[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:29.39 AM GMT ]
களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
அவருடன் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் நதீக சம்பத் என்பவரும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கிரிபத்கொட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி எஸ்.ஏ.விதானகே தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது இன்று காலை தழுகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினர் லங்கா விஜித்த குமார என்பவர், அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களனி பிரதேச சபையின் தலைவர் கிரிபத்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
நேற்று சிவசக்தி ஆனந்தனுக்கு நாளை எனக்கா?!- நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் சபையில் கேள்வி!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:47.27 AM GMT ]
'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளுக்கும் தனக்கும் கடந்த வருடம் கைத்தொலைபேசி மூலமான தொடர்புகள் இருந்தது எனக் கூறியே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தன்னைத் துருவித்துருவி விசாரணை செய்தனர் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றில் இன்றைய அமர்வின் மதிய போசன இடைவேளையின் போது அமைச்சர்கள் முன்னிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தன் மேலும் கூறுகையில்,
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வைத்து விசாரித்துள்ளீர்கள்.
நேற்று சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா?
ஏன் நீங்கள் இப்படி தன்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே.
ஏன் எம்மைப் புலிகள் என்று நினைக்கின்றீர்களா? அல்லது நான்காம் மாடி விசாரணை மூலம் தமிழர்களை அல்லது கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சமடையச் செய்யலாம் என்று நினைக்கின்றீர்களா?
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளைப் பார்வையிட உரிமை இல்லையா? ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லையா?
இவ்வாறு கேள்விகளைத் தொடுத்தார் சம்பந்தன்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனைக் கடும் தொனியில் தெரிவிக்கும்போது அமைச்சர்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தனர்.
பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே நான்காம் மாடி விசாரணைக்குப் பொறுப்பு எனவும், அவரே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும் எனவும் அமைச்சர்கள் கூறினர்.
உடனே குறுக்கிட்ட சம்பந்தன் 'கோத்தபாயவும் உங்கள் அரசின் கீழ்தானே இயங்குகின்றார் என்று பதிலளித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten