தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 februari 2013

கொடுமையின் உச்சமே தமிழ் இனத்துக்கு கிடைத்த மிச்சம்!



கொடுமையின் உச்சத்தையே கண்ணால் கண்டுவிட்ட சோகத்தில் இன்று உலகத் தமிழினம் மூழ்கிக் கிடக்கிறது.
மதத்தின் பெயரால் வாள் வீச்சில் தலைசீவிக் கொல்லப்பட்ட றிசானா என்ற சிறுமியின் கொலையை கண்ணால் கண்டு துடித்த இந்த உலகம், அதன் தவிப்பு ஆறுமுன்னே, நான்கு வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற பன்னிரண்டே வயதான பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலைக்கான சாட்சியம் இன்று படமாக வெளிவந்து உலகையே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மனதையே கலங்கவைக்கும் கொலைக்களக் காட்சிகள் படமாக வெளிவந்துள்ளன. புலிகளின் தலைவரது மகன் என்ற பார்வைக்கப்பால், அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்க்கும் எந்த ஒரு மனிதனின் மனதிலும் அவன் கொல்லப்பட்டதன் சோக நிழல் துயரமாகவே படிவதை காணமுடிகிறது.
தமிழனை வென்றுவிட்டதாக கொண்டாடும் சிங்களவன்கூட சூடுபட்டுக் கிடக்கும் அந்தச் சிறுவனின் உடம்பை சன்னங்கள் துளைத்திருக்கும் பரிதாபக் காட்சி கண்டு ஒரு கணமேனும் தமது இனவாதத்தின் கொடுமை பற்றி சிந்திக்கவே செய்வான்.
பாலச்சந்திரன் சுடுபட்டுக் கிடந்த காட்சி ஏற்கனவே படமாக வெளிவந்திருந்தபோதும், போரின்போது பரிமாறப்பட்ட சுடுகலனால் ஏற்பட்ட மரணமோ? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கவே செய்தது. ஆனாலும் நெருக்கமான தூரத்தில் இருந்து சுடப்பட்ட தடயம் பாலச்சந்திரனின் உடலில் இருந்ததால் அது திட்டமிட்டே செய்யப்பட்ட கொலை என்று அன்றே சனல்-4 சொல்லியிருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் பாலச்சந்திரனின் மரணமும் அதில் ஒன்றாக கருதப்பட்டு, அப்போது அது துயரோடு துயராக அமுங்கிப்போனது. ஆனால் இப்போது ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல்’ இலங்கை அரச படைகள் செய்த கொடூரத்தின் சில காட்சிகள் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
குண்டுகளால் துளைக்கப்பட்டு பாலச்சந்திரன் மரணமடைந்ததாக முன்பு வெளிவந்த படங்களை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்ததை விடவும், அவன் மரணமாவதற்கு முன் உயிரோடு இருந்த நிலையில் எடுக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படங்கள்தான் அனைவரது மனதையும் வதைக்கிறது. அந்த பிஞ்சு முகத்தில் தெரியும் மழலைத்தனம், வெகுளித்தனம் எதுவுமே அந்தக் கொடியவர்களின் பார்வைக்கு தெரியாமலே போய்விட்டது.
கிடாய் ஆட்டை இறைச்சிக்காக கொல்வவதற்கு முன் அதற்கு முருக்கங்குளை கொடுப்பார்களாம். அதுபோலத்தான் பாலச்சந்திரனுக்கும் எதையோ சாப்பிடக் கொடுத்துவிட்டு, பாவிகள் அவனை சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
தனக்கு நடக்கப்போவது எதையுமே அறியாமல் அந்தப் பாலகன் கொடியவர்கள் கொடுத்ததை கொறித்தபடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி இருந்திருக்கிறன். எவ்வளவு கொடுமை! ஒரு பிஞ்சு உயிரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொல்வதற்கு மனம் வந்ததே இவர்களுக்கு.
குந்த வைத்து, குனிய வைத்து ரிசானாவின் தலையை வெட்டிய சவுதி அரசுக்கும், பங்கருக்குள் இருக்கவைத்து, எதையோ தின்னக் கொடுத்து, நேருக்கு நேர்நின்று ஒரு பாலகனை சுட்டுக்கொலவதற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?
இலங்கைப் படைகளிடம் சரணடைந்த புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸ் அவர்கள் இராணுவத்தால் விசாரிக்கப்படும் காட்சிகளும், அதன் பின் அவர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் காட்சிகளும் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
அது வெளிவந்த காலகட்டத்தில் இலங்கை அரசுக்கும், படைகளுக்கும்; எதிரான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் நீதிமன்றங்களில்கூட பதிவு செய்யப்பட்டன. ஆனால் இராஜதந்திர நடைமுறைகளின் மூலம் அவை தவிர்க்கப்பட்டன.
ரமேஸ் அவர்கள் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டது போலவே பாலச்சந்திரனும் படுகொலை செய்யப்பட்டதானது, அரச படைகளின் இனவாத முகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
தமக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராடிய ஒருவரையும், எதுவுமே அறியாத ஒரு அப்பாவிச் சிறுவனையும் இரக்கமே இல்லாமல் ஒரே விதமாக இலங்கைப் படைகள் கொலை செய்திருப்பதிலிருந்தே அவர்களது இன அழிப்பின் கொடூரம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதே எமது பார்வையாக உள்ளது.
இன்று வெளிவந்த கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இதயம்வரை பாயும்வகையில் அமைந்துள்ளன. “பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள். மிருகம்கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்கும்.
எப்படித்தான் மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை இராணுவத்துக்கு! மரணம் நெருங்கும்போது என்னதான் நினைத்திருப்பானோ அந்த கொலைக்களத்து குலக்கொழுந்து? உன் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலன்றோ! – கண்ணீரை வரவழைக்கும் கவிஞனின் ஒருசில வரிகள் இவை.
அந்த வரிகளையே பாலச்சந்திரனுக்கு எமது காணிக்கை ஆக்குகிறோம். 

Geen opmerkingen:

Een reactie posten