தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

அசாத் சாலி கைது! அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை! விடுதலைக்கான அமைப்பு குற்றச்சாட்டு


வடக்கு தேர்தலுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- அல்லே குணவன்ச தேரர்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 02:53.04 PM GMT ]
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேசத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 21000 சிங்கவளர்களை மீள்குடியேற்றாது தேர்தல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு சிங்களவர்கள் மீள் குடியேற்றப்படாது தேர்தல் நடத்தப்பட்டால் அது உரிமை மீறலாகும்.
அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். 1977ம் ஆண்டு சிங்களவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் அவர்கள் இதுவரையில் மீள்குடியேற்றப்படவில்லை.
இதன் மூலம் அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீள் குடியேற்றப்பட்ட பலரின் சத்தியக் கடதாசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வெளியேற்றப்பட்ட சிங்களவர்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆணைக்குழு ஒன்றை நிறுவியது. அந்த ஆணைக்குழுவில் நானும் சாட்சியமளித்தேன்.
சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக தேசப்பற்றுடைய அமைப்புக்களுடன் இணைந்து போராடப் போவதாக அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி கைது! அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை! விடுதலைக்கான அமைப்பு குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 12:17.39 AM GMT ]
இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் மூன்றாவது நாளாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அசாத் சாலியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரை சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
இதற்கிடையே, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும்படி கோரும் அமைப்பொன்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களுக்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே அரசாங்கம் அசாத் சாலியை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.
பத்திரிகைச் செவ்வி- இன முரண்பாடு- பயங்கரவாதத் தடைச் சட்டம்
நாட்டில் இனவாத, மதத் துவேஷக் கருத்துக்களை வெளியிட்டுவந்த கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகளுக்கு அரசாங்கத்துடன் நேரடித் தொடர்புள்ளது என்பதை அசாத் சாலி வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.
இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக உண்மையில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அச்செயற்பாடுகளை எதிர்த்த அசாத் சாலியை அரசாங்கம் கைது செய்திருப்பதாகவும் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியொன்று தொடர்பிலேயே பாதுகாப்புத் தரப்பினர் தன்னிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியுள்ளதாகவும், தான் வெளியிடாத கருத்தொன்று அந்த சஞ்சிகையில் வெளியானமை பற்றி உடனடியாகவே தான் குறித்த சஞ்சிகைக்கு செய்தித் திருத்தம் அனுப்பியிருந்ததாகவும் அசாத் சாலி கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.
தனது தரப்பு விளக்கங்களை அளித்த பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அசாத் சாலி உண்ணாநோன்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளின் கீழும் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.
ஆனால், அந்தச் சட்டவிதிகளின் கீழ் கைது செய்யப்படுமளவுக்கு அசாத் சாலி குற்றம் எதனையும் புரிந்திருக்கவில்லை என்று அவரின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக அரசாங்கம் குறிப்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன என்று வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கம் அடுத்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அளிக்கப்படும் என்று இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் தமிழோசையிடம் கூறினார்.
சென்னை சஞ்சிகையின் பிழையான தலையங்கமே அசாத் சாலியின் கைதுக்கு காரணம்!- சட்டத்தரணி
சென்னையில் இருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றின் பிழையான தலையங்கம் காரணமாகவே கொழும்பின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவர் என்ற செய்தியை அசாத் சாலி குறிப்பிட்டதாக குறித்த சென்னை சஞ்சிகை தலையங்கம் தீட்டியிருந்தது.
எனினும் அந்த தலையங்கத்தை திருத்தி வெளியிடுமாறு அசாத் சாலி கோரியபோதும் சென்னையின் சஞ்சிகை அதனை இன்னும் நிறைவேற்றவில்லை இதனை மையமாகக்கொண்டே இலங்கையின் குற்றப்புலனாய்வு பொலிஸார் அசாத் சாலியிடம் விசாரணை நடத்திவருவதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
1915 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் இதுவரை இலங்கையில் 10 பள்ளிவாசல்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலி சென்னை சஞ்சிகைக்கான தமது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள அரசாங்கத்தின் ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லச்மன் உலுகல்ல, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் எவ்வித சமய மற்றும் இன முரண்பாடுகளும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten