இலங்கைக்கு தற்போது வருவதற்கான 'தகைமைகள்' இல்லை என்ற காரணத்தினாலேயே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இணையதளம் மூலம் வீசாவுக்கான முன் அனுமதி பெற்றவர்கள் நாட்டுக்குள் வருவதற்கான தகைமையைக் கொண்டிருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்கின்ற வழக்கத்தின்படியே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் டப்.ஏ. சூலானந்த பெரேரா பிபிசியிடம் தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நால்வர் இணையதளம் மூலம் பெற்றுக்கொண்டிருந்தது முழுமையான வீசா அனுமதி இல்லை என்றும் விமான நிலையத்தில் இறங்கிய பின் வீசா பெறுவதற்கான முன் அனுமதியே அது என்றும் அதனை ரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் நன்மை கருதி பல காரணங்களுக்காக நாட்டுக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியை ரத்து செய்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது என்றும் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அவ்வாறான காரணங்களை விளக்கமாக பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
சர்வதேச சட்டத்தரணிகள் விசனம்
இதேவேளை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வீசா அனுமதி மறுக்கப்பட்டதால் இலங்கைக்குச் செல்லவிருந்த தமது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருக்கிறது.
இலங்கையில் சட்டம் எந்தளவுக்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது மற்றும் நீதித்துறை எந்தளவுக்கு சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலைமை உள்ளது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக சர்வதேச சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் பெப்ரவரி 1-ம் திகதியிலிருந்து 10ம் திகதிக்குள்ளான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு செல்லவிருந்தனர்.
ஆனால் வீசா அனுமதி மறுக்கப்பட்டதால் தமது பயணத்தை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினை தொடர்பான தமது விசனத்தை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திடம் வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இலங்கையில் சிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நடைமுறையில் ஏதாவது முறைகேடுகள் நடந்துள்ளனவா என்று ஆராய்வதற்காகவே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten