தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

வரலாற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு!


ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வரலாற்று சிறப்பினைப் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழ சுதந்திர சாசனம் மே-18ம் நாள் சனிக்கிழமை உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.
'தமிழீழ தேசம்' எனும் கோட்பாட்டை நன்கு வலியுறுத்தும் கொள்கைகளின் அடிப்படையில், பாரம்பரிய வரலாற்றுத் தகமையில் தமிழீழ மக்களுக்கு உள்ள தன்னாட்சி உரிமையினை, இறைமையை வலியுறுத்தும் இருபத்தியொரு பிரிவுகளைக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முரசறைந்தார்.
தமிழீழ ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் எனப் பல்வகைப் பேராளர்கள் முன்னிலையில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, தென் சூடான் வங்கதேசம் என உலகின் பல பாகங்களிலுமிருந்து பல்வேறு துறைசார் அறிஞர் பெருமக்கள் பலரும் இவ்வரலாறறு நிகழ்வில் பங்கெடுத்து கொண்டிருந்தனர்.
சுதந்திர சாசன முரசறைவின் போது வங்க தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், 'முக்தி பாகினி' போராட்ட இயக்கத்தின் மூளை என வர்ணிக்கப்பட்டவருமான கலாநிதி நூரான் நபி அவர்கள் தமிழீழ விடுதலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து உரையாற்றினார்.
மேலும், அமரிக்காவின் முன்னைநாள் சட்டத்துறை நாயகமாக விளங்கிய மதிப்புக்குரிய திரு.இராம்சே கிளார்க அவர்களும் தென் சூடான் நாட்டின் பிரதிநிதியாக அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னை நாள் போராளியுமான மதிப்புக்குரிய திரு.டானியல் மாயன் அவர்களும் தமிழீழ விடுதலைக்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்த முன்நிகழ்வு மாநாட்டில் உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த வள அறிஞர்கள் பலரும் தமிழீழ சுதந்திரத போராட்டத்தினை மையமாக கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தனர்.
பேராசிரியர்கள் ஜோசெப் அல்கவுத் (ஜேர்மனி), பீட்டர் சால்க் (சுவீடன்), சொர்ணராஜா (இலண்டன்), டேவிட் சுந்தா (இலண்டன்), வைத்திய கலாநிதி பிரையன் செனவிரட்னா (அவுஸ்திரேலியா), பிரடரிக் பப்பானி(பிரான்சு) சிறிஸ்கந்தராஜா (சுவீடன்), சந்திரகாந்தன் (கனடா), டேவிட் மத்தியாஸ் (கனடா), இந்திய நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் மணிவண்ணன், பால் நியுமான், திருமதி சரஸ்வதி, திரு.செய்ப்பிரகாசம் ஆகியோருடன், பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெம்ஸ் சம்மேர்ஸ், கனடா நாட்டைச் சேர்ந்த திரு. தங்கவேலு, திருமதிகள் சிறிதாஸ், உஷா சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி நிம்மி கௌரிநாதன் எனப் பல வளஅறிஞர்கள் உள்ளடங்குவர்.
தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு வலுவூட்டும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
அனைத்துலக மட்டத்தில் சட்டத் துறையில் புகழ் பெற்றவரும், இன அழிப்புக்கு எதிராக உலக நீதி மன்றில் போராடி வெற்றிகண்டு வரும் சட்ட வல்லுனருமாகிய திரு.பிரான்சிஸ் பொயில் அவர்கள் கலந்து பல ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
இவ்வாறு தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten