[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 01:39.11 AM GMT ]
மாத்தளை வைத்தியசாலை பிரதேசத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1989ம் ஆண்டு காலப் பகுதியில் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் உடையது என ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினரும் தற்போது இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவர்கள் அப்போதிருந்த அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்காக கொல்லப்பட்டவர்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாத்தளை மருத்துவமனைக்கு பின்புறமாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்னை நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த வைத்தியசாலை பிரதேசத்தில் இருந்து இதுவரை 154 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
எனினும் இவ்வாறான கொலைகள் அரசாங்கங்களின் வேறுப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை புதைகுழி மற்றொரு சோதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 04:46.26 AM GMT ]
அடுத்த சில நாட்களில் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அதன் விசாரணைப் பரப்பு, கால அவகாசம் குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்த போதிலும், இந்தப் பத்தி எழுதப்படும் வரை அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்தப் பத்தி வெளியாகும் போது, ஆணைக்குழு பற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகியிருக்கவாம். எனினும், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.
முறைப்படியான நீதிமன்ற விசாரணையே தேவை என்று ஜே.வி.பி. யின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 154 பேரின் எலும்பு எச்சங்களும், 81 மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நீண்டகாலத்துக்குப் பின்னர் ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலப் படுகொலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 1986ம் ஆண்டுக்கும், 1989ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்றும், சித்திரவதை செய்யப்பட்டே அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தடயவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால் இவை ஜே.வி.பி. சந்தேகநபர்களின் உடல்கள்தான் என்பது உறுதியாகியுள்ளன.
முன்னதாக, இவை 1940களில் மாத்தளையில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொல்லப்பட்டவர்களின் உடல் எச்சங்கள் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது. ஆனால் இவை ஜே.வி.பி கிளர்ச்சி அடக்கப்பட்ட காலத்துக்குரியவை என்றும், உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பியது ஜே.வி.பி.
ஜே.ஆா.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்திலேயே இந்தப் புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையிலும் இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. ஐ.தே.க.
இந்தப் புதைகுழி குறித்து மட்டுமன்றி, 1971ம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட காலத்து படுகொலைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சஜித் பிரேமதாச.
மேலும் விடுதலைப் புலிகள், ஜே.வி.பி. யினர், ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்று எல்லாத் தரப்பினரதும் படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இத்தகைய நிலையில் வேறு வழியின்றியே அரசாங்கம் இந்தப் புதைகுழி குறித்தும் விசாரிக்க இணங்கியுள்ளது.
இந்தப் புதைகுழி குறித்து சுதந்திரமான அரசியல் தலையீடுகளற்ற நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டால், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், இப்போது உயர்நிலை படை அதிகாரிகளாக உள்ள பலரும் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
கோத்தபாய ராஜபக்சவையும், மூத்த இராணுவ அதிகாரிகளையும் இதில் சிக்க வைப்பதற்கே, இந்தப் புதைகுழி குறித்து விசாரணை நடத்த ஐ.தே.க. வும், ஜே.வி.பி.யும் கோருவதாக பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையப் பொறுப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் நீதியான விசாரணை நடத்தப்பட்டால் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பதிலளிக்க வேண்டிவரும் என்பதை தெரிந்துகொண்டே தான், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏதாவது கண்துடைப்பு விசாரணையின் மூலம் இந்த விவகாரத்தில் இருந்து, கோத்தபாய ராஜபக்சவை விடுவிக்காது போனால், இறுதிப்போர் காலத்துக் குற்றச்சாட்டுகளைப் போன்று, தெற்கிலும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அரசாங்கம் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது.
மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதைகுழிக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு? என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
1989ல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்ட ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
ஜே.வி.பி. யினர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். மின்கம்பங்களில் கட்டி, சுட்டுத் தொங்க விடப்பட்டனர். தலைகளும், உடல்களும் வெட்டப்பட்டுத் தனியே ஆறுகளில் வீசப்பட்டன.
எங்கு பார்த்தாலும் பிணவாடையே வீசியது. திரும்பிய பக்கமெல்லாம் கருகிய பிணங்களே கிடந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, எத்தகைய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதேபோன்ற கொடூரமான அணுகுமுறையே ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இது மாத்தளையில் மட்டும் இடம்பெறவில்லை. வடக்கு தவிர்ந்த கிழக்கு உள்ளிட்ட ஏனைய எல்லா இடங்களிலும் நிகழ்ந்தன.
அப்போது தெற்கில் சிங்கள இளைஞர்கள் படுகொலை மற்றும் காணாமற் போனவர்கள் பிரச்சினையை இப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜெனிவாவுக்கு கொண்டு சென்றிருந்தார். ஆனால் அதன் பின்னர் பெரிதாக எவரும் இதனை வெளியே கொண்டு வந்து நீதி விசாரணை நடத்தக் கோரவில்லை.
1995ல் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு வந்த பின்னர் சூரியகந்த புதைகுழி வெளிச்சத்துக்கு வந்த போது அது பற்றி விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அதன் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
ஜே.வி.பி. யினர் காலத்துப் படுகொலைகளில் அரச படையினரும், பொலிஸாரும் தொடர்புபட்டிருந்த போதிலும் எவருமே அது குறித்துக் குரல் கொடுக்காததற்குக் காரணம் 1990களில் விடுதலைப் புலிகளுடன் வெடித்த போர் தான்.
ஜே.வி.பி. யினர் கூட இது குறித்துக் குரல் எழுப்பவில்லை என்பது தான் வேடிக்கை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அரச படையினரை உளவியல் ரீதியாக பாதித்து விடும் என்பதால் தான் எல்லாத் தரப்பினருமே ஜே.வி.பி. காலத்து கொலைகள் குறித்து அடக்கி வாசித்தனர்.
இப்போது புலிகள் இல்லை. புலிகளுக்கு எதிரான போர் இல்லை. அதனால் துணிந்து அரச படையினரை சந்திக்கு இழுக்க தயாராகி விட்டனர்.
இதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்தப் புதைகுழிக்கும் இறுதிப்போர் காலத்துப் படுகொலைகளுக்கும் இடையில் இருக்கின்ற சில ஒற்றுமைகள் தான்.
அதுதான் ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு வந்துள்ள பிரதான சோதனை.
மாத்தளையில் சடலங்கள் புதைக்கப்பட்ட காலப் பகுதியில் கோத்தபாய ராஜபக்ச மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
அப்போது இராணுவ இணைப்பதிகாரிகளின் அதிகாரம் அரசாங்க அதிபர்களை விட அதிகமானது.
அதுமட்டுமன்றி கஜபா றெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.
புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளை வைத்தியசாலையின் அருகேயுள்ள விஜய வித்தியாலயவிலும், ஓய்வு விடுதியிலும் அப்போது கஜபா படைப்பிரிவினர் முகாமிட்டிருந்தனர்.
இவையிரண்டும் இராணுவ சித்திரவதைக் கூடங்களாகவும் தடுப்பு முகாம்களாகவும் இயங்கியதற்கு இப்போதும் சாட்சிகள் பலர் உள்ளனர்.
அவற்றுக்கெல்லாம் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அவரின் கீழ் இறுதிப் போர்க்கால போபர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவத் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண போன்றோரும் மாத்தளையில் தான் அப்போது பணியாற்றினர்.
இதுதான் இந்த விவகாரத்தில் உள்ள முக்கியமான திருப்பம்.
சுசந்த ஜனக, றோகண நிசாந்த என 17, 18 வயதுச் சகோதரர்கள் 1989ம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் ஓய்வு விடுதி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களின் தாயார் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
மூன்றாவது நாள் அவர்களின் தாயார் கமலாவதி முகாமுக்குச் சென்றபோது ஒரு பெயர்ப்பட்டியல் வாசிக்கப்பட்டது.
அதில் சிவப்பு மையினால் சிலரது பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. அதில் கமலாவதியின் இரு மகன்களும் அடங்கியிருந்தனர்.
யு.பி.ஆர். பெரேரா என்ற ஒரு இராணுச் சிப்பாய் அவர்கள் அங்குதான் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று உறுதி செய்திருந்தார்.
பின்னர் தற்போது அமைச்சராக உள்ள நந்திமித்ர எக்கநாயக்கவிடம் தாயார் கமலாவதி சென்று முறையிட்டார்.
அவர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேசிவிட்டு, அவர்கள்ஓய்வு விடுதி முகாமில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரைச் சென்று சந்திக்குமாறும் கூறியிருந்தார்.
ஆனால் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்கச் சென்ற போது வாசலில் நின்ற படையினர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு நாளும் முகாமுக்கு சென்றபோது கமலாவதியிடம் அவரது பிள்ளைகள் காட்டப்படவேயில்லை.
பின்னர் அவர்களை வேறு முகாமுக்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் வீடு திரும்பவேயில்லை. காணாமற்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட போதும், அதை இன்னும் எடுக்காமல் இருக்கிறார் கமலாவதி.
இதுபோன்று பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் முறையான விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியமளிக்கத் தயாராகவே உள்ளனர்.
அப்போது மாத்தளை மருத்துவமனையின் இரு விடுதிகளில் கூட இராணுவத்தினரே தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் மாத்தளைப் புதைகுழி குறித்து நீதியான விசாரணை ஒன்று நடத்தப்படுமானால் கோத்தபாய ராஜபக்ச மட்டுமன்றி அப்பகுதியில் பணியில் இருந்த ஏனைய இராணுவ அதிகாரிகளும் விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
ஜனாதிபதி ஆணைக்குழு என்பது அப்படி யாரையும் குற்றவாளியாக பெயர் சூட்டுமா? என்பது சந்தேகம் தான்.
ஜனாதிபதி ஆணைக்குழு என்பது அதன் கட்டுப்பாட்டு எல்லைகளுக்கு அப்பால் செல்லாது. அத்துடன் இதன் அறிக்கையைக் கூடப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இலங்கையின் வரலாற்றில் இப்படி எத்தனையோ ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைக்குப் போயுள்ளன.
அதனால் தான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளைப் புதைகுழி விவகாரத்தில் கோத்தபாய ராஜபக்சவையும், இராணுவ அதிகாரிகளையும் சிக்க வைக்க முனைவதாக அரசாங்கம் கூறுகிறது.
எனினும் குறிப்பிட்ட இடத்தில் நடந்த சுற்றவளைப்புகளுக்கும், அதன்போது கைது செய்யப்பட்டவர்கள் காணாமற் போனதற்கும், முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் போது இராணுவத்தினர் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.
அதுவும் நீதிக்குப் புறம்பான கொலைகள் என்று வரும்போது தனியே குற்றவாளிகள் மட்டும் விசாரணயை எதிர்கொள்வதில்லை. அந்தப் படைப்பிரிவுக்குப் பொறுப்பானவர்களும் விசாரிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் கோத்தபாய ராஜபக்ச விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இது எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறது? என்பது கேள்வி.
எனினும் நீதியான முறைப்படியான விசாரணை என்று வந்தால் இத்தகைய விசாரணையில் இருந்து அவரால் தப்பிக்க முடியாது.
அவ்வாறான நிலை ஏற்படும்போது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அழுத்தங்கள் இன்னும் அதிகமாகும்.
ஏனென்றால் இரு சம்பவங்களிலும் தொடர்புடையவர்களாக இருப்பது அதே அதிகாரிகள் தான்.
இந்த நிலையில் சர்வதேச விசாரணை அழுத்தங்கள் புதிய கோணத்தை அடையலாம்.
இந்தப் புதைகுழியை இனிமேல் அரசாங்கம் இப்படியே கிடப்பில் போட்டு மூடி விடவும் முடியாது.
அதேவேளை இந்தப் புதைகுழியை கிண்டிக கிளறப் போனால் பல உண்மைகளை அரசாங்கம் ஏற்கவும் வேண்டி வரும்.
முள்ளிவாய்க்கால் புதைகுழிகளைத் தோண்டாமல் காலத்தை இழுத்தடிப்பதில் அரசாங்கம் வெற்றி கண்டாலும்' மாத்தளைப் புதைகுழியின் உண்மைகளைத் தோண்டுவதில் இருந்து நெடுங்காலத்துக்கு தப்பிக்க முடியாது.
இதுபோன்ற சூழ்நிலை முள்ளிவாயக்காலுக்கும் வராமல் போகாது.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten