தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு


பொது பல சேனாவுக்கு அமெரிக்காவில் விகாரை நிர்வாகம் கடும் எதிர்ப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 04:54.50 AM GMT ]
வெளிநாடுகளிலும் தமது அமைப்பைப் பரப்பிப் பலப்படுத்தும் நோக்குடன் அமெரிக்கா சென்றுள்ள பொது பல சேனா அமைப்புக்கு அங்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் தங்கி இருக்கும், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விகாரையின் நிர்வாகமே இந்த எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.
அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு விகாரையின் தலைமைப் பிக்குவிடமும் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
விகாராதிபதி வண. சுமண தேரரின் நடவடிக்கையால் நாம் பெரிதும் குழப்பமடைந்துள்ளதுடன் விசனமும் அடைந்துள்ளோம்.
விகாரை நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்காமல் சுமண தேரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
விகாராதிபதியை சந்தித்த ஆலய நிர்வாகம், பொது பல சேனா பிரதிநிதிகளை விகாரையில் தங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களுடன் சேர்ந்து போதி பூஜை நடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம் என விகாரை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் சிறிரட்ண விகாரை பொது பல சேனாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றும் நிர்வாகம் கூறுகின்றது.
விகாரை வளாகம், வெறுப்பை வளர்ப்பதற்கும், தீவிரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படக்கூடாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு அடுத்த வருடத்துடன் நிறைவு!– யாழ். இந்தியத் துணைத் தூதுவர்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 05:20.40 AM GMT ]
வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் பாதை புனரமைப்புப் பணியில் கிளிநொச்சி வரைக்குமான புனரமைப்பு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முழுமையாக நிறைவடையுமென யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்
காங்கேசன்துறை வரையான புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே நிறைவடையுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக வட பகுதிக்கான ரயில் பாதைகள் முற்று முழுதாக சேதமடைந்திருந்தன.
இந்த நிலையில் இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் அந்நாட்டின் ஐகோன் நிறுவனம் வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரையான 152 கி.மீற்றர் கொண்ட ரயில் பாதை புனரமைப்பிற்காக 430 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புனரமைப்புப் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடையுமென யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் தனியார் வர்த்தக நிலையம் தீயினால் முற்றாக எரிந்து நாசம்! 85 மில்லியன் இழப்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 05:31.03 AM GMT ]
நேற்று இரவு 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளிநொச்சியின் பிரபல வர்த்தக நிலையங்களில் ஒன்றான குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. 
இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஆறுதலையும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று திங்கட்கிழமை இரவு பதினொரு மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதாக காவலாளி உரிமையாளரிடம் அறிவித்தமையினையடுத்து உரிமையாளரினால் உடனடியாக வர்த்தக நிலையம் திறக்கப்பட்ட போதும் தீ வர்த்தக நிலையத்தினை முழுமையாக ஆக்கிரமித்தமையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு கொக்காவிலிருந்து விரைந்து சென்ற இராணுவ தீயணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்தும் தீயணைப்பு படைப் பிரிவினரும் வருகை தந்து கடுமையாக முயற்சித்தும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வர்த்தக நிலையம் எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது.
ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான ஆடை, காலணிகள், அழகு சாதனப் பொருட்கள், இலத்திரனியல் சாமான்கள்,  பலசரக்கு பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களும் உள்ளடங்கிய தனியார் வர்த்தக நிலையமே மேற்படி அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது பொருட்கள் கட்டடங்கள் உள்ளடங்கலாக 85 மில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளரான கணபதிபிள்ளை ஆனந்தவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 06:33.39 AM GMT ]
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடானது இளவாலைப் பொலிஸ் நிலையத்திலும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
வெளிநாடு செல்ல இருந்த இவரை யாரும் பணத்திற்காக கடத்தியிருக்கக் கூடும் என தாம் சந்தேகிப்பதாக காணாமல் போனவரின் மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இம் முறைப்பாட்டை அடுத்து இளவாலைப் பொலிஸார் காணாமல் பேனவரைத் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 06:24.13 AM GMT ]
இலங்கை மனித உரிமை நிலைமைகள் 2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை அத்துடன் கடந்த ஆண்டில் பல பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கருத்து சுதந்திர முடக்கம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு எதிராக செயற்படல், ஊடக சுதந்திர முடக்கம் போன்றன தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் 2012ம் ஆண்டிலும் நீடித்ததாக பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே மனித உரிமை மேம்பாடு, ஜனநயாகம் போன்றவற்றில் பொதுநலவாய அமைப்புக்களின் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்துவதாக பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten