தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 mei 2013

சிறுபான்மையின மக்கள் ஒன்றுபட வேண்டிய காலமிது! அசாத் சாலியின் கைதும், புல்மோட்டை ஆக்கிரமிப்பும் இதையே வலியுறுத்துகின்றன!


அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:22.51 AM GMT ]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும்.
அசாத் சாலியின் கைதின் மூலம் நாட்டில் கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் செய்யமுடியாத நிலைமை போன்றன இல்லையென்பது வெளிப்படையாக தெரிகின்றது. அரசுக்குள்ளேயே இன்னொரு அரசாங்கம் செயற்படுகின்றது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமே இது ஒரு சட்டத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்துள்ளார். இவ்வாறு நீதியமைச்சர் தெரிவித்துள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும் இதற்காக குரல்கொடுக்கவில்லை. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் பதவிவிலக வேண்டும்.
அசாத் சாலிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் அவரைக் கைது செய்ய வேண்டும்.
அசாத் சாலியின் கைது குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது. இது ஒரு பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
ராஜீவ் காந்தி கொலை சந்தேகநபர் மற்றும் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான கே.பி. அரசின் பாதுகாப்பிலும் கருணா அம்மான், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசின் பாதுகாப்புடன் உள்ளனர். தீவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து தன்னுடன் வைத்துள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் அவரை பார்ப்பதற்கு கூட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுபான்மையின மக்கள் ஒன்றுபட வேண்டிய காலமிது! அசாத் சாலியின் கைதும், புல்மோட்டை ஆக்கிரமிப்பும் இதையே வலியுறுத்துகின்றன!
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:35.09 AM GMT ]
இலங்கையிலுள்ள இரு சிறுபான்மையினங்களையும் நாட்டிலிருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளே இன்று பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
 இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் அவர்களின் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன.
மக்கள் ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடொன்றிலுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லை. நாட்டில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக எவருமே கருத்துக் கூற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.
இனங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை விரும்பிய அசாத் சாலியின் கைது இதனையே வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
இந்த நாட்டில் இன ஒற்றுமையை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தவர் அசாத் சாலி.
அதிகாரப் பரவலாக்கலூடாக நாட்டில் ஜக்கியத்தை தோற்றுவிக்க வேண்டும் என விரும்பியவர்.
அதற்காகவே கடந்த காலங்களில் அயராது பாடுபட்டு வந்தவர்.
உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று குரல் கொடுத்தவர்.
தெல்லிப்பழையில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தையும் அநீதிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியவர்.
இனங்களுக்கிடையே நல்லுறவும் நாட்டில் அமைதியும் ஏற்பட வேண்டும் என விரும்பிய அசாத் சாலியின் கைது, இன ஒருமைப்பாட்டை விரும்பாது அதனை சீர்குலைக்கும் எண்ணத்தோடு நடைபெற்ற ஓர் செயலாகும்.
அசாத் சாலியின் கைதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கின்றது.
கருத்து வெளியிடும் சுதந்திரத்தை சிறுபான்மையினரிடமிருந்து பறிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது இன அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்நிலங்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வாழ்வாதார வளங்கள் நிறைந்து மக்கள் செறிந்து வாழக்கூடிய நிலங்கள் அடாத்தான முறையில் இராணுவப் பலத்துடன் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும்; கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டையிலும் முஸ்லிம் மக்களின் வாழ்விடங்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. இன்று அம்மக்கள் அனாதரவாக வீதியில் நிற்கின்றார்கள்.
இன்று இந்நாட்டில் ஆட்சியிலுள்ள அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் வாழ்விடங்களை அபகரிப்பதோடு அவர்களின் கருத்து வெளியிடும் உரிமையையும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கி வருகின்றது.
மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மீது பேரினவாத ஆட்சியாளர்கள் பல வடிவங்களில் இன ஒடுக்குமுறையையும் கருத்துரைக்கும் உரிமை மறுப்பையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவ்வாறே மற்றுமொரு சிறுபான்மையினரான முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்கும் நோக்குடன் அவர்களையும் பேரினவாத ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனத்துடன் தாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் அவர்களின் மதஸ்தலங்களை குறிவைத்து தாக்கினார்கள். அதன் பின்னர் அவர்களின் வர்த்தக நிலையங்களை தாக்கினார்கள். தற்போது அவர்களின் பேச்சு சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் நோக்குடன் கைது செய்யும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
பேரினவாதிகளினால் ஆட்சி செய்யப்பட்டு வரும் இந்த அரசாங்கத்தின் இந்தகைய செயற்பாடானது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த நேரத்தில் ஒடுக்கப்படும் இனங்களாக உள்ள தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றாக கைகோர்த்து ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
சிறுபான்மை மக்கள் ஒன்றுபட வேண்டிய தருணமிது. இதனையே இன்றைய நில ஆக்கிரமிப்புகளும் கைதுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்துகின்றன.
ஒடுக்கப்படும் இனங்களின் ஒற்றுமைதான் அடக்குமுறையாளர்களை அடிபணிய வைக்கும் சக்தியாக மாறும்.
மாவை சேனாதிராசா பா.உ.
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

Geen opmerkingen:

Een reactie posten