[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 11:32.04 PM GMT ]
தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சிடும் பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது எரியூட்டப்பட்ட இயந்திரப் பகுதியை மோப்ப நாயின் உதவியுடன் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இருப்பினும் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்கள் வரும்வரைக்கும் இயந்திரப்பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் மேற்கொண்டு எரியூட்டப்பட்ட இயந்திரப்பகுதியை பார்வையிட்டதுடன், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பாதுகாப்பிற்கென பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரையும் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கடந்த இரு தினங்களும் விடுமுறை தினங்கள் ஆகையினால், இராசாயான பகுப்பாய்வாளர்கள் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான திகதி அறிவிக்கவில்லை என்றும் எப்போது இரசாயன பகுப்பாய்வு நடைபெறும் என்பது பற்றியும் தெரியாதென்றும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மீறிய பொலிஸ் அதிகாரி! நயினை நாகபூசனி ஆலயத்தில் சம்பவம்!
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 12:00.32 AM GMT ]
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த கோவிலுக்கு வந்திருந்த போது கடைப்பிடித்த சம்பிரதாயத்தை மீறி நடந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது:
நேற்று திங்கட்கிழமை நயினாதீவு நாகபூசனி ஆலயத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரியொருவர், மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார்.
குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்ற சம்பிரதாயம் பண்டுதொட்டு நடைமுறையிலுள்ள விடயமாகும்.
எனினும், குறித்த பொலிஸ் அதிகாரி அவ்வாறு செய்யவில்லை.
அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சைக் கணக்கில் எடுக்கவில்லை,
குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த பூசகர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட்டுக் கொள்ள விரும்பவில்லை என்பதனால், பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்த தாம் விரும்பவில்லை என்று அங்கிருந்த பூசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த கோவிலுக்கு வந்திருந்த போது பூஜை வழிபாடுகள் மற்றும் சம்பிரதாயங்களை கடைப்பிடித்தார் என்பதனை குறித்த அதிகாரிக்கு தான் தெளிவுபடுத்தியதாக அந்த பூசகர் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரியின் ஆலயத்தின் புனிதத்துவத்தை கெடுத்த இந்த அநாகரிகமானதும், அடாவடித்தனமானதுமான செயற்பாடுகள் தொடர்பில் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களுக்குள் விசனம் தெரிவித்துக் கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten