உள்நாட்டு அரசியல் சூழ்நிலைமைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விளங்கிக் கொள்ளவில்லை என சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனுக்குக் காணப்படும் ஏகபோக அதிகாரங்கள் ஏனையோருக்கும் இருக்கும் என அவர் எதிர்பார்க்கின்றார்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்நோக்கி வரும் அரசியல் நெருக்கடி நிலைமைகளை பிரபாகரன் புரிந்து கொள்ளவில்லை.' என தனபால தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால ஆகியோருடன் அமெரக்கத் தூதரக அதிகாரிகள் நடத்திய சந்திப்பின் அடிப்படையில் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டட் இந்த குறிப்பினை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறைகளை கண்டித்து ஆகஸ்ட் 19ம் திகதி அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்கு நன்றி தெரிவிப்பதாக தனபால தெரிவித்துள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி சந்திரிகாவின் தனிப்பட்ட விருப்பமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் நோக்கி மக்களை நகர்த்தும் பணி அரசியல் பொறிமுறைமையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் துரித கதியில் சமாதான பேச்சுவார்த்தைக்கு திரும்பாவிட்டால், அதனை ஜே.வி.பி பயன்படுத்திக் கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களை ஜே.வி.பி.யினர் பயன்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும் என ஜயந்த தனபால குறிப்பிட்டுள்ளார்.
சமாதான பேச்சுக்களைத் தொடர முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten