[ நக்கீரன் ]
நாகரிக சமூகம் இதுவரை உருவாக்கிய அத்தனை யுத்த நியதிகளையும் எந்தத் தயக்கமும் இன்றி மீறிய கொலைகாரர்களின் குற்றத்திற்கு இன்னொரு இரத்த சாட்சியம்தான் அந்தப் புகைப்படங்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இறுதி யுத்தத்தின் போது கொடூரமாகக் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படங்களை லண்டனின் சனல்-4 தொலைக்காட்சி சென்ற ஆண்டு வெளியிட்ட போது உலகெங்கும் உள்ள தமிழர்களும் மனித உரிமையாளர்களும் ஜனநாயக சக்திகளும் உறைந்து போனார்கள்.
ஆனால் இலங்கை அரசு வழக்கம் போல நாடகமாடியது. பாலச்சந்திரன் தங்கள் பிடியில் இருந்த போது கொல்லப்படவில்லை. யுத்தத்தில் மாட்டிக்கொண்டு இறந்து போயிருக்கலாம் என்று சாதித்து வந்தது. தான் இழைத்த ஒவ்வொரு போர்க்குற்றம் தொடர்பாகவும் இதே பொய்யைத்தான் அது தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறது.
பாலச்சந்திரன் மணல் மூட்டைகளுக்கு நடுவே சட்டையில்லாமல் ஒரு லுங்கியை தோளில் போட்டுக் கொண்டு எதையோ கொறித்தபடி அமர்ந்திருக்கிறான். அந்த கண்களில் மரண பயம் இல்லை. ஏதோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போல குழப்பத்துடன் இருக்கிறது அவனது முகம். இன்னொரு படத்தில் யாரையோ எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறான்.
மூன்றாவது படத்தில் குண்டடியுடன் பிணமாகக் கிடக்கிறான். இந்தப் படம் ஏற்கனவே வெளிவந்ததுதான். ஆனால் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முந்தைய அந்த இரண்டு படங்களும்தான் அவன் மேல் நிகழ்த்தப்பட்ட பச்சை இரத்தப் படுகொலையினை இந்த உலகத்திற்கு உரத்து அறிவிக்கின்றன.
அந்தப் பாலகன் பிடிக்கப்பட்டு மறைவிடத்தில் வைத்திருந்து பிஸ்கட்டும் தண்ணீரும் கொடுத்து பிறகு அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
சனல்-4 தொலைக்காட்சியில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான “"சாட்சிகளற்ற போர் : இலங்கையின் கொலைக்களங்கள்'’என்ற ஆவணப்படத்தை சென்ற ஆண்டு வெளியிட்ட கெலம் மெக்ரே அடுத்த மாதம் வெளியிட உள்ள "போர் நிறுத்தப் பிரதேசம்: இலங்கையின் கொலைக்களங்கள்'’ என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டமாகத்தான் இந்தப் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
சனல்-4 தொலைக்காட்சியில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான “"சாட்சிகளற்ற போர் : இலங்கையின் கொலைக்களங்கள்'’என்ற ஆவணப்படத்தை சென்ற ஆண்டு வெளியிட்ட கெலம் மெக்ரே அடுத்த மாதம் வெளியிட உள்ள "போர் நிறுத்தப் பிரதேசம்: இலங்கையின் கொலைக்களங்கள்'’ என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டமாகத்தான் இந்தப் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் கிடைக்கப் பெற்ற படங்களை ஆராய்ந்த புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் உடலில் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்திருக்கிறார்.
பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளதாகவும், அந்தக் காயங்களைச் சுற்றி எரிகாயம் உள்ளதால் அவர் மிக நெருக்கமாக வைத்தே சுடப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது. அதாவது பாலச்சந்திரன் கைநீட்டினால் தொடக்கூடிய தூரத்தில் இருந்திருக்கின்றன துப்பாக்கிகள். முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாலச்சந்திரன் கீழே விழுந்துள்ளான் என்றும் அதன் பின்னர் அவன் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளான் என்றும் அவர் தெரிவித்திருந்ததுடன், அந்தப் படங்களின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
பாலச்சந்திரன், உயிருடன் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றனர். இறுதியாக எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், “அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்“ என்கின்றனர்.
தற்போது, கிடைக்கப் பெற்றுள்ள நான்கு புதிய டிஜிட்டல் படங்களும் ஒரே நாளில், ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்கப்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை ஆராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
சரணடைந்தவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் பொய்யை அம்பலப்படுத்த இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண் டும்? பாலச்சந்திரன் மட்டுமல்ல பிரபாகரனின் மரணம் தொடர் பாக இலங்கை அரசு இதேபோன்ற ஒரு கதையைத்தான் சொன்னது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருக்கட்டும். பிரபாகரனின் உடல் என்று அவர்கள் காட்டிய சடலம் இதேபோன்ற பல கேள்விகளை எழுப்பியது.
2009, மே 19 ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியில் கண்டெடுத்ததாக அறிவித்தது. மே 18ஆம் தேதி இரவு புலிகள் தங்கள் மறைவிடத்திலிருந்து தப்பிக்க முயன்ற போது இராணுவம் அவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அடுத்த நாள் அவரது உடலை கண்டெடுத்ததாகவும் கதை அளந்தது.
2009, மே 19 ஆம் தேதி இலங்கை இராணுவம் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியில் கண்டெடுத்ததாக அறிவித்தது. மே 18ஆம் தேதி இரவு புலிகள் தங்கள் மறைவிடத்திலிருந்து தப்பிக்க முயன்ற போது இராணுவம் அவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அடுத்த நாள் அவரது உடலை கண்டெடுத்ததாகவும் கதை அளந்தது.
ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்த உடலின் தலையிலிருந்து அப்போதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலையில் அருகில் இருந்து சுட்டதாலும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாலும் கபாலம் நொறுக்கப்பட்டு ஒன்று சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த கண்கள் ஒரு கொடூரமான சித்திரவதையைக் கண்டு உறைந்து போயிருப்பதை நீங்கள் அந்தப் புகைப்படத்தில் காணலாம். எல்லாவற்றையும்விட அந்தத் தலை நீர்ப்பரப்பில் இரத்தம் வழியக் கிடந்தது. காயத்திலிருந்து வடியும் இரத்தம் மனித உடலிலிருந்து இருபது நிமிடங்களில் நின்றுவிடும்.
இறந்து கிடப்பவர் முந்தைய இரவில் கொல்லப்பட்டிருந்தால் அடுத்த நாள் அந்த உடல் கண்டெடுக்கப்படும் வரை எப்படி இரத்தம் வழிந்து கொண்டிருக்கும்? அதுவும் தண்ணீரில் கிடக்கும் உடலின் இரத்தப்பெருக்கை அந்தத் தண்ணீர் கழுவக் கூட செய்யாதா? தன்னிடம் கைதியாக இருந்த ஒருவரை சித்திரவதை செய்து அடித்து மிக அருகில் இருந்து சுட்டுக்கொன்றுவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அதை வீடியோவும் எடுத்துக்கொண்டு பிறகு பிரபாகரனை சண்டையில் கொன்று விட்டதாக இந்த உலகத்திற்கு இலங்கை இராணுவம் அறிவித்தது.
சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் இப்படிக் கொலை செய்யப்பட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு விட்டன. இறுதி யுத்தத்தின்போது போராளிகள், அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்ல, ஐ.நா.வின் புள்ளிவிபரப்படியே கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பொதுமக்கள் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். உண்மையான எண்ணிக்கை எழுபதாயிரத்துக்கும் அதிகம்.
பாலச்சந்திரனும் அப்படித்தான் கொல்லப்பட்டிருக்கிறான். ஒரு குழந்தை என்ற கருணைகூட காட்டப்படவில்லை. உலக யுத்த நெறிமுறைகளில் எந்த விதியும் பின்பற்றப்படவில்லை. அந்த வகையில் மிகக் கொடூரமான போர்க்குற்றங்களை இழைத்த ஹிட்லரின் நாஜிப்படைகளுக்கு நிகரான புகழைப் பெற்றுவிட்டது ராஜபக்சவின் சிங்களப் படைகள்.
ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதிகளும் சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்தி உடனடியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கு இன்னும் எவ்வளவு படுகொலைக் காட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை.
இந்த மாதம் 25ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 22ம் தேதி வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பியும் உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடிவு செய்துள்ளது சனல்-4.
அனுபவம் வாய்ந்த ஆவணப்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. துணிச்சலான, பெரும்பாலும் இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகையாளர்களின் கடும் உழைப்பின் வெளிப்பாடாக இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளதாக சனல் 4-ன் இயக்குனர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
தமது முந்தைய ஆவணப்படத்திற்கு "சாட்சிகளற்ற போர்' என்று பெயரிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய மெக்ரே, “"நடந்த போர்க்குற்றங்களுக்கு சாட்சிகள் இன்னமும் உள்ளன. இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.
இறந்தவர்கள், இலங்கை இராணுவ வீரர்கள் ஆகியோரின் கைவிடப்பட்ட மொபைல் போன்கள், கமராக்கள் என ஆயிரக்கணக்கான ஆவணங்களும் சாட்சிகளும் சேகரிக்கப்பட்டு அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த அனைத்து வல்லுனர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன'’என்று மெக்ரே கூறியிருக்கிறார்.
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் அதிகாரத்தில் நீடிப்ப தாகச் சாடும் மெக்ரே மேலும் அவர்கள் இந்த ஆவணங்கள் அனைத்தும் பொய் என்று மறுக்க எந்த அளவுக்கும் முயற்சி செய்வார்கள் என்கிறார். இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரோன் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை அங்கே வலுத்து வருகிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தனது போர்க் குற்றங்கள் தொடர்பாகக் கொண்டுவரப்படும் தீர்மானங்களை இலங்கை அரசு குப்பையில் போட்டு மிதித்து வருகிறது என்பதுதான் உண்மை. இந்தியா இலங்கைக்கு எதிராக சென்ற ஆண்டு அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக வாக்களித்த போதும் அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான எல்லா வேலைகளையும் அது செய்தது.
சர்வதேச விசாரணைக்குப் பதில் இலங்கை அரசாங்கமே போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவரை எந்த முறையான விசாரணையும் நடைபெறவில்லை.
LLRC - (Lessons Learnt & Reconciliation Committee)-ன் கீழ் செயல்படும் இராணுவ நீதிமன்றம், இலங்கை அரசால் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளி தன்னைத்தானே விசாரித்து தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொள்வது என்ற விசித்திரமான சலுகை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது போர்க்குற்ற விசாரணை என்பதையே அர்த்தமிழக்கச் செய்துவிட்டது. "இலங்கையினுடைய நீதித்துறை மிகவும் சிதிலமடைந்திருக்கிறது' என்று நீதிபதி பகவதி, LLRC-யின் தலைவர் சித்தரஞ்சன் டி சில்வாவின் செயல்பாடுகளை வைத்து புகார் கூறினார்.
இலங்கையில் யுத்தம் இன்னும் நிற்கவில்லை. கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. தமிழ் இளைஞர்கள் காணாமல் போவது நிற்கவில்லை. தமிழ் பகுதிகளில் கடுமையான சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உண்மை பேசும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.
இலங்கை அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தின் மீதும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.நா. சபையையே போர்க்காலத்தில் தனது போர்க்குற்றத்தின் பங்காளியாக்கிக்கொண்ட ராஜபக்ச ஒருபோதும் நீதியான விசாரணையை நடத்தமாட்டார்.
இதற்கிடையில் ICEP (International Crimes Evidence Project) என்னும் அவுஸ்திரேலிய அமைப்பு இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற அகதிகளிடமிருந்து போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டியுள்ளது.
காமன்வெல்த் சட்டப்படி இலங்கை மீது வழக்கு தொடுக்கவும் ஆஸ்திரேலிய அரசு முயன்று வருகின்றது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் பார்வையை திருப்ப போராடிக் கொண்டிருக்கின்றனர்.
போர்க்குற்றங்களுக்காக சமீப காலங்களில் நெஞ் சில் ஈரமற்ற பல கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மே 2012-ல் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு (Charles Taylor) போர்க் குற்றத்திற்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
டிசம்பர் 2012-ல் போஸ்னியப் படைத்தளபதி டோலிமிர்க்கு (Tolimir) இனப்படுகொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சாட் (Chad) தேசத்தின் சர்வாதிகாரி ஹாப்ரே (Habre) மீது செனகல் நாட்டில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு சந்தித்த தடைகளும், தற்பொழுது நடைபெறும் விசாரணையும் உலகிற்கு முன்மாதிரி. ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்க வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது ராஜபக்ச நின்றுகொண்டிருக்கிறார். அவரும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய அரசாங்கம் மனிதகுல வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையாளன் ஒருவனுக்கு சாதகமாக ஆடிவரும் நாடகங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி ராஜபக்ச நடத்தும் கண்ணாமூச்சிக்கு இனியும் இந்திய அரசு இணங்கிப் போனால் அது நீண்டகால நோக்கில் இந்தியாவின் நலன்களை கைவிடுவதாக இருக்கும்.
உலக நாடுகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் இலங்கை தனது இராணுவ வலிமையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒரு சிறிய நாட்டில் இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட இராணுவம் இருப்பது தெற்காசியப் பிராந்தியத்தின் நல்லுறவுக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
இலங்கையின் மீதான சர்வதேச பொருளாதார தடையும் போர்க்குற்ற விசா ரணையும் இல்லாமல் கொல் லப்பட்ட பல்லாயிரம் மக்க ளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இந்தியா அழுத்தம் கொடுக்காமல் இலங்கைக்கு எதிரான எந்த வலுவான நிர்பந்தத்தையும் கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமல்ல. இந்த விஷயத்தில் இந்தியா ஒரு மோசமான வெளியுறவு கொள்கையையே கையாண்டு வருகிறது.
தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தினால் ஒழிய தற்போதைய அரசாங்கம் ஈழத் தமிழர்களின் நியாயத்திற்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காது. நாம் என்ன செய்யப் போகிறோம்? பாலச்சந்திரனின் களங்கமற்ற கண்களின் கேள்விகளுக்கு நாம் அரசியல் ரீதியாக அளிக்கப் போகும் பதில் என்ன?
சனல்-4 இயக்குனர் கெலம் மெக்ரே "இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை அந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்'’என்று எச்சரிக்கிறார்.
மீண்டும் ஒரு யுத்தம் தொடங்கினால் அதற்கு ராஜபக்ச மட்டுமல்ல... இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை அனைவருமே பொறுப்பு.
http://news.lankasri.com/show-RUmryCRXNXfu4.html
Geen opmerkingen:
Een reactie posten