தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி நிகழ்வின் பதிவுகள்!

கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை 2013 - “நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி” என்ற நினைவெழுச்சி நிகழ்வு கடந்த 27ம் திகதி மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP  கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி நடனங்கள், எழுச்சிப் பாடல்கள் என அனைத்து நிகழ்வுகளும் மிகவும் உணர்வெழுச்சியூட்டுவனவாக அமைந்தன.
குறிப்பாக கறுப்பு ஜூலை நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டு நினைவெழுச்சி நிகழ்வில் எம் உணர்வுகளைப் பகிர்ந்து தம் அன்பு தோழமையை பதிவு செய்த அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை நன்றியைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கலங்கி கை கோர்த்து எம்மோடு தம் உணர்வைப் பகிர்ந்த ஒன்ராறியோ NDP கட்சி தலைவி அண்ட்ரியா ஹோர்வாத் அவர்களுக்கும், அவருடன் இணைந்து மாகாண சபை உறுப்பினர் ஜக்மீட் சிங்கின் உரையை தெரிவித்திருந்த அக்கட்சியின் வேட்பாளரான அடம் ஜிம்போரீக்கும் நெஞ்சம் கனிந்த நன்றிகளை கனடியத் தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது
அவரைத் தொடர்ந்து ஒன்ராறியோ NDP கட்சி யின் முதல்வர் நீதன் சாண் அவர்களின் எழுச்சி உரையும் இடம் பெற்றது.
ஒன்ராரியோ லிபரல் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் கிலென் முறே அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இவர் ஒன்ராறியோ மாகாண அரசில் ஒரு அமைச்சரும் ஆவார். இவர், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது ஒரு இனப்படுகொலை என்ற விடயத்தை எங்கும் எதிரொலிப்பவர்.
இவருடைய முயற்சியால் தமிழினப்படுகொலைக்கான நினைவுத் தூவி அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து மரம் நாட்டப்பட்டு வருகின்றது.
ஒன்ராரியோ கன்செர்வெடிவ் கட்சியின் வேட்பாளரான கென் கிருபா அவர்கள் அவருடைய கட்சி தலைவர் ரிம் ஹுடக் அவர்களின் உரையையும் தனது உரையுடன் ஒருங்கே தெரிவித்திருந்தார்.
கறுப்பு ஜுலைக்கு பல அரசியல் பிரமுகர்களும், கட்சித் தலைவர்களும் இரங்கல் செய்தியை அனுப்பி இருந்தார்கள்.
இந்நிகழ்வில் மேலும் ஜுலை 83 ல் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூர்ந்து ஈகைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டதுடன் வீழ்ச்சிகளை கடந்த எழுச்சிப் பயணங்களுக்கான உறுதி மொழியும் கனடிய தமிழர் தேசிய அவையின் முன்னெடுப்பில் எடுக்கப்பட்டது.
இவ்வுறுதி மொழியில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும், மற்றும் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும்,
போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகளும் வலியுறுத்தப்பட்டன. மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இவற்றை பெறுவதற்காக போராடுவோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

Geen opmerkingen:

Een reactie posten