தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

மட்டக்களப்பு புல்லுமலையில் பசில் ராஜபக்சவிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்த இருவர் கைது!

கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:10.04 PM GMT ]
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி  இடம்பெற்றுள்ளது.
புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன் நிதிப் பங்களிப்பு செய்த புலம் பெயர் உறவுகளின் சார்பில் வீ.செல்லக்கதிரமலை, பெ.ரஜனிகாந்த், சு.ரவேந்திரன் குடும்பத்தினர் ஆகியோரும், கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் தி.சிவமாரன், கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், இளைஞரணித் தலைவர் சு.சுரேன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தா, மாற்றுத் வரோட் நிறுவனப் பணியாளர் திருமதி அ. விக்னேஸ்வரி மற்றும் அவருடனான சக பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
“மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கமே. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று செயலாற்றும் திறன் அவர்களிற்கும் உண்டு. எனவே அவர்கள் தமது இயலும் தன்மையினைக் கொண்டு சாதிக்க முயல வேண்டும்” என்று நிகழ்விற்குத் தலைமை வகித்த வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், மாற்று வலுவுள்ளோர்கள் தமது வலுவினைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் உதவிகளினைப் பயன்மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இத்தகைய மனிதாபிமானப் பணிகள் வெற்றி பெறுவதனூடாக அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் செயற்படுவதற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் திரு. வ.நகுலேஸ்வரன் அவர்களும் தமது கருத்தினை வழங்கியிருந்தார்.
இந் உதவு தொகைக் கொடுப்பனவிற்கான நிதிப் பங்களிப்புச் செய்தோர் விபரம்:
1. செல்வி. ஆஷா இராசசுந்தரம்- லண்டன்
2. செல்வி. அனுஷா இராசசுந்தரம்- லண்டன்
3. செல்வி. இனிதா லோகேந்திரன்- லண்டன்
4. செல்வி. யோதிகா லோகேந்திரன்- லண்டன்
5. திரு. வெள்ளிமயில் ஜெகன்- லண்டன்
6. திரு. பாலசிங்கம் இதயம்- லண்டன்
7. திரு. செல்லமயில் மோகன்- லண்டன்
8. திரு. தவராசா லவன்- லண்டன்
9. திரு. தவராசா ரதன்- லண்டன்
10. திரு. இராசதுரை மதியழகன்- லண்டன்
11. திரு. தம்பிராசா மதியழகன்- லண்டன்
12. திரு. சுப்பிரமணியம் குவேந்திரம்- லண்டன்
13. செல்வி. சித்திரா யோகரட்ணம்- சுவிற்சர்லாந்து
14. திரு. பூபாலபிள்ளை சர்வானந்தா- லண்டன்
15. செல்வி. சர்மிளா இளமுருகன்- லண்டன்
16. செல்வி. விஜிதா நித்தியபாலன்- லண்டன்

மட்டக்களப்பு புல்லுமலையில் பசில் ராஜபக்சவிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்த இருவர் கைது!
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:34.40 PM GMT ]
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமக் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து இன்றைய தினம் வருகைதந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா மற்றும் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட துண்டுப் பிரசுரத்தில் உறுகாமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஏற்கனவே ஏறாவூரில் ஈராக் அரசாங்கத்தினால் சதாமுசைன் கிராமம் என்ற பெயரில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடுகளை இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக குறிப்பிட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள உறுகாமம் வாழ் தமிழர்கள், இது சம்பந்தமாக ஒரு துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட துண்டுபிரசுரங்களை இன்று வருகைதந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் வழங்கியுள்ளனர்.
இதனை அவதானித்த இலங்கை புலனாய்வுத்துறையினர் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய இருவரை பின்னர் கைது செய்து கரடியனாறு பொலிசில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளை சிங்கள, முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதன் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கிராம தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் யுத்த அழிவுகளை பொருட்படுத்தாது முப்பதாண்டு கால யுத்தத்தில் உறுகாமம், புல்லுமலை, மங்களகம போன்ற பகுதிகளில் வாழ்ந்த மூவின மக்களுக்கும் ஒரேயளவிலான பாதிப்புக்களே ஏற்பட்டதென கூறுவதை ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாதென தெரிவித்துள்ள உறுகாமத் தமிழர்கள்,அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற போர்வையில் இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து தமிழர்களின் காணிகளை வேற்று இனங்களுக்கு வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten