தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 februari 2013

பாலச்சந்திரன் பற்றி “உண்மை கூறுவது அவசியம்’


பாலச்சந்திரன் பற்றி “உண்மை கூறுவது அவசியம்’

திட்டவட்டமாக மறுப்பதால் விடயங்கள் மறைந்து போய்விடாது என்ற எண்ணப்பாட்டை இந்தியா கொழும்புக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை உண்மையைக் கூறுவது அவசியம் என்ற தலைப்பில் “இந்து’ ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ;
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி நாட்களில் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகத் தென்படும் 12 வயதுடைய பாலச்சந்திரன் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் பரந்தளவில் மன வலியையும் விசனத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளமை புரிந்து கொள்ளக் கூடிய விடயமாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனின் மற்றொரு புகைப்படம் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்தது. அவனின் மார்பில் துவக்கு சூட்டு காயங்களுடன் அப்படம் காணப்பட்டது. மோதலுக்கு இடையில் சிக்குண்டதால் பையன் இறந்ததாக இலங்கையின் விளக்கம் அமைந்திருந்தது. அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாகக் காணப்பட்டது. ஆனால் சனல் 4 தொலைக்காட்சி பெற்றுக் கொண்டுள்ள புகைப்படங்கள், மண் மூடை அடுக்கப்பட்ட இராணுவப் பதுங்கு குழிக்குள் பாலச்சந்திரன் அமர்ந்திருப்பதைக் காண்பிக்கின்றன. அந்தப் பையனின் வாழ்வு எவ்வாறு முடிவுக்கு வந்தது? என்பது பற்றி முற்றிலும் வேறுபட்ட கதையைக் கூறுவதாக இப் புகைப்படங்கள் காணப்படுகின்றன. அத்துடன் இலங்கைக்கு எதிரான ஏனைய போர்க் குற்றச்சாட்டுகளைக் கோடிட்டுக் காட்டும் ஒன்றாகவும் இது அமைந்திருக்கிறது.
இந்தப் புகைப்படங்களை இட்டுக்கட்டிய பொய் என்றும் திரிபுபடுத்தப்பட்டவை எனவும் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டவையெனவும் கொழும்பு நிராகரித்திருக்கிறது. அத்துடன் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது நாட்டுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளது. இது அவ்வாறானதொன்று என்றால் பாலச்சந்திரன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பாக உடனடியாக நேர்மையானதும் நம்பகரமானதுமான விசாரணையை ஆரம்பித்து கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்துவது இலங்கையின் சொந்த நலன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
புகைப்படங்களில் காண்பிக்கப்பட்டிருப்பது போன்று இந்த இளம் பையன் உண்மையிலேயே இராணுவத்தின் பதுங்கு குழியில் இருந்திருந்தால் அவன் சிறைப் பிடிக்கப்பட்ட தொடர் நிகழ்வுகளை மிகச் சுலபமாக நிலை நிறுத்த முடியும். இந்தக் குரூரக் கொலைக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு முன்னுதாரணமான தண்டனையை வழங்க வேண்டும். இந்தப் புகைப் படங்கள் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்தாராய்ந்ததாகவும் மூன்று புகைப்படங்களும் ஒரே கமராவினால் எடுக்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தனது பக்க நியாயமாக சனல் 4 கூறுகிறது. அத்துடன் இந்தப் புகைப்படங்களை வெளியிடுவதற்கான காரணத்தையும் சனல் 4 வெளிப்படையாகக் கூறியுள்ளது.
2009 யுத்தத்தின் இறுதி வாரங்களின்போது ஏற்பட்டிருந்த பொது மக்கள் மரணங்களுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதற்கு அதிக பட்ச சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவதற்கு புதிய ஆதாரமாக அடுத்த மாதம் இந்த ஆவணம் அமையுமென சனல் 4 வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறது.
ராஜபக்ஷவின் அரசாங்கம் முதலில் “பொது மக்கள் இழப்புகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தது. பின்னர் பொது மக்கள் சிலர் இறந்ததை ஏற்றுக் கொள்வதற்கு மூன்று வருடங்கள் எடுத்தது. ஆயினும் எவ்வளவு பேர் மரணமடைந்தனர் என்பதும் எத்தகைய சூழ்நிலையில் அவை சம்பவித்தன என்பதும் இப்போதும் சர்ச்சைக்குரிய விவகாரமாகவே இருந்து வருகிறது. தான் நியமித்திருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012 தீர்மானத்தில் இது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயம் தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் குறித்து அரசாங்கத்தின் இணையத்தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் முன்னேற்றத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை.
கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு முன்னர் அந்தத் தீர்மானத்தின் கனதியைக் குறைப்பதற்கான செயற்பாட்டை புதுடில்லி மேற்கொண்டது. புதிய புகைப்படங்களின் “உண்மைத் தன்மை‘ குறித்து நிரூபிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்று ஆரம்பகட்ட நிலைப்பாட்டை புதுடில்லி வெளிப்படுத்தியிருந்தது.
இதிலும் பார்க்க புதிய புகைப்படங்கள் தொடர்பாக அதிகளவுக்கு நன்றாக சிந்திக்கப்பட்ட பதிலை புதுடில்லி வழங்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் பாரம்பரியமாக சிறப்பான பிணைப்புகள் இருந்து வருகின்ற போதிலும், தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஜூலையில் இடம்பெறவிருக்கும் ஆசிய தடகளப் போட்டியை இரத்து செய்வதென்ற மாநில அரசின் தீர்மானமும் இந்த விவகாரமானது பின்னடைவான நிலைமைக்கு இட்டுச் சென்றும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
நிலைமை மோசமடைவதற்கு முன்னராக , இந்த விடயத்தில் எது சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கின்றதோ, அந்தப் பக்கத்தில்தான் நிற்கின்றது என்பது தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சித் திட்டத்தை துரிதமாகவும் நம்பிக்கையுடனும் தயாரிக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. அத்துடன் உறுதியாக மறுப்பதனால் இந்த விவகாரம் மறைந்து போய் விடாது என்ற எண்ணப்பாட்டை கொழும்புக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகத் தென்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten