தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 februari 2013

சிறிதரன் பா.உ. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்தமையே அவர் இலக்கு வைக்கப்படுவதற்கு காரணம்- ரணில் !


பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை பாராளுமன்றத்தில் ஒலித்தமையே அவர் செய்த பிரதான பெரும் குற்றமாக உள்ளது. இதுதான் அவர் இலக்கு வைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளையும், படையினரின் காணி அபகரிப்பால் இருக்க இடமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
இன்று நாங்கள் எதிர்க்கட்சி எதிர்ப்பியக்கம் என்ற வகையிலே கிளிநொச்சிக்கு வந்திருப்பது இங்கு வாழுகின்ற மக்களாகிய உங்களுடைய துன்ப துயரங்களை அறிவதற்கும், சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினருடைய நெருக்கடியை உணர்வதற்குமே.
நான் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேடிப் பார்த்திருக்கின்றேன். அதேபோல இங்கு அவருடைய அலுவலகத்தின் உள்ளேயும் சென்று நேரடியாகப் பார்த்தேன்.
சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் செய்திருக்கும் மிகப்பெரிய குற்றம் என்னவென்றால் மக்கள் சார்பான உங்கள் குரலை பாராளுமன்றத்தில் ஒலித்தது என்பதாகும்.
அதேவேளை இவ்விடத்தில் நீதியும் சட்டமும் மீறப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் மூலம் பாராளுமன்ற உறுப்பினருடைய சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளது .நான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
ஆகவே அது தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் உரிய முறையில் குரல் கொடுப்பதுடன் நின்று விடாது இது தொடர்பாக சர்வதேச பாராளுமன்ற சபையினர் இடத்திலும் மற்றும் அமெரிக்கா, இந்தியா, உட்பட்ட உயர்மட்டத்தினரிடத்திலும் பொதுநலவாய பாராளுமன்றத்தினரிடத்திலும் எடுத்துச் சென்று உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதிக்காக குரல் கொடுப்போம்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தனா ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். நான் இங்கு நேரடியாக வந்து பார்த்து நிலைமையை அறிந்து கொண்ட காரணத்தினால் நானே நேரடியாக ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் அமெரிக்க காங்கிரஸ்சுக்கும் இந்தியாவுக்கும் ஏனைய நாட்டு பாராளுமன்றங்களுக்கும் உண்மைகளை விளக்கி எனது கையெழுத்திலேயே கடிதம் எழுதுவேன்.
ஆகவே நான் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்காக நீங்கள் செல்கின்ற போது ஒரு சட்டத்தரணியுடன் செல்லுங்கள்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அங்கு நடந்தவை தொடர்பில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கின்றது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினருடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கின்றது. ஏனெனில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
ஆனால் மக்களாகிய உங்கள் பிரச்சினையைப் பொறுத்தவரையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் எங்களால் தீர்வு பெற்றுத்தர முடியாதுள்ளது. உங்கள் அனைவருக்கும் எங்களது மனத்துயரைத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்கள் படும் துன்ப துயரங்கள் எமக்கு நன்றாகவே தெரிகின்றது. உங்களது துன்ப துயரங்களுக்கு ஒரு முடிவு வர வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
காணாமல் போனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்களேயானால் அவர்கள் எங்கே என்பதனையம், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
தொடர்ந்தும் ஒழித்து வைத்திருக்க முடியாது, மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று அவர்களுடைய காணிகளில் குடியேற அனுமதிக்ப்பட வேண்டும்.
இந்த நாட்டிலே 1983ம் ஆண்டிலிருந்து இரண்டு யுத்தங்கள் இருந்தது. ஒன்று ஜே.வி.பி கிளர்ச்சி, மற்றது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினை. இரண்டினாலும் அழிவுகள் ஏற்பட்டன. ஜே.வி.பி கிளர்ச்சிக்கு முடிவு காணப்பட்டுள்ளது. ஆனாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு இன்றி பிரச்சினைகள் தொடர்கின்றன.
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தம் முடிந்ததன் பின்னர் கூறினார், இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம், இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வை ஏற்படுத்துவோம், வடக்கு கிழக்கு தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை விரைந்து ஏற்படுத்துவோம். என்று உலக நாடுகளிடத்திலேயும் உறுதி மொழிகளையும் வழங்கினார்.
ஆனாலும் இன்னமும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வின்றி தொடர்கின்றன. இதனால் துன்பப்படுபவர்கள் இந்த நாட்டு மக்களேதான் என்றார்.


Geen opmerkingen:

Een reactie posten