தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

வலிகாமம் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக 5,000 வழக்கு! நேற்று மட்டும் 400 குடும்பங்கள் பதிவு


வடக்கில் பெறப்படும் காணிகளுக்கு மதிப்புத் தொகை வழங்கப்படும்! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
[ புதன்கிழமை, 01 மே 2013, 06:43.47 AM GMT ]
வடக்கில் பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவோம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
உண்மைக்கு முரணான பிரசாரங்களை பரப்பி வடக்கில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வெறும் 50ற்கும் குறைவானவர்களே பங்குபற்றுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையின் வட பகுதியில் துரித அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச ரீதியில் தரம் உயர்த்துவது மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவற்றுக்கு போதிய காணிகள் தேவைப்படும் போது அவற்றை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களை நாம் நாடுவோம்.
தென் அதிவேக வீதி, மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில், அப்பிரதேச மக்களின் காணிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அப்போது பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால், வடக்கில் அரசியல் கட்சிகள் போலியான பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு பொது மக்களை ஏமாற்றி வருகின்றன.
இராணுவம் ஒருபோதும் வடக்கில் பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை.
குற்றச்சாட்டுகள் அனைத்துமே உள் நோக்கங்களைக் கொண்டவை என்றும் அவர் மேலும் கூறினார்.

வலிகாமம் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக 5,000 வழக்கு! நேற்று மட்டும் 400 குடும்பங்கள் பதிவு
[ புதன்கிழமை, 01 மே 2013, 06:35.48 AM GMT ]
யாழ். வலிகாமம் பகுதியில் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக 5,000 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டன.
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற வலிகாமம் பகுதிக் காணிகளை விடுவித்து மக்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 29ஆம் திகதி தெல்லிப்பழையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயாயிரம் வழக்குகளை நீதிமன்றில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலினை அடுத்து நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களிலும் பதிவு நடவடிக்கை இடம்பெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பில், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.
நாட்டின் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததற்கு மாறாக இராணுவம் வலிகாமம் பகுதியில் ஆறாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் தெரிவித்துள்ள கூட்டமைப்பினர், அது தொடர்பிலும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பொதுமக்களின் சார்பில் வலிகாமம் பகுதியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமல்ல வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களில் சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten