தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 februari 2013

அவுஸ்திரேலியா சிறிலங்காவுடன் அபாயகரமான அரசியல் விளையாட்டு?


அவுஸ்திரேலியா சிறிலங்காவுடன் அபாயகரமான அரசியல் விளையாட்டு?

சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை கோரி படகுகள் மூலம் பயணம் செய்யும் இந்நிலையில் சிறிலங்காவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமானது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி வருவதானது முட்டாள்தனமான செயலாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Guardian.co.uk இணையத்தில் அதன் செய்தியாளர் Stewart Motha எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு இது தடையங்ங காலமாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு 17,000 வரையான மக்கள் சென்றனர். இவர்களில் 6500 சிறிலங்கர்களும் உள்ளடங்குகின்றனர்.
தனது நாட்டில் படகுகள் மூலம் உள்நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்வொன்றை எட்டமுனைந்தாலும் கூட, இது அதன் மனித உரிமைச் செயற்பாட்டில் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.
சிறிலங்கர்கள் அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை கோரி படகுகள் மூலம் பயணம் செய்யும் இந்நிலையில் சிறிலங்காவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமானது இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி வருவதானது முட்டாள்தனமான செயலாக பார்க்கப்படுகிறது.
படகுகள் மூலம் தனது நாட்டுக்குள் நுழையும் மக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் புதிதல்ல. மூழ்கிக்கொண்டிருந்த படகொன்றில் இருந்த 400 வரையான அகதிகளை அவுஸ்திரேலியாவின் கொவாட் அரசாங்கம் காப்பாற்றி அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு கொண்டு வந்ததன் பின்னர், நோர்வேயின் MV Tampa என்கின்ற அந்த சரக்குக் கப்பலை முற்றுகையிடுவதற்கு இந்த அரசாங்கம் 2001ல் சிறப்பு படைகளைப் பயன்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கடற்பரப்பின் ஊடாக வேற்று நாட்டுக் கப்பல்கள் அகதிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்கான தடைவிதிக்கப்பட்டது. இதற்காக ‘Pacific solution’ அறிமுகப்படுத்தப்பட்டது. தடைவிதிக்கப்பட்ட கடற்பரப்பில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வரும் படகுகள் அங்கே இடைமறிக்கப்பட்டு அதிலுள்ள அகதிகள் நௌரு போன்ற வசதிகள் குறைவான தீவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டது. நௌரு என்கின்ற தீவில் அகதிகளை தங்கவைப்பதற்கான அனுமதி 2008ல் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவை அடையும் அகதிகளை தடுத்து வைப்பதற்கான நிரந்தர வசதிகளை தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் நௌரு தீவில் ஏற்படுத்தி வருகிறது. இதைவிட அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவு மற்றும் பப்புவா நியூகினியாவிலும் தடுப்பு முகாங்கள் அமைக்கப்படுகின்றன. பப்புவா நியுகினியாவில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள எதிர்த்து அதன் எதிர்க்கட்சி கடந்த வாரம் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் அகதிகள் அங்கு சென்றவுடன் கடுமையான முறையில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இவர்கள் பின்தங்கிய, வசதிகளற்ற பிரதேசங்களில் முதலில் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிறிலங்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் அதிகம் நுழைகின்றனர். இவர்களில் சிறிலங்கர்களே அதிகமாக உள்ளனர். அகதிக் கோரிக்கை மறுக்கப்படுவோர் பின்னர் பலவந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுள்ளது.
பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பால் பலவந்தமாக சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் சொந்த அரசாங்கத்தால் துன்புறுத்தப்படுவதை உறுதிப்படுத்தி மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. இதேபோன்று அவுஸ்திரேலியாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவோர் அங்கே துன்புறுத்தப்படுகின்றனர்.
ஐ.நா அகதிகள் சாசனத்தின் கீழ் அகதிகள் பாதுகாக்கப்படுவதற்கான அடிப்படைக் கடப்பாடுடையவர்கள் என வலியுறுத்தப்படுகின்ற போதிலும் இவர்கள் தொடர்ந்தும் அவர்களது சொந்த நாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் 6500 சிறிலங்கர்களும், இதற்கு முன்னைய ஆண்டில் அதாவது 2011ல் 211 சிறிலங்கர்களும் உள்நுழைந்தனர். 2012ல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த சிறிலங்கர்களில் 5215 பேர் தமிழர்கள் எனவும் 1027 பேர் சிங்களவர்கள் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த மாதத்தில், இந்த எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது. இந்த தளம்பல் நிலைக்கு காரணம் என்ன? இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரதிபலிப்பு என்ன?
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான அதிகாரி ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் கணிசமானளவு சிறிலங்கர்களை அனுப்பி வைப்பதாக அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்புக்கள் சந்தேகிப்பதாக இம்மாதத்தின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவானது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பற்ற, சந்தேகத்திற்கிடமான நாடான சிறிலங்காவுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது. இவ்வாறான ஒரு நாட்டை அவுஸ்திரேலியா தெரிவு செய்துள்ளது.
தனது நாட்டில் அகதித் தஞ்சம் கோரியுள்ள மக்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மிகக் கடுமையாக நடாத்துவதானது அதன் மனித உரிமை செயற்பாட்டில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது அவுஸ்திரேலியாவானது இதன் மூலம் கண்மூடித்தனமாக மனித உரிமை மீறல்களையும் தவறான இராஜதந்திரச் செயற்பாட்டையும், சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு சார் கூட்டணியையும் கொண்டுள்ளது என்பதே உண்மையாகும
கடந்த டிசம்பரில் சிறிலங்காவுக்கு பயணம் செய்த அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு கண்காணிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவானது கூட்டுப்பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த மாதம் சிறிலங்காவுக்கு வருகைதந்திருந்த அவுஸ்திரேலிய வெளியுறவுச் செயலக நிழல் அமைச்சர் யூலி பிசப், சிறிலங்காவில் இடம்பெற்று வரும் போருக்குப் பிந்திய மீளிணக்கப்பாடு மற்றும் மீள்கட்டுமான முயற்சிகளை பெரிதும் பாராட்டியிருந்தார்.
தனது நாட்டில் அகதிகள் சாசனத்தை புறக்கணித்து செயற்படும் அவுஸ்திரேலியாவானது பிறிதொரு நாட்டின் மீளிணக்கப்பாடு மற்றும் இராணுவமயமாக்கல் போன்றவற்றை பாராட்டுவதானது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது நாட்டில் அகதிகள் சாசனத்தை மதித்த செயற்பட வேண்டும் என விரும்பினால், இது இதயசுத்தியுடன் செயற்படவேண்டும். அத்துடன் வேறு நாட்டில் இராணுவமயமாக்கலை ஊக்கப்படுத்துவதானது தனக்கு அவசியமற்ற ஒன்று என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் நினைவிற் கொள்வதுடன், இது தனக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten