தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர மறுக்கிறது இலங்கை அரசு: இலங்கை தமிழர்கள் கவலை !!


அடிப்படை வசதிகளைக் கூட இலங்கை அரசு செய்து தராமல் புறக்கணிப்பதாக கச்சதீவு திருவிழாவுக்கு வந்த இலங்கை தமிழர்கள் கவலையுடன் தெரிவித்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த இலங்கை தமிழர்கள் சிலர் தங்களின் நிலை குறித்து தெரிவித்ததாவது:
இலங்கையில் வன்னி பகுதியில் வசித்து வந்த நாங்கள் கடந்த 2008ம் ஆண்டு நடந்த போரின் போது குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
வவுனியாவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் முள்வேலி முகாம்களில் இலங்கை அரசால் அடைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோம்.
பின்னர், மீள்குடியேற்றம் மூலமாக யாழ்ப்பாணம் பகுதியில் தேவன்பட்டி என்ற இடத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வசித்து வருகிறோம்.
வன்னியில் வசித்து வந்த 210 குடும்பங்களில் அனைவரும் பிரிந்து பிறகு ஒன்று சேர்ந்திருந்தாலும் தேவன்பட்டியில் வசிப்போரில் குறிப்பிட்ட (இலங்கை அரசுக்கு இரகசிய தகவல் அளிக்கும்) ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே இலங்கை அரசு உதவிகள் செய்கிறது. மற்றவர்களைப் புறக்கணிக்கிறது.
விரும்பிய இடத்துக்கு சென்று மீன்பிடித் தொழில் செய்ய அனுமதிக்கவில்லை. கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு வருவதற்குகூட இரு தினங்கள் தாமதமாகவே அரசு அனுமதியளித்தது.
தற்போது தேவன்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் தான் வசித்து வருகிறோம். இந்திய அரசு நிதிஉதவியுடன் வழங்கிய வீடுகளைக் கூட எங்களுக்கு தரவில்லை. கழிப்பறை, மின்சார வசதிகள் இல்லை. பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் வசிக்கிறோம்.
இந்திய அரசு வழங்கிய படகு என்ஜின்களைக் கூட எங்களில் பலருக்கு கொடுக்காமல் தேவன்பட்டியில் உள்ள ஒரு சில குடும்பத்துக்கே இலங்கை அரசு வழங்கியுள்ளது.
ஏற்கனவே அவர்களிடம் படகு என்ஜின்கள் இருந்தும் மீண்டும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. நாங்கள் வசிக்கும் பகுதியில் யார் பிரச்சினை செய்தாலும், அதற்கு இலங்கை தமிழர்களையே அழைத்து சென்று துன்புறுத்துவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
இரவு 6 மணிக்கு மேல் 5 பேர் சேர்ந்து கூட்டமாக நின்று பேசக்கூட அனுமதிப்பதில்லை. மீறி கூடிப்பேசினால் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று துன்புறுத்துவது தொடர்கிறது.
முக்கியமாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியேற்றம் செய்கிறது.
அங்குள்ள ஊர்களின் பெயர்களையும் சிங்களப் பெயர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten