ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது.
இலங்கையின் போர் குற்றங்களுக்கு எதிராகவும், போருக்கு பின் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றதை கண்டித்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, அந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது.
இந்நிலையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஐ.நா. குழு ஆய்வு மேற்கொண்டதில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறுவன் என்று கூட பார்க்காமல் இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றதை சில நாட்களுக்கு முன் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதை அடுத்து, உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரிக்க முடிவு செய்துள்ளன.
இலங்கையின் ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வாக்குரிமை கிடையாது என்பதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் தீர்மானத்தை ஆதரிக்க போவதாக இந்தியாவும் தெரிவித்திருப்பதால், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
http://www.tamilwin.net/show-RUmryCRaNXewz.html
Geen opmerkingen:
Een reactie posten