ளதாகவும். இதன்மூலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகள் நிரந்தரமாகவே படையினருக்கு பறித்து வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே வலி. வடக்கில் காணிகள் மற்றும் மக்களுடைய சொத்துக்கள் பற்றிய விபரங்களை படையினருக்காக, பிரதேச செயலகங்கள் சேகரித்தக் கொண்டிருக்கும் நிலையில், காணிகளை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் அல்லது மக்களிடமிருந்து பறித்தெடுக்கும் நடவடிக்கை படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், கிராமசேவகர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடக்கில் 5 மாவட்டங்களிலும் காணி சுவீகரிப்பு திணைக்களம் அண்மையில் திறக்கப்பட்டிருந்த நிலையில் 5 மாவட்டங்களிலும் காணி சுவீகரிப்பு கடுகதியில் நடைபெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபை முதலமைச்சர்?- தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு: சி. சிறீதரன்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 07:50.09 AM GMT ]
வட மாகாணசபை முதலமைச்சராக வரக்கூடியவர் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்க கூடியதுமான கௌரவமான தீர்வை பெற்றுக்கொடுக்க கூடிய தலைமைத்துவத்தை வழங்குபவராகவும், நேர்மையான, நீதியான ஒருவராக இருக்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என பா. உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் வரவேண்டும் என்பதை அவர்கள் கனவு காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்படும் நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடமாகாணசபை முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தங்களை பிரதி நிதித்துவப்படுத்துவர், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பவராகவும், தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
பதவியின் பொருட்டு கதிரையை அலங்கரிப்பவராகவோ, அரசாங்கத்திற்கு சார்பானவராகவோ, அல்லது உலகம் சொல்வதை செய்பவராகவோ இருப்பவரை தமிழ் மக்கள் விரும்பவில்லை.
18 வருடங்களாக இணைந்திருந்த வடகிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் வட மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என உலகம் எண்ணுகின்றது. இவ்வாறான நிலையில் முதலமைச்சராக வருபவர், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் போது தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாட்டை எடுத்துரைத்து இனப்பிரச்சினை தீர்வு எட்டுவதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் ஒருவராக இருக்க வேண்டும்.
சுயநிர்ணய உரிமை, மரபுவழி தாயகம், தமிழ் தேசியம், என்பன பேசாப்பொருளாக மாறிவருகின்றன. எனவே தமிழ் மக்களின் பாரம்பரியங்களை பேணி எங்களை நாங்களே ஆழக்கூடிய, வெளிநாட்டு நிதியை கையாள கூடிய அதிகாரம் உள்ள தீர்வு குறித்து பேசுபவராக இருக்க வேண்டும். 18வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் திவிநெகும முலம் மாகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது இருந்த முக்கிய அதிகாரங்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர தீர்வுக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கும் ஒருவராக இருப்பதும் அவசியமாகின்றது.
தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக் கூடிய அதிகாரம் உள்ள தீர்வாக, காணி, பொலிஸ், நிதி அதிகாரங்களை கையாளக்கூடியதாக நீடித்து நிலைக்கும் கௌரவமான தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்.
இத்தீர்வினால் நாடு பிளவுபடாது என சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து சிங்கள தலைவர்கள், உலகிற்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் தன்மையும் இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வுக்காக செயற்படும் நேர்மை, நீதி உள்ள ஒருவரே முதலமைச்சாரக வரவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மாறாக யார் வரவேண்டும் என்பது குறித்தெல்லாம் தமிழ் மக்கள் கனவு காணவில்லை என்றார்.



மன்னார் சொரூபம் மீதான தாக்குதல் நாட்டின் பொருளாதார நெருக்கடியை திசை மாற்றவா?- பாஸ்க்கரா
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 07:25.09 AM GMT ]
அண்மையில் மன்னார் சொரூபம் மீதான தாக்குதல் நாட்டின் மின்சார கட்டண உயர்வுக்கு பின்னரான பொருளாதார நெருக்கடியை திசைமாற்றுவதற்கான தந்திரோபாயமா என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
போர்க்கால சூழலில் நாட்டின் பொருட்களின் விலை ஏற்றம், தனிநபர் வருமான வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை போன்ற நெருக்கடியான சூழல் வரும்போது நாட்டின் போரை காரணம் காட்டி தப்பி வந்த போது சிங்கள மக்களும் அவ் பசுப்பு வார்த்தையை நம்பி போர் முடிந்த பின் தாம் செல்வ செழிப்பாக வாழ்வோம் என நம்பிய மக்களுக்கு போர் முடிந்த நான்கு வருடத்தின் பின்னரும் மேலும் மேலும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு பின்னரான பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் போது அதை தாங்கமுடியாமல் தடுமாறி தன்னிலையறியாது மக்கள் திண்டாடுகின்றனர்.
பொருட்கள் விலையேற்றத்தின் பின்னரான மக்கள் சுமையை திசைமாற்ற இப்போ ஓர் பூதாரமாக உருவாகியுள்ள மதப்போர் அரசுக்கு வரப்பிரசாதமாக உள்ளது இதனை அரசு அடக்காமல் இருப்பதற்கு காரணம் மதவாதத்தை காரணம் காட்டி விலையேற்றத்தை மூடிமறைக்கவா என கேட்க முடிகின்றது?
மேலும் சொரூபம், பள்ளிவாசல், கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்களின் சந்தேகம் வலுப்பெறும்.
போருக்கு பின்னரான காலத்தில் சமாதானம் நல்லிணக்கம் என்பதை அரசு உதட்டளவில் தெரிவித்து சமாதான சூழலை உருவாக்கும்படியும், நியாயம் வேண்டி கருத்துரைத்த தமிழ் அரசியல்வாதிகளை இராணுவத்திற்கு மட்டும் தெரிந்த இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் எனவும் இராணுவப் பெண்கள் பிரிவைப் பற்றி செய்தி வெளியிட்டார்கள் எனவும்
பொலிசார் விசாரிப்பது உரிமை கேட்போரின் வாயை மூடும்படி செய்வதுடன் உண்மைநிலையை உணர்த்தும் ஊடகங்களான உதயன், தினக்குரல், வலம்புரி, எம்.ரீ.வி நிறுவனம் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படாமை அரசின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது இது ஜனநாயக பண்புடைய நாட்டிற்கு ஏற்புடையதற்றது குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தொடர்ந்து யாழ் பொலிஸ் அதிகாரி யாழில் மேலும் மேலும் உதயன் மீதான தாக்குதலுக்கு இடம் உண்டு என தெரிவித்த கருத்து ஜனநாயக நாட்டின் பொலிசாரின் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பங்கை கேள்விக் குறியாக்குகிறது. உரியவர்கள் உடன் கைது செய்யப்படட்டு ஜனநாயகத் தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும் உலக நாடுகளுக்கு இலங்கை உத்தரவாதமளித்த தீர்வை தமிழ் பேசும் மக்களுக்கு கொடுத்து ஜக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மேலும் வெளிநாட்டு முதலீடுகள் கூடி பொருளாதார சுமை குறைவதுடன் போர்க்கு பின்னராக புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய பண, தங்கங்களை நாட்டில் அரசு முதலீடு செய்து பொருளாதார நெருக்கடியை இலகுவாக தீர்க்க வழிசெய்ய முடியும். அன்றி மேலும் மேலும் நாட்டை அதள பாதாளத்தில் இட்டு சென்றால் அண்மை காலத்தில் லிபியா, சிரியா நாட்டிற்கு ஏற்பட்ட கதியை இலங்கைக்கும் ஏற்படும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.

முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்!- சொல்கிறார் கொழும்பு அசாத் சாலி
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:50.42 AM GMT ] [ விகடன் ]
இலங்கையில் தமிழின அழிப்பை நடத்திய ராஜபக்ச அரசு, இப்போது தமிழ் முஸ்லிம்கள் மீது இனத் துவேசத்தைக் காட்டி வருகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சி​யின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.அசாத் சாலி.
சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஓப் இந்தியா நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கில் பங்கேற்க வந்தவரைச் சந்தித்தோம்.
கே: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வருகிறதே?
ப:  இலங்கையில் முதல் தாக்குதலே முஸ்லிம்கள் மீதுதான். 1915-களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
இப்போது புலிகளுடனான யுத்தத்துக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள ஒரு தர்காவை போலீஸார் முன்னிலையில் பௌத்த பிக்குகள் உடைத்தனர்.
2012-ல் தம்புள்ள எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டது. இப்போது 10-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் சிங்களவர்கள் உடைத்துள்ளதன் மூலம் தமிழ் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே தொடங்கிவிட்டனர்.
பர்தா அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்களிடம் அத்துமீறி நடக்கிறார்கள். இராணுவத்தினர் இதைக் கண்டுகொள்வது இல்லை.
1915-ல் நடந்ததுபோன்ற யுத்தம் இப்போதும் நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று, ராஜபக்ச ஆதரவு சிங்களக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயா கூறியுள்ளதன் மூலம் அவர்களின் எண்ணத்தை அறியலாம்.
இந்த யுத்தத்துக்கான ஓர் ஆரம்பமாக இலங்கையில் ஹலால் சான்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களைத் தள்ளிக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் நாங்களும் திரும்ப வேண்டியிருக்கும்.
அப்போது ஆயுதங்களைத் தூக்குவதைத் தவிர வேறுவழி இல்லை. இதைச் சொன்னதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா என்னும் பௌத்த அமைப்பு கூறியிருக்கிறது.
கே: முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
ப:  இலங்கை மீது அமெரிக்கா தீர்மானம் கொண்டு ​வந்த போது அதில் இலங்கையின் தமிழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி சர்வதேச சபைக்கு மனு கொடுத்துள்ளேன்.
மேலும் இலங்கைக்கு ஆதர​வாக செயல்பட்ட எட்டு முஸ்லிம் நாடுகள் உட்பட 24 நாடுகளின் தூதர்களைச் சந்தித்தும் சிறுபான்மை​யினர் பாதுகாப்புக்காக சர்வதேச சபையில் பேசக் கோரியுள்ளோம்.
இந்த விவகாரத்தை உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முயல்கிறோம்.
கே: தமிழர்களும் முஸ்லிம்களும் வேறுபட்டு இருப்பதாக முன்பு தகவல் வந்தது. இப்போது நிலைமை எப்படி உள்ளது?
ப:  புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து முன்பு முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். அதில் இருந்து முஸ்லிம் அமைப்புகள் வேறுபட ஆரம்பித்​தன. புலிகள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. முஸ்லிம்​களை அவர்கள் அரவணைத்து இருந்தால், நிலைமை வேறு மாதிரியாகி இருக்கும். சில வாய்ப்புகளை பிரபாகரன் தவறவிட்டுவிட்டார். அது, ராஜபக்சவின் குடும்பத்துக்குத்தான் பயனளித்தது!
கே: ராஜபக்சவின் செயல்பாடுகள்..?
ப:  புலிகளை வென்று விட்டோம் என்பதே அவரது பிரகடனமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாத ராஜபக்ச குடும்பம் இன்று ஆசியாவிலேயே வசதி​யான குடும்பமாக மாறி இருக்கிறது.
வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டிலும் பெட்ரோல் பங்குகளில் வேலைசெய்து கொண்டிருந்த அவரது உறவுகள் இன்று மந்திரிகளாகி விட்டனர்.
அயல்நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறார்கள். ஊடகங்களைக் கைப்பற்றி விட்டனர். இன்றைக்கு இலங்கை​யின் அனைத்து அரசுத் துறைகளின் தலைமைப் பதவிகளிலும் ராஜபக்சவின் குடும்பத்தினர்தான் இருக்கின்றனர்.
சிங்கள மக்களுக்கான ஒரே வீரன் ராஜபக்ச​தான் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பொதுபல சேனா என்னும் அமைப்பை வழி நடத்துகிறார் கோத்தபாய.
ராஜபக்ச சீனியர் பிரசிடென்ட்டாகவும் கோத்தபாய, பசில், நாமல் ஆகியோர் பிரசிடென்ட் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் சொத்துபத்துக்களை அபகரிப்பது நாமல் ராஜபக்சவின் வேலை.
அரசின் டெண்டர்களை எடுத்து கமிஷன் பெற்றுக் கொள்வது பசில் ராஜபக்ச வேலை. இலங்கையைப் பௌத்த நாடாக மாற்றுவது கோத்​தபாய ராஜ​பக்ச​வின் வேலை எனப் பங்குபோட்டுக் ​கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்தத் துணிச்சலில்தான் இலங்கையில் ஒரே நபர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பொறுப்பு வகிக்க முடியும் என்பதை மாற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரலாம் என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஆனால், மூன்றாவது வருடத்தின் முடிவிலேயே தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் ராஜபக்ச இறங்கியுள்ளார்.
இப்போது அவரது கட்சி பெரும்பான்மையாக இருப்பதால் மீண்டும் அதிபர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற்று கூடவே நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தலாம் என்னும் திட்டத்தில் இருக்கிறார்.
ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் ராஜபக்சவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். இந்த இரண்டு சமூகங்களின் நம்பிக்கையை அவரால் பெறவே முடியாது!

Geen opmerkingen:

Een reactie posten