தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

வடக்கில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து அரசியல் அநாதைகளாக்கவே திட்டம்!- உதயன் தாக்குதலுக்கு கண்டனம்!!


கிளிநொச்சி உதயன் அலுவலகத் தாக்குதல்!- அடிப்படை உரிமைகள் குழிதோண்டிப் புதைப்பு!- சிவசக்தி ஆனந்தன் கண்டனம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 09:51.02 AM GMT ]
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டு விநியோகப் பணியாளர்கள் படுகாயங்களுக்கு ஆளானதுடன் பிரசுர உபகரணங்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவமானது , தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான கடப்பாடுகளை அடியோடு குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இன்று  காலை கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி இனங்களுக்கிடையே மீண்டும் நல்லிணக்கம் ஏற்படவும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை அரசு மேற்கொள்ளவும் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், “ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்” எனத் தெளிவாகக் குறிப்.பிடப்பட்டுள்ளதோடு: பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், ஊடக நிறுவனங்களை அழித்தல் போன்ற சம்பவங்களையிட்டு புலன் விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
இந்நிலை தொடர்வதையிட்டு ஆணைக்குழு ஆழ்ந்த கவலை அடைகிறது. ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான மோசமான தாக்குதலினால் ஆணைக்குழு அதிர்ச்சியடைவதோடு அதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுபற்றி புலன் விசாரனை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதன் மூலமே நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட முடியும் எனவும் நல்லிணக்க செயன்முறைகளுக்கு தடை விதிக்கும் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதால் இனங்களிடையே நம்பிக்கையீனம் ஏற்படுவதோடு, நல்லிணக்க செயன்முறைகளுக்கு தடை விதிக்கும் இச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெறுகின்றன.
ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். புலன் விசாரணைகளை நிறைவுசெய்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்வதோடு,தகவல்களுக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எல். ஏல். ஆர்.சியில் தெளிவாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரை அரசால் உருவாக்கப்பட்டவையே அன்றி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டவையல்ல. தாமே கொண்டு வந்த தீர்மானங்களைத் தாங்களே மீறுவதிலும் தமக்கு ஏற்ற சிங்கள பௌத்த இனவாத நிகழ்ச்சி நிரலின்படியான செயற்திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதிலும் இவர்கள் வெற்றி காண்பவர்கள்.
ஏற்கனவே, அரசுடன் இணைந்திருக்கும் பௌத்தவாதக் கட்சிகளுக்கு மேலதிகமாக தற்போது பொது பலசேன, சிங்கள ராவய, ராவண பலய என்கின்ற பௌத்த பிக்குகள் தலமை தாங்கும் இனவாத அமைப்புக்களைக் கொண்டு இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஊக்குவிக்கின்றது.
இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக அவை பல்வேறு வடிவங்களில் தமது கொடூர அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அலுவலகத்தில் 30.03.2013 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வேளை இடம் பெற்ற கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு இதுவரை அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
வடக்கில் காணி அபகரிப்பு, வன்னியில் இடம்பெறும் காடழிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி சுவீகரிப்பு, ஆசியாவிலேயே மிக உயரமான புத்தர் சிலை நிர்மாணம், இராணுவக் குடியேற்றங்கள், தமிழ் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மீதான வாழ்வாதாரத் தடைகள், கைதுகள், காணாமற் போதல்கள் முதலான தமிழ் தேசிய இனத்தின் மீதான தொடர் ஆக்கிரமிப்புக்கள் அரசால் நிறுத்தப்படவேயில்லை.
ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் பின்பு இவைகள் புதிய வடிவில் புது உத்வேகம் பெற்றுள்ளன. அண்மைக் காலங்களில், யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களுள் உதயன் மற்றும் தினக்குரல் ஊடகங்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டன.
வன்னியில் பத்திரிகை விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதனால், மக்களின் தகவல் அறியும் உரிமை பேரச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைகள் தடுத்து நிறுத்தப்படவும் அலுவலகங்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், மக்களின் கருத்தறியும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படவும் தமிழர் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவும் உள@ர் ஊடகவியலாளர் அமைப்புக்கள், சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் உட்பட சர்வதேச சமூகம் முன் வர வேண்டும்.
இனிமேலும் இங்கு இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் தொடராதவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


வடக்கில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து அரசியல் அநாதைகளாக்கவே திட்டம்!- உதயன் தாக்குதலுக்கு பாஸ்கரா கண்டனம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:46.28 AM GMT ]
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீதும் ஊழியர்கள் மீதும் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் மக்கள் மீது ஆட்சியாளர்களும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணைக் குழுக்களும் கட்டவிழ்த்துவிட்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராக தளராத துணிவோடு களமாடிவரும் தமிழ் ஊடகங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீதும் ஊழியர்கள் மீதும் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது.
தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறை கொண்டு எழுதி வருவதையும், செய்தி வெளியிட்டு வருவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத கருத்துக்களை கருத்துக்களால் வெல்லத் திராணியற்று வன்முறைக் கலாசாரத்திலும் கொலைக் கலாசாரத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக விரோத சக்திகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலின் மூலம் சிறுபான்மை மக்களான தமிழ் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலை யார் எதிரொலித்தாலும் எந்த வழியில் எவரொருவர் போராடினாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உயிருக்கு சிறிதும் பாதுகாப்புக் கிடையாது என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 
அண்மைக்காலமாக தமிழ்ப் பத்திரிகைகள் மக்களின் கைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடக்கில் சில தமிழ்ப் பத்திரிகைகள் அண்மையில் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.
உதயன் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற போதும் இதுவரை அரசு தாக்குதல் மேற்கொண்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.  இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்
நேற்று உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, இனந்தெரியாத குண்டர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இரு பணியாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகைப் பிரதிகளை எடுத்து வந்த வாகனமும் குண்டர்களால் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து அவர்களைத் தொடர்ந்தும் அரசியல் அநாதைகளாக்குவதற்காகவே இத்தகைய தாக்குதலை ஊடகங்களின் மீது பேரினவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆண்டுதோறும் மாதம் தோறும் உதயன் மற்றும் சுடர் ஒளி பத்திரிகையாளர்களும் அந்த நிறுவனமுமே தாக்கப்பட்டு வருகின்றமை வழமையாகி விட்டது.
இலட்சக் கணக்கில் குறிப்பாக வடபகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் மத்தியிலேயே இந்தப் பகுதிகளில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் நடைபெறுகின்றன.
தமிழ் மக்களின் உரிமைக்குரலை முற்றாக அடக்கி அழித்து விடுவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஜனநாயகம் கட்டிக்காக்கப்படுகிறது என அரசு அடிக்கடி கூறிவரும் நிலையில்தான் உதயன் பத்திரிகையும் அதன் ஊழியர்களும் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதை அவதானிக்க முடிகிறது.
உரிமைகள், நீதி நியாயங்கள் மீறப்படும்போது வாய்பொத்தி, கைகட்டி அதற்கு ஒத்திதிசைவாக இருக்க வேண்டுமென அதிகார பலமுள்ள தரப்பு எதிர்பார்க்குமாயின் அங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றது என்பதே உண்மை.
ஊடக சுதந்திரம் மறுக்கப்படும்போது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளுமே மறுக்கப்படுகின்றன. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
எனவே, இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:41.20 AM GMT ]
கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியமைக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சிங்கள இனவாத அரசு செய்த தமிழ் இனப் படுகொலைகளை ஜெனீவாவில் அம்பலப்படுத்தியதற்காக, கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர் ஒளி பத்திரிகை அலுவலகங்களை சிங்கள குண்டர்கள் தாக்கி உள்ளனர்.
இதில் இரண்டு பத்திரிகை ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்கு இருந்த சிங்கள இராணுவத்தின் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்து உள்ளது.
அப்பத்திரிகையாளர்களின் உயிருக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிகள் நடத்திய கொலைவெறித் தாண்டவத்தை, ராஜபக்சவின் கூட்டம், தமிழ் ஈழத்தில் தொடர்ந்து நடத்தி வருவதன் கோர முகத்தை உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் உணர்ந்து, சிங்கள இராணுவத்தையும், சிங்களர்களையும் ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஈழத் தமிழர்களை தொடரும் இனக்கொலை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.எனத்தெரிவித்துள்ளார்.

கிளி. உதயன் அலுவலகத்தில் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது!- யோகேஸ்வரன் பா.உ. கண்டனம்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 05:37.46 AM GMT ]
இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள்  கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகத்தில் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இச் செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இன்று புதன்கிழமை அதிகாலை 4.50 மணி அளவில் முகம்மூடி அணிந்த ஆறுபேரும், முடிமூடி அணியாத ஒருவருமான ஏழு பேர் சேர்ந்து திடீரென உதயன் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அதன் முகாமையாளர், உத்தியோகத்தர், ஊழியர்கள் உட்பட்டோரை பொல்லுகளாலும், இருப்புகளாலும் பலமாக தாக்கியதுடன் அலுவலக உபகரணங்களையும், வாகனங்களையும் உடைத்த காட்டுமிராண்டித் தனமான செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும், அவர்களது அலுவலகங்கள், தொழில் நிலையங்கள், ஊடகத்துறைகள் மீதும் மறைமுகமாக தாக்கும் செயற்பாட்டை கொண்டுள்ளது என்பதை இச்செயற்பாடு காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் பூரண பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள கிளிநொச்சி நகரத்தின் மத்தியில் கரடிபோக்கு சந்தியில் உள்ள உதயன் பத்திரிகை ஊடகத்தின் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல் மேற்கொண்டிருப்பதை பார்க்கும் போது இத்தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டிய அவசியம் உள்ளதை தெளிவாக காட்டி உள்ளது.
குறிப்பாக இங்கு தாக்குவதற்கு வருகை தந்தவர்கள் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்திற்கு தாக்க வந்தவர்கள் சிங்களம் பேசி வந்தது போன்று ஏழு பேரும் சிங்களம் பேசிக் கொண்டே வந்துள்ளனர்.
இவர்கள் ஆரம்பத்தில் பத்திரிகை விநியோகத்திற்காக பத்திரிகைகளை கொண்டு செல்ல இருந்த சாரதியை தாக்கி விட்டு பின் உள்ளே புகுந்து நித்திரையில் இருந்த பத்திரிகை முகாமையாளரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அங்கு தொழில் புரியும் 25 வயதான இளைஞர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அங்கிருந்த கணணிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை தாக்கியுள்ளனர். அதன்பின் ஓடி விட்டனர். அதிகாலை வேளையில் நடைபெற்ற இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட அலுவலக உத்தியோகத்தர் மூவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய ஆட்சியில் ஊடகங்களுக்கும் சுதந்திரம், பாதுகாப்பு இல்லை என்பதை இந்நடவடிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் என்பவருக்கு இவ் நிறுவனம் சொந்தமானது என்பதனாலேயே இது தாக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் தற்போதைய ஆட்சியில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுவதையே இச்செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.
எனவே இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊமையாக இருக்க முடியாது. எமது மக்களின் ஜனநாயக செயற்பாடு ஒடுக்கப்படுவதை ஏற்கமுடியாது.
எனவே இதற்கான முடிவையும் எங்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் சர்வதேசம் உறுதிப்படுத்த அவசரமாக செயற்பட வேண்டிய அவசியம் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. என சர்வதேச சமூகத்துக்கு தெரிவிக்கின்றோம்.
ஜனநாயகம் மற்றும் உள்நாட்டு பிரச்சினை பற்றியும், சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழர் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்க திட்டமிடும் இவ்வரசாங்கம், தற்போது ஊடகங்கள் தாக்கப்படுவதையும் அரசியல் கட்சிகளின் ஒன்றுகூடல் தாக்கப்படுவதையும், எவ்வாறு சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறி பேய்க்காட்ட முடியும்.
எனவே அரசாங்கம் இத்தாக்குதல் சார்பாக நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளை வெளிக்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன் என தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten