தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

ஜனநாயக விரோத அரசுக்கெதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!


வரி மோசடி குற்றச்சாட்டு! கொழும்பில் தமிழ் வர்த்தகரின் சொத்துக்கள் அரசுடமை! மேல் நீதிமன்றம் தீர்ப்பு
[ புதன்கிழமை, 01 மே 2013, 12:00.11 AM GMT ]
உள்நாட்டு இறைவரிகள் திணைக்களத்தில் இடம்பெற்ற 400 கோடி ரூபா வற்வரி மோசடி வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சின்னய்யா சுப்பிரமணியம் எனும் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து சொத்துக்களையும் அரசவுடமையாக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க நேற்று உத்தரவிட்டார்.
அதன் பிரகாரம் தமிழ் வர்த்தகருக்குச் சொந்தமான வற்வரி வழக்கின் மூலம் தடைவிதிக்கப்பட்டு பொலிஸ் பொறுப்பிலுள்ள புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களை அரசவுடைமையாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கின் 10 ஆவது சந்தேக நபரான சின்னய்யா சுப்பிரமணியம் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவருக்கு 13 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 100 மில்லியன் ரூபா அபராதம் செலுத்துமாறும் கடந்த 12ம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.
சந்தேக நபருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டப் பணத்தை செலுத்த முடியாத நிலை காணப்படுவதனால் அவரது சொத்துக்களை அரசவுடமையாக்குமாறும் அதன் மூலம் அத்தொகையினை அறவிட்டுக் கொள்ளுமாறும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்னவிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் விளக்கிக் கூறியது.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழான வழக்கு ஒன்றின் போது குற்றவாளியாகும் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் தண்டப் பணத்தை செலுத்துவதற்கு தவறும் பட்சத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்களை அரசவுடைமையாக்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாக இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனெக்க அலுவிஹார சுட்டிக்காட்டினார்.
அதன் பிரகாரம் நீதிமன்ற உத்தரவை உடனடியாக கொழும்பு காணி பதிவாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய அமைச்சர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ள விருப்பம்!
[ புதன்கிழமை, 01 மே 2013, 02:04.40 AM GMT ]
முக்கியமான அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள விரும்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவர்கள் ஏற்கனவே இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கட்சிக்கு ஆதரவளிக்க ஆயத்தமாகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக விரோத அரசுக்கெதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ புதன்கிழமை, 01 மே 2013, 12:21.34 AM GMT ]
ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 
அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையால் அரச திணைக்களங்களிலும் பொதுத் துறைகளிலும் ஊழல் நிறைந்த ஊதாரித்தனமான செயல்களினால் வரிச்சுமை அதிகரித்து, உற்பத்தி குன்றி, கடன்கள் அதிகரித்து மக்கள் வதைக்கப்படுவதற்கு எதிராக போராட வேண்டியுள்ளோம்.
எனவே மனித உரிமைகளுக்கெதிராக ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்ச்சி தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகத் தொழிலாளர் விடுதலை பெற்ற நாளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் “மே” முதலாம் ஆம் நாள் தொழிலாளர் விழாவாகக் கொண்டாடுவது வழமையானதே.
பல நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், புரட்சி நடவடிக்கைகள் காரணமாக ஆட்சிகளே மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் வரலாறுகளாகும்.
இலங்கையிலும் தொழிலாளர் வர்த்தகத்தின் போராட்டங்களை பெரும்பாலும் இடதுசாரி அரசியல் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் நடத்தி வந்துள்ளன.
அந்நாளில் ஒரு சதத்தால் பாண் விலை அதிகரித்தாலும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இப்பொழுது இன்றைய அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர்களாகி விட்டனர்.
பாணின் விலை ஒரு௦௦ ரூபா அதிகரித்தாலும், விலைவாசி மலையென உயர்ந்தாலும் அன்றைய போராட்டங்கள் இன்று ஏற்படுவதாயில்லை. அவை நியாயப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் நீண்டகால யுத்தம் மற்றும் போராட்டங்கள் காரணமாக மக்கள் அரசியல் உரிமைகள் அற்றவர்களாக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் மிகமோசமாக வீழ்ந்து கிடக்கிறார்கள்.
அவர்களில் பல இலட்சம் மக்கள் நிலமற்ற, வீடற்ற, வேலையற்ற, உழைப்பற்ற ஏதிலிகளாகப் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
விவசாய நிலங்கள், மீன் பிடிக்கக்கூடிய வளமுள்ள கடல் பகுதிகள், குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து சொந்தக்காரர்கள் அகற்றப்பட்டு சீரழிக்கப்படுகிறது.
குறிப்பாக வலி.வடக்கிலிருந்து 23 ஆண்டுகளாகியும் அந்த மக்கள் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான காணிகளும் பல ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதற்கு என அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பௌத்த குடிமக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும் கட்டப்படுகின்றன.
தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழ்த் தேசிய இனம் ஒன்றில்லை என்னும் நிகழ்ச்சி நிரல் அரசினால் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய இனக் கட்டமைப்பையும் ஒரு தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் அழித்துவிட்டு இனப்பிரச்சினையே இல்லை என்று சொல்லவே அரசு திட்டமிடப்பட்டு செயலாற்றுகின்றது.
அதற்காக தமிழ் விவசாயிகளை அவர் நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள விவசாயிகளின் குடியேற்றமும் தமிழ் மீனவர்களைக் கடல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள மீனவர்களின் குடியேற்றமும் நடக்கின்றது.
தமிழர் பிரதேசங்களை இராணுவ மயமாக்கி, சிங்கள மயமாக்கி, பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலே அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தனை செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களுக்கும் பொருத்தமானதே.
உள்நாட்டிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மீளக்குடியேறும் அவாவுடன்  பல இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாய் உள்ளனர். அரசு  எல்லோரையும் மீள்குடியேற்றி விட்டோமென சர்வதேசத்திற்குப் பொய்ப்பிரசாரம் செய்கிறது.
இந்த நிலையில் பெரும்பான்மைத்துவ ஐனநாயக அரசு என்ற பெயரில் மத்தியில் அதிகாரங்களைக் குவித்தலும், நிதி அதிகாரங்கள் உட்பட தேர்தல் ஆணையம், பொதுச்சேவை ஆணையம், பொலிஸ் ஆணையம் அனைத்தினதும்  சுதந்திர தத்தவங்கள் 18வது திருத்தத்தினால்  ஐனாதிபதியிடம் குவிக்கப்படடுள்ளது. 
இந்த நிலையில் அரசு ஒரு சர்வாதிகார ஆட்சிபீடமாகவும் ஊழல்களின் உறைவிடமாகவும் செயல்படுகிறது. இதனால் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காத அளவுக்கு   உயர்ந்து விட்டது.  சாதாரண மக்கள் உயர்ந்து வரும் விலைவாசியினால் வறுமை, ஏழ்மை பட்டினிக்குள் தள்ளப்பட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தொழில்துறை அபிவிருத்தியில்லை, உற்பத்தியில்லை, வேளாண்மை அபிவிருத்தியில்லை. அகதிகளாய் உள்ளோர், மீளக்குடியேற்றப்பட்டோர், குடியேற்றப்பட வேண்டியோரும் வாழ்வாதாரமின்றி வேலைவாய்ப்பின்றி, உழைப்பின்றி வாங்கும் சக்தியற்றவர்களாய்  உழல்கின்றனர்.
போர் காரணமாய் காணாமல்போன, கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் குடும்பங்களும், அங்கவீனர்களும், வாழ்விழந்த பெண்களுமாய் உழைப்பின்றி, வாங்கும் சக்தியற்ற, ஒருவேளை உணவு கூட இன்றியும் வலுவிழந்து வருகின்றனர்.
70% முதல் 80% வரை வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள், தாய்மார், குழந்தைகள் ஊட்டச்சத்தற்றவர்களாய் வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் முழுவளர்ச்சியற்ற மனிதர்களாகவே நடமாடுவர்.
எனவே இம் மேதினத்தில்
1.   அரசஇ அரச சார்பற்ற, தனியார்  ஊழியர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் விலைவாசியேற்றத்திற்கு ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களின் வருமானத்திற்கும், வாங்கும் சக்திக்கும் ஏற்ப குறைக்கப்பட வேண்டும்.
2.   போர் காரணமாகவும், இராணுவ ஆக்கிமிப்புக் காரணமாகவும் அகதிகளாய், அநாதரவாய் வாழ்விழந்தோருக்கு நட்டஈடும், நிவாரணமும் வழங்கவேண்டும் என்பதுடன் தமிழர்களையும் மனிதர்களாக மதிக்கின்ற பண்பு உருவாக்கப்பட்டு, முழுமனித வளர்ச்சிக்குரிய ஊட்டச்சத்து வழங்கவும் வேண்டும்.
3.   இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான மக்கள் நிலங்களும், கடலும் உடனடியாக விடுவிக்கப்பட்டு அப்பிரதேச மக்கள், அக்காணிகளுக்குச் சொந்தமான மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும்.
4.   தமிழர் தாயகப் பிரதேசத்தில் தனியார்இ பொது நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் அரச படைகள் வெளியேற்றப்பட வேண்டும்.
5.   இலங்கையில் தமிழினப் பிரச்சினைக்கு அம்மக்கள் தாயகத்தில் ஆளும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு சிறந்த அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
6.   அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையாலும், திட்டமிடலில்லாமையாலும் அரச திணைக்களங்களிலும் பொதுத்துறைகளிலும் ஊழல் நிறைந்து விட்டதாலும், ஊதாரித்தனமான செயல்களினாலும்  பெற்றோல்,  டீசல், மண்ணெய் மற்றும் மின்சாரம் பெறுவதில் வரிச்சுமை அதிகரித்தும், உற்பத்தி குன்றியும்,  கடன்கள் அதிகரித்தும் மக்கள் வரிச்சுமையால்  வதைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட வேண்டியுள்ளனர். வரிச்சுமையிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வேலையற்று, நிலமற்று எதிர்காலமற்றுள்ள மக்களுக்கும் நிலமும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
7.   போர் காலத்தில் கொல்லப்பட்டோர், காணமல் போனோர் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணை நடத்தப்பட்டு அதனடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
8.    வேலையற்ற இளைஞர், யுவதிகள், பட்டதாரிகள்,  தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
9.   கல்வித்துறையில் அரசியல் மற்றும் இராணுவத் தலையீடற்ற நிர்வாகமும், மொத்தநிதி ஒதுக்கீட்டில் 6வீதத்திற்கும் மேலான நிதி ஒதுக்கீடும் வேண்டும்.
10.  தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் குடிப்பரம்பலைக் குலைத்துவரும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்  என்பதுடன்  தேசிய இனங்களின் சுயநிர்ணய  உரிமை  அங்கீகரிக்கப்பட வேண்டும்.
11.  ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும்பாலான அங்கத்தவ நாடுகளினால் (2012லும், 2013லும்) இரண்டு தடவைகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை  நடைமுறைப்படுத்தவும், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்றவும் வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.
12.  சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக தத்துவங்களையும், கருத்தியல் சுதந்திரத்தையும் அரசு அங்கீகரிப்பதுடன் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளல்களுக்கும் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
மனிதஉரிமைகளுக்கெதிரானதும், மனிதாபிமான சட்டதிட்டங்களிற்கு எதிரானதுமான ஜனநாயக விரோத ஆட்சிக்கெதிராக ஒருமித்து குரல் கொடுக்கவும் ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு அழைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.


Geen opmerkingen:

Een reactie posten