இலங்கையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தங்கியிருந்த புனர்வாழ்வு மையத்தைப் பார்வையிட, சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழுவினருக்கு, இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான விடுதலைப் புலி போராளிகள், அரச படைகளிடம் சரணடைந்தனர்.
இந்த போரின் போது, போர் குற்றம் நடந்ததாக, ஐ.நா., குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின.
இறுதி கட்டப் போரின் போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்பட்ட, முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இது தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கை சென்று நிலைமையை அறிய முற்பட்ட போது, அதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தது.
இதற்கிடையே, அடுத்த மாதம், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா, தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க, தற்போது, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் புனர்வாழ்வு முகாம்களை பார்வையிட, இலங்கை அரசு அனுமதித்துள்ளது.
இது குறித்து, இலங்கை புனர்வாழ்வுத் துறை ஆணையர் தர்ஷனா கூறியதாவது:
சர்வதேச செஞ்சிலுவை கழகத்தைச் சேர்ந்த குழுவினர், கடந்த 22ம் தேதி, மறந்தமடு பகுதியில் உள்ள புனர்வாழ்வு முகாமை, மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தனர்.
அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகளை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.
இங்கு, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் அடைக்கப்பட்டிருந்தனர். பலருக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்த கடனை பயன்படுத்தி, பலர் பல்வேறு தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது, சிலர் மட்டுமே இந்த முகாமில் தங்கியுள்ளனர். இவ்வாறு, தர்ஷனா கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten