தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

செங்கலடி இரட்டைப் படுகொலையும் வலி. வடக்கில் கைது செய்யப்பட்ட 117 தமிழர்களும்! கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நுண்ணிய கூறுகள்!!


தமிழரின் உரிமைக்குரல் இன்னும் ஒடுங்கிவிடவில்லை!! மேதினச் செய்தியில் சரா எம்.பி.
[ புதன்கிழமை, 01 மே 2013, 05:46.56 AM GMT ]
தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டத்துக்கு உலகத் தொழிலாளர் வர்க்கம் கைகொடுக்கும் எனத் திடமாக நம்புகின்றோம். இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உன்னத நாளான மேதினத்தை அதன் புரட்சிகர மேன்மையுடன் கொண்டாடும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உரிமைப் போராட்டங்கள் முன்னெடுத்து வரும் அனைத்துத் தரப்பினருக்கும் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காக்கோ நகரில் எட்டு மணிநேர வேலை கோரியும் ஏனைய உரிமைக் கோரிக்கைகளையும் முன்வைத்தும் எழுந்த போராட்டப் பேரலையும், உழைக்கும் மக்கள் சிந்திய இரத்தமும் உலகெலாம் பரவி இன்று பல நாடுகளை விடுவித்துவிட்டன.
ஒடுக்குமுறையாளரைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. விடுதலை கோரும் மக்களின் ஒளி விளக்காக மிளிர்கின்றன. உலகப் பாட்டாளி வர்க்கமும் நாடுகளின் தேசிய இனங்களும் காலங்காலமாக முன்னெடுத்து வரும் அடிப்படை உரிமைகளை மறுத்தல் உட்பட சகலவிதமான ஒடுக்குமுறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம், இன்று ஒரு கொடிய இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் நசுக்கப்படுகின்றோம். இனந்தெரியாதவர்கள் என்ற பேரில் அரச சார்பு குண்டர்கள், பாதுகாப்புத் தரப்பின் ஒத்துழைப்புடன் நடத்தும் வன்முறைகளால் நாளாந்தம் இரத்தம் சிந்துகின்றோம். அழக்கூட வாய் திறக்க முடியாது அச்சுறுத்தப்படுகின்றோம்.
இன்றைய ஆட்சியாளர்களால் திட்டமிட்ட வகையில் எமது தேசிய தனித்துவத்தின் மீது, ஒரு போர் தொடுக்கப்பட்டிருக்கின்றது. எமது மொழியுரிமை பறிக்கப்பட்டு, தேசிய கீதம் உட்பட எங்கும், சிங்கள மயம் என்பதை நோக்கி நாடு நகர்த்தப்படுகின்றது.
பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. விவசாயம், கடற்றொழில், அரச பணி என்பவற்றில் மேற்கொள்ளப்படும் இன ஒடுக்கல் மூலம் எமது பொருளாதாரம் சிதைக்கப்படுகின்றது. ஒரு பெரிய நசிவுக் கலாசாரப் பரம்பல் மூலம் எமது கலாசாரத் தனித்துவம் சீரழிக்கப்படுகின்றது.
உறுதியுடன் போராடுவோம்
எனவே உலகத் தொழிலாளர் வர்க்கத்தைப் போலவே நாமும் எமது பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், தொடர்ந்து பறிக்கப்படும் உரிமைகளுக்காகவும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
தமிழ் மக்களின் அந்தப் போராட்டம் உலக ஏகாதிபத்திய சக்திகளினதும் பிராந்திய வல்லரசுகளின் துணையுடனும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் எமது உரிமைக் குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை.
நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தை ஜனநாயக வழிமுறையில் உறுதியுடனும் துணிச்சலுடனும் முன்னெடுக்கிறோம். உலகத் தொழிலாளி வர்க்கம் எமக்குக் கரங் கொடுக்குமெனத் திடமாக நம்புகின்றோம்.
இன்று இலங்கையின் ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் பிரதான வடிவமாகவும் தமிழ் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் ஓர் ஆயுதமாகவும் கையிலெடுத்துள்ளனர்.
மணலாற்றில் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் படையினரின் உதவியுடன் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய், நாயாறு ஆகிய பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் எமது மீனவர்களின் தொழில் பாதிப்படைகின்றது.
தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய பல நெருக்கடிகள் ஏற்படுத்தப்படும் அதேவேளையில், சிங்கள மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து எமது கடல் வளத்தை முற்றாகவே அழித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் படைமுகாம்கள்
வலி.வடக்கு, கேப்பாபுலவு, மறிச்சுக்கட்டி, வவுனியா பேயாடி கூழாங்குளம் ஆகிய பகுதிகளில் எமது மக்களின் விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு படை முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
நில அபகரிப்பின் பல பரிமாணங் கொண்ட ஒரு பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே வலி. வடக்கின் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 24 கிராம் சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 6,183 ஏக்கர் பிரதேசம் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மண் எமது மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தொழில் செய்த ஒரு பிரதேசம்.
இது ஒரு நில அபகரிப்பு மட்டுமல்ல. விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் என உழைக்கும் மக்களின் பிரதான வருவாய் மையமாக விளங்கிய இந்தப் பிரதேசம் பறிக்கப்படுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு போராகவும் விளங்குகிறது.
வலி.வடக்கு செம்மண் நிறைந்த வளமான பிரதேசம். இங்கு மிளகாய், வெங்காயம், மரவள்ளி, வெற்றிலை, முந்திரிகை எனப் பல பயிர்களும் செழிப்பாக வளர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தின. இன்றைய நிலஅபகரிப்பு மக்களின் குடியிருப்புக்களை ஆக்கிரமிப்பதுடன் விடவில்லை. விவசாயிகளின் வாழ்வையும் பறித்தெடுக்கின்றது.
இங்கு அலுமினியத் தொழிற்சாலை, சிமெந்து தொழிற்சாலை என இருபெரும் நிறுவனங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். அவர்கள் தொழிலிழந்து இன்று தெருவில் நிற்கின்றனர்.
மயிலிட்டி இலங்கையின் பிரதான மீன்பிடி மையங்களில் ஒன்று. அவர்கள் தொழில் செய்ய முடியாது இராணுவ ஆக்கிரமிப்புத் தடுத்துவிட்டது.
இனித் துறைமுகத் தொழிலாளர்கள், சிமெந்து ஆலைத் தொழிலாளர்கள் எனப் பெரியளவு சிங்களவர்கள் கொண்டு வரப்படுவார்கள். பின் தொழிலாளர் குடியிருப்புக்கள், இராணுவ வீரர்களின் குடும்பங்களின் குடியிருப்புக்கள் என வீடுகள் அமைக்கப்பட்டு , அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்படுவர்.
இறுதியில் வலி.வடக்கு ஒரு சிங்களப் பிரதேசமாக மாற்றப்படும். மணலாறு, மண்கிண்டி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த தென்னமரவாடி, வன்னிமையைச் சேர்ந்த ஒரு கிராமம்.
அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். தமிழ் மக்களை விரட்டுவதிலும் சிங்களவரைக் குடியேற்றுவதிலும் தீவிரமாகச் செயற்பட்டவர் ஜானகபெரேரா என்ற இராணுவப் படைத்தளபதி அந்தக் குடியிருப்புக்கு ஜானகபுர என்ற பெயர் சூட்டி, அவர் தனது பெயரை நிலைநாட்டிக் கொண்டார்.
ஹத்துருசிங்க புர
இன்று வலி.வடக்கில் அபிவிருத்தி என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும், தமிழ் மக்கள் மீள்குடியேறுவதைத் தடுத்து, அதை ஒரு சிங்களப் பிரதேசமாக மாற்ற முன்னிற்பவர்.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க எதிர்காலத்தில் வலி.வடக்கு ஹத்துருசிங்கபுர எனப் பெயர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது,
இது தொடர்பாகத் தான் ஜனாதிபதியுடன் பேசியதாகக் கூறினார். நிருபர் மீண்டும், மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படுவார்களா என்று கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் சமாளித்துவிட்டார்.
நாவற்குழியில் தென்பகுதி சிங்களவர் வந்து பலாத்காரமாகக் குடியேறிய போதும், அமைச்சர்தான் ஜனாதிபதியுடன் பேசுவதாகக் குறிப்பிட்டார். இன்றுவரை பேசி முடிக்கவில்லை. ஆனால் சிங்களவர்களுக்கு நாவற்குழியில் நிரந்தர வீடுகள் அமைக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அரசின் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குத் துணை போகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் தமிழ்த் தேசிய இனமான நாம். எமது உரிமைகளுக்காக போராடும் அதேவேளையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் உலகத் தொழிலாளர் வர்க்கத்துடனும் கரம் கோர்க்கிறோம். உரிமைகள் கிட்டும் வரை எத் தனை இடர்கள் வரினும் எமது போராட்டம் தொடரும்.
போராடுவது, தோல்வியடைவது, மீண்டும் போராடுவது தோல்வியடைவது மீண்டும் மீண்டும் போராடுவது மீண்டும் மீண்டும் தோல்வியடைவது இறுதிவரை!.
இது மக்களின் நியதி.
"போராடுவது, தோல்வியடைவது! மீண்டும் போராடுவது, தோல்வியடைவது! மீண்டும் மீண்டும் போராடுவது, மீண்டும் மீண்டும் தோல்வியடைவது! தங்கள் சவக்குழி வரை. இது ஒடுக்குமுறையாளர்களின் நியதி''
இது சீனத் தலைவர் மா ஓ சேதுங் கூறியவை. எனவே இறுதி வெற்றி மக்களுக்கே.

செங்கலடி இரட்டைப் படுகொலையும் வலி. வடக்கில் கைது செய்யப்பட்ட 117 தமிழர்களும்! கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நுண்ணிய கூறுகள்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 03:10.00 PM GMT ]
முதலில் அண்மையில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட தனது பெற்றோரை தனது காதலர் (!) என்று சொல்லப்படுகிற ஒரு சிறுவனுடனும் அவனுடைய நண்பர்களுடனும் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சிறுமி விவகாரம் குறித்து முதலில் பார்ப்போம்.
பிறகு வலி. வடக்கில் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட 117 தமிழர்களுக்கு வருவோம். ஏனென்றால் 2 சம்பவங்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.
செங்கலடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிறுவர்களை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுவிப்பதுடன் அவர்களை சமூகத்தில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்க வேண்டும். ஆனால் இன அழிப்பு அரசின் நீதி அதை செய்யாது.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு முக்கிய கூறு தாம் அழிக்க நினைக்கும் இனத்தை ஒரு குற்ற சமூகமாக மாற்றுவது.
செங்கலடி சிறுவர்கள் திட்டமிட்ட இந்த இன அழிப்பு கூறின் பக்க விளைவுகள். போருக்கு பிந்திய சமூகத்தில் இன அழிப்பு நோக்கில் பொருண்மிய, பண்பாட்டு, உளவியல் வாழ்வியல் நெருக்கடிகளை திட்டமிட்டு கடைப்பிடிக்கும் இன அழிப்பு அரசு இதை மேம்போக்காக மூடிமறைக்க கையிலெடுக்கும் ஒரு ஆயுதம்தான் "அபிவிருத்தி".
இந்த வலைக்குள் வீழாத ஆட்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு இது பயங்கரமான ஆயுதம். அடிப்படை அபிலாசைகளும் இனம், மொழி, நிலம் பண்பாடு என்ற அடிப்படையிலான மீள் வாழ்வும் குடியேற்றமும் இல்லாமல் இந்த "அபிவிருத்தி" யை இன அழிப்பு அரசு நடைமுறைப்படுத்த முனையும்போது வெளிப்பார்வைக்கு புனர்வாழ்வாக தோற்றமளிக்கும் அதே தருணத்தில் மறுவளமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தம்மை அறியாமல் சிக்கி கொள்கிறது அந்த இனம். விளைவாக அந்த இனத்திலிருந்து ஒரு குற்ற சமூகம் வெளித்தள்ளப்படும்.
கருணாவின் துரோகத்துடன் 2004 இற்கு பிறகு "அபிவிருத்தி" யடைந்ததாக கூறப்படும் தென் தமிழீழத்தில் இன்று தினமும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கடத்தல்கள், கோஸ்டி மோதல்கள், திருட்டுக்கள் என்று நடக்கும் கூத்துக்கள் இதன் ஒரு பகுதிதான்.
தமிழர்களின் (புலிகள்) ஆட்சியில் குற்ற செயல்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தன. போரின் வடுக்களை தவிர ஒரு மேன்மையான சமூக அமைப்பு இருந்தது. இன்று அது கலைக்கப்பட்டுவிட்டது.
தின்பதற்கு சோறில்லை. ஆனால் இன்று பாலியல் உணர்வை தூண்டவும் அதை போக்கவும் வழி திறந்து விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு. விளைவாக காதல் என்ற பெயரில் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களும் அது மறுக்கப்படும் போது அதை வன்முறைரீதியாக எதிர்கொள்ளுமளவிற்கு ஒழுங்கற்ற சூழலையும் திட்டமிட்டு உருவாக்கி விட்டிருக்கிறது இன அழிப்பு அரசு.
பாலியல் உணர்வு குறித்த, பாலியல் கல்வி குறித்த போதிய புரிதல் இல்லாத சமூகத்தில் - அதுவும் இன அழிப்பை சந்தித்த - சந்தித்துகொண்டிருக்கிற ஒரு இனத்தில் பாலியல் உணர்வை தூண்டும் அதை பகிரங்கமாக காட்சிபடுத்தும் ஒரு சமூக அமைப்பு உருவாவது ஆரோக்கியமானதல்ல.
அது செங்கலடி சிறுவர்களைத்தான் சமூகத்தில் உருவாக்கும். செங்கலடி சிறுவர்களின் கதை இது என்றால் அதை விட துயரம் கடந்த வாரம் வலி வடக்கில் கைது செய்யப்பட்ட 117 தமிழர்களின் கதை. இனியும் புலிப்பூச்சாண்டி காட்டி கைது செய்ய முடியாது என்று தெரிந்து குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று வகை தொகையில்லாமல் கைதை தொடங்கியிருக்கிறது இன அழிப்பு அரசு.
ஒரு மாதத்திற்கு முன்புதான் இதே பகுதியில் 185 தமிழர்கள் இதே காரணங்களுடன் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்களின் குற்றச்செயலாக திருட்டு இருக்கிறது. இவர்கள் யார் என்று கவனித்து பார்த்தால் ஒரு விடயம் புரியும்.
இன அழிப்பு அரசின் இராணுவத்தால் வல் வளைப்பு செய்யப்பட்டிருக்கும் மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி போன்ற வலி வடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள்.
கடந்த 30 வருடமாக நிலம் பறிக்கபட்டதால் இவர்களுக்குள்ளிருந்து ஒரு குற்ற சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. ஏதோ மில்லியன் கணக்கில் திருடவில்லை. வளவுக்குள் நின்ற ஆட்டை, மாட்டை திருடியது, தேங்காயை திருடியது. சைக்கிள் திருடியது. இது திருட்டா? கோடிக்கணக்கான சொத்துமதிப்புள்ள அவர்களின் நிலத்தையும் சொத்தையும் முடக்கி வைத்திருக்கும் இன அழிப்பு செய்வது திருட்டா?
நிலமும் இல்லாமல் தொழிலும் இல்லாமல் வீட்டில் குழந்தைகள் பசியுடன் படுத்திருக்கும் போது எந்த அப்பன்தான் பார்த்து கொண்டிருப்பான்.?
இப்போது அவர்களுக்கு கிடைத்திருப்பது திருட்டு பட்டம். சரி இவர்களை உள்ளே பிடித்து போட்டாச்சு. மனைவி பிள்ளைகளின் கதி என்ன? மனைவி பிள்ளை பாலுக்கு ஏங்கி அழும்போது எவனோடாவது படுத்து விட்டு குழந்தைக்கு பசி ஆற்றுவாளா? மாட்டாளா?
இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் பட்டங்கள், திருடன், கொலைகாரன், விபச்சாரி. ஏனென்றால் இதைத்தான் இன அழிப்பு அரசு விரும்புகிறது. இந்த நிலைகளை திட்டமிட்டே உருவாக்கியதே இன அழிப்பு அரசுதானே! இதற்கு பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு. இப்போது நடக்கிற எந்த கூத்திற்கும் பெயர் புனர்வாழ்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. நல்லிணக்கமும் இல்லை.
அப்பட்டமான இன அழிப்பு.
தனி நாடு என்பதற்கும் அப்பால் காணி, காவல்துறை, நீதி அதிகாரங்களையாவது நாம் முதலில் போராடி பெறுவதே இந்த கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாக்க உதவும். சிங்கள நீதிக்குள் நாம் வாழ்வதும் ஒன்றுதான் சாவதும் ஒன்றுதான். இரண்டிற்கும் பெரிய வேறுபாடில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம்? கேள்விகளுடன் நின்று கொள்ளாமல் விடையை தேடுவோம். போராடுவோம்.
பரணி கிருஸ்ணரஜனி

Geen opmerkingen:

Een reactie posten