தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

மனோ மீது தாக்குதல்: பதற்றம் !



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்துகொண்டபோதே கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்றம் நிலவியது. தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் தலைவர்கள்,முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டனர். இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு பிரிவினரும் தங்களுடைய ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாக மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளார்.தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களை தடுக்கமுட்பட்டபோதே அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன்- நுவரெலியா வீதியில் மூன்று மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.


Geen opmerkingen:

Een reactie posten