தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

பூந்தமல்லி சிறப்பு முகாமில் 8வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்!- கண்டு கொள்ளாத தமிழக அரசு!!


ஈழப் பிரச்சனை தேசிய பிரச்சினையாக பார்க்கப்படவில்லை!- கொங்குநாடு ஈஸ்வரன்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 03:47.25 PM GMT ]
ஈழப் பிரச்சனை தேசிய பிரச்சினையாக பார்க்கப்படவில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக சட்டசபையில் இலங்கை நட்பு நாடு கிடையாது என்று இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
மத்திய அமைச்சர் சால்மான்குர்ஷித் தமிழக சட்டசபையின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸின் நிலைப்பாடு இதுவென்று நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற தேசிய கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை அகில இந்தியத் தலைமை மூலமாக அறிவிக்கவேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தக் கட்சியினுடைய மாநிலத் தலைவர்கள் செய்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசின் தீர்மானங்களை தேசியக் கட்சிகளாகிய இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை சந்தேகமின்றித் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தீர்மானங்களை தேசிய அளவில் ஏற்றுக் கொள்ள மறுத்தால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் தனிமைபடுத்தப்பட வேண்டும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை இந்திய தேசத்தின் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய கடமை தேசியக் கட்சிகளுக்கிருக்கிறது.
இதுவரை இது தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்கப்படுகிறதே தவிர தேசிய பிரச்சனையாகப் பார்க்கப்படவில்லை என்பதுதான் எங்கள் ஐயப்பாடு.
இந்திய தேசத்தின் பிரச்சனையாக தேசியக் கட்சிகள் ஏற்றுக்கொண்டு அகில இந்திய அளவிலே அனைவரின் கவனத்தை ஈர்க்கின்ற வகையிலே ஆர்ப்பாட்டமோ, உண்ணாவிரதமோ இலங்கைத் தமிழர்களை ஆதரித்து இவர்கள் செய்தார்களா?
தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் இங்கிருந்து டில்லிக்குச் சென்று அரசின் கவனத்தை ஈர்க்கின்ற முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஏன் தேசியக் கட்சிகள் என்பவர்கள் தமிழர்களுக்காகச் செய்யவில்லை.
இனிமேலும் தமிழர்கள் ஏமாறத் தயாராக இல்லை. அதைத் பிரகடனப்படுத்தத்தான், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சில கட்சிகள் அதை எதிர்த்துக்கூட வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.
காவிரித் தண்ணீரைப் பெறுவதிலும் முல்லைப் பெரியார் தண்ணீரைப் பெறுவதிலும் கூட தேசியக் கட்சிகள் நமக்கு உதவவில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து இரட்டை வேஷம் போடக்கூடாது.
அடுத்த தேர்தலுக்குப் பிறகு டில்லியில் அமைகின்ற ஆட்சி தமிழகம் சொல்வதைத் தட்டாமல் செய்ய வேண்டும். அப்போது தான் நம் இலங்கை வாழ் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு தமிழனுக்கும் தான் இந்தியன் என்ற உணர்வும் மங்காமல் இருக்கும். தமிழர்களின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக ஒரே அணியாக இருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற, போர்குற்றம் புரிந்து இனப்படுகொலை செய்த ராஜபக்ஸவை போர்க்குற்றவாளியாகக் கூண்டேற்ற இந்திய அரசை நம் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர 40 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்க வைக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர வேண்டி வந்தால் கூட அவர்கள் தயாராக வேண்டும்.
தமிழன் தலை நிமிர எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராகி தமிழ் உணர்வை எதிர்ப்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

பூந்தமல்லி சிறப்பு முகாமில் 8வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்!- கண்டு கொள்ளாத தமிழக அரசு
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 05:30.34 PM GMT ]
பூந்தமல்லி சிறப்பு முகாமில் கடந்த எட்டு நாட்களாக உண்ணா நிலையில் இருக்கும் ஈழத்தமிழரான சாந்தகுமாரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
சிறப்பு முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே இவரது ஒரே கோரிக்கை ஆகும்.
வெளிநாட்டனர் வாழ் சட்டத்தின் படி அகதியாக வந்த ஒருவர் அவரது குடும்பத்துடன் முகாமில் வாழலாம். இப்படி ஒரு சட்டம் இருந்தும் பூந்தமல்லி சிறப்பு முகாமைப் பொறுத்தவரை குடும்பத்தை கூட பார்க்க இங்குள்ள முகாம்வாசிகளுக்கு அனுமதி இல்லை என்பது தான் கொடுமை.
கியூ பிரிவு காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் முகாம்வாசிகள் சொல்லவொன்னா துயரத்தில் வாடுகிறார்கள். பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்னுமும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக இவர்களை வதை முகாமில் வைத்து வாட்டுகிறது கியூ பிரிவு காவல் துறை.
எட்டு நாட்களுக்கு முன்பும் சந்திர குமாரின் மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகள் இவரை பார்க்க முகாமிற்கு வந்த போது அவர்களை பார்க்க அனுமதிக்காமல் தடுத்தது காவல்துறை. அனுமதி மறுக்கப்பட்ட உடன் சாந்தகுமாரின் மனைவி அதே இடத்தில் அமர்ந்து போராடினார்.
ஒரு இரவெல்லாம் வெளியில் குழந்தைகளுடன் கிடந்தார் . பின்பு காவல்துறை அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதை கேள்விப் பட்ட சந்திரகுமார் தூக்க மாத்திரைகள் நிறைய உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றிய காவல்துறை மீண்டும் அவரை முகாமில் கொண்டு வந்து அடைத்தது. சந்திரகுமாரின் மனைவி குழந்தைகள் புழல் சிறையில் இருந்து விடுதலை அடைத்தாலும் சந்திர குமார் இன்னும் அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடவில்லை.
எட்டாவது நாள் ஆகியும் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இவரது உண்ணா நிலையை முடித்து வைக்க ஒருவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் இவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் இனி என்ன நடக்கும் என்று தெரியாமல் அவரது குடும்பத்தார் வேதனையில் உள்ளனர். தமிழக அரசு உடனே இவ்விடயத்தில் தலையிட்டு சந்திர குமாரின் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten