தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

யாழ். மாவட்ட எல்லை நிர்ணயம் இரகசியமாக!


வடக்குமாகாண சபைத் தேர்தல் தொகுதி வாரிமுறைமையில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், யாழ். மாவட்ட எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூர் ஊடகங்களில் எதுவித விளம்பரங்களும் செய்யப்படாமல் அரச ஊடகங்களில் மாத்திரமே விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கும் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க, உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மாவட்ட எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வட்டார முறைமையைக் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லை மீள் நிர்ணயக் குழு அமைக்கப் படுகின்றது. இதன் தவிசாளராக மாவட்ட அரச அதிபர் செயற்படுவதுடன் அவருக்குக் கீழே 5 பேர் பதவி வழியாக உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் யாழ். மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணான வகையில் 6 பேர் அமைச்சர் அதாவுல்லாவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் திணைக்களத்தின் சார்பில் எஸ். அச்சுதனும், மாவட்டம் அமைந்துள்ள மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் பிரதிநிதியாக க. வரதீஸ்வரனும், நில அளவையாளர் தலைமையதிபதித் திணைக்களத்தின் சார்பில் ஐ.ஈஸ்வரமூர்த்தியும், தொகை மதிப்புப் புள்ளி விவரத் திணைக்களத்தின் சார்பில் எஸ். உதயகுமாரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட அமைச்சரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட பகிரங்க அலுவலராக ஒருவரை நியமிக்க முடியும். ஆனால் யாழ். மாவட்டக் குழுவில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கமும், சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ். மகேஸ்வரனும் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குழுவின் தவிசாளர் என்ற வகையில் மாவட்ட செயலரிடம் கேட்டபோது, இந்த நியமனங்கள் அமைச்சர் அதாவுல்லாவினால் நேரடியாக வழங்கப்பட்டன. யார் யார் பதவி வழியாக நியமனம் பெற்றனர் என்பது தொடர்பில் எதுவும் தெரியாது என்றார்.
இதே போன்றே கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட எல்லை மீள் நிர்ணயக் குழுவில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. எனத் தெரிவிக்கப்பட்டது

Geen opmerkingen:

Een reactie posten