தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

ராஜபக்ஷ ஆட்சியில் எமது சுதந்திரம் நாளுக்கு நாள் பறிக்கப்படுகிறது!- சிறிதுங்க ஜயசூரிய (செய்தித் துளிகள்-5)


இலங்கை பாதுகாப்பற்ற சுவர்க்கபுரி!- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:25.25 AM GMT ]
இலங்கை பாதுகாப்பற்ற சுவர்க்கபுரி என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்ஸக் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் தங்காலை பகுதியில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் குழு ஒன்றினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதுடன். மற்றுமொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை அவதானிப்பதற்காக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜைக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதிலும், அது இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பாதுகாப்பு அற்ற நாட்டிற்கு செல்வதில் அனைவரும் விழிப்புடன் இருங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ராஜபக்ஷ ஆட்சியில் எமது சுதந்திரம் நாளுக்கு நாள் பறிக்கப்படுகிறது!- சிறிதுங்க ஜயசூரிய (செய்தித் துளிகள்-5)
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 02:50.51 AM GMT ]
இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களின் பணத்தைக் கொண்டு மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றது. மின்சாரக் கட்டணத்தை புதிய மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அதிகரித்துள்ளார்.
இதற்கு முன்னாள் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தக் கட்டண அறவீட்டை அமைச்சர் சம்பிக்கவே மேற்கொண்டதாக பவித்ரா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், ஜனாதிபதி கட்டணத்தை குறைக்க வேண்டுமென தற்போது தெரிவித்துள்ளார். கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட போது இவர்கள் உறங்கிக் கொண்டா இருந்தார்கள்.
அலிபாவும் 40 திருடர்களும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது. இந்த அரசாங்கமும் நாடும் நெருக்கடி நிலையை அடைந்துள்ளது.
ராஜபக்ஷ ஆட்சியில் எமது சுதந்திரம் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டு வருகின்றது என சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை குறைக்காவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும்-  ஜே.வி.பி.
அதிரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணங்களை ரத்து செய்யாவிட்டால், அரசாங்கம் நினைத்தும் பார்க்காத அளவுக்கு பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்று ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
ஜே. வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார்.
கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவதோ அல்லது பகுதி அளவில் குறைப்பை ஏற்படுத்துவதையோ தங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களின் விருப்பம் இன்றியும், காரணம் அற்றவகையிலும் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இதற்கு இந்த மாதம் 20ம் திகதி வரையில் அரசாங்கத்துக்கு அவகாசம் இருக்கிறது.
அதற்குள் மின்சார கட்டணங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், பெருந்தோட்ட தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டு, பாரிய தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என்று கே.டி.லால்காந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் 11 பேர் ஆந்திராவில் கைது
ஆந்திராவின் கோதாவரி கிழக்கு கடற்பரப்பில் நேற்று இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக காக்கிநாடா துறைமுக கடல்பரப்பில் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 11 இலங்கை மீனவர்கள் இரண்டு படகுகளிலும் சில மீன்பிடி உபகரணங்களுடனும் தமது எல்லையில் உட்பிரவேசித்ததாக காக்கிநாடா துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், படகுகளுடன், ஒருதொகை மீன்களும், உபகரணங்களும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டதாக பி.ரி.ஐ இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 45 நாட்கள் மீன்பிடி தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய கடற்பரப்பில் நுழைந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இந்த வருடத்தின் ஆரம்ப காலாண்டில் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் அதிகரித்துள்ளதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது. இதன்போது, 42 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முதல் காலாண்டில் 40 பில்லியன் ரூபா வருமானமே பெறப்பட்டிருந்தது. உயர்ந்த தரத்துடன் தேயிலை கொளுந்துகள் பெருந்தோட்டங்களில் இருந்து பெறப்பட்டமையே இதற்கான காரணம் என்றும் தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் நேரடியான லாபம் சிறு தேயிலை உற்பத்தியாளர் மற்றும் தேயிலை தொழிற்துறையை சார்ந்தவர்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த 5 பேர் கைது
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் இலங்கையுள் பிரவேசிக்க முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
நேற்று அவர்கள் உருமலை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூன்று பேர் பெண்கள் எனவும் ஒரு மூன்று வயது குழந்தையும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் இலங்கையில் இருந்து முன்னர் அகதிகளாக தமிழகம் சென்றவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten