தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம், தமிழர்களின் அபிலாசைகளைப் பெற்றுத்தர வழிவகுக்கும்!- யோகேஸ்வரன் !


ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானமானது தமிழ் மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்புக்களையும் பெற்றுத்தர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு திராய்மடு கிருஷ்ணா விளையாட்டுக் கழகத்தின் 24வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைப் பந்தாட்ட போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்று எமது இளைஞர்கள் இந்த மைதானத்திலே கால் பந்தாட்டத்தை ஆடினார்கள். ஆனால் எதிர்வரும் பங்குனி மாதம் ஜெனீவா என்கின்ற மைதானத்திலே ஈழத் தமிழினம் என்கின்ற ஒரு பந்து இலங்கை அரசாங்கத்தினாலும் சர்வதேசத்தாலும் விளையாடப்படும் ஒரு நிலமை இன்று உருவாகியுள்ளது.
எமது நாட்டிலே கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த மனிதாபிமான நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் தீர்ப்பு கூறும் வகையில் ஜெனீவாவிலே மனித உரிமை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பாரதூரமான அநீதி நடைபெற்றிருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து தீர்ப்பு கூறும் நிலைமை எதிர்வரும் பங்குனி மாதம் உருவாகியுள்ளது.
இந்த உண்மையை அந்த அரசாங்கம் அறிந்தும் கூட எமது மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு தயாராக இல்லை.
எங்கள் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். சகல அபிவிருத்தியும் மக்களை சென்றடைய வேண்டும் எங்கள் மக்களின் வாழ்வுரிமையை சரியாக அமைத்துக் கொடுக்க வேண்டும். எமது மக்கள் அதற்காகத் தான் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டிலே எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குவதில்லை. அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளத்தான் நாங்கள் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஜெனீவாவில் கொண்டுவரப்டும் தீர்மானம் நிச்சயமாக அரசாங்கத்திற்கு எதிராகத்தான் அமையும். அதனை அறிந்து ஒரு அமைச்சருடன் அவர்கள் சார்பான குழுவை அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் ஜெனிவாவின் கொண்டுவரப்படும் தீர்வு மட்டுமே மக்களுக்கு தீர்வாக அமையாது.
எமது மக்களின் தேவைகளை இந்த அரசாங்கம் இன்னும் உணரவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை எமது மக்களுக்கு வழங்குங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYnv5.html#sthash.RfEkOaa5.dpuf

Geen opmerkingen:

Een reactie posten