2012 ஆகஸ்ட் 13ம் தேதி அவுஸ்திரேலியா குடிவரவுத் துறையால் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவது என்று கூறப்பட்டது.
ஆனால் அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கரையைத் தொட்ட படகுகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை என்று அவுஸ்திரேலியா எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆகஸ்ட் 13 க்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் அகதிகளின் விண்ணப்பங்கள் வேறு நாடுகளில் வைத்து பரிசீலிக்கப்படும் என்றும் அகதிகளும் நௌரு, மாநஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த சட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில், பழைய படி Bridging விசா வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக அகதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். புதிதாக அகதிகள் படகுகளில் வந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன தான் நடக்கிறது?
புகலிடம்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் அகதி, தனது உயிருக்கும் நாளாந்த வாழ்க்கைக்கும் தனது சொந்த நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சொல்லும் பட்சத்தில் அவர் தற்காலிக அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வைத்திருக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
மேலதிக விசாரணையின் போது அதனை நிரூபிக்க வேண்டியதும் அகதியின் கடமை ஆகிறது. ஆனால் அவுஸ்திரேலியாவில் வேலை எடுத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்ததாக சொன்ன "அகதிகள்" திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிப்போம் ஆனால் வளமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு புகலிடம் கோரி வராதீர்கள் என்பதே இதன் கருத்து.
முகாம்களில் வாழ்க்கை - அவுஸ்திரேலியா மனிதாபிமானம்
தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள படகுகளை, அவுஸ்திரேலியா கடற்படை கண்டு பிடித்து, காப்பாற்றி கரையோரத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் கை அளிக்கிறது. உயிரைப் பணயம் வைத்து வந்த அகதிகளுக்கான அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
நல்ல உணவு, உடை,குளிரூட்டப்பட்ட அறைகள், மருத்துவ சேவை,கண்ணுக்கு கண்ணாடி, மனநல சேவை, உடல் பயிற்சி, ஆங்கில வகுப்புகள், கிரிக்கெட் உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள், மும் மதத்திற்கும் உரிய ஆராதனைகள், மொழி பெயர்ப்பாளர்கள், மருந்து வகைகள், தொலைபேசி என்று எல்லா வசதிகளையும் கொண்ட இடம் தடுப்பு முகாம் என்று அழைக்கப்படுகிறது.
இப்படியான அவுஸ்திரேலியா மனிதாபிமானத்தைக் கண்டு அகதிகள் நெகிழ்ந்து போகிறார்கள். இதற்கு நிறைய செலவாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கும் மருந்திருக்கிறது.
கடந்த மார்கழி மாதம் ,வறிய நாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியிலிருந்து 375 மில்லியன் டொலர்களை இந்தச் செலவுகளுக்காக அரசாங்கம் எடுத்துக் கொண்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக சில அமைப்புக்கள் குரல் எழுப்பின.
ஆனால் அரசாங்கமோ, உள்நாட்டில் இருக்கும் அகதிகளுக்காக அதிகப் பணம் தேவைப்படுகிறது. ஆகவே எடுத்துக் கொண்டேன் என்று கூறியது.'
அகதிகளுக்கான செலவு' என்று பொதுவாகச் சொன்னாலும், மேலதிக குடிவரவு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள்,மருத்துவ ஊழியர்கள், மற்றும் பெரும் தொகையான இதர ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் பயணச் செலவுகள், வாடகை என்று எல்லாச் செலவுகளும் உள்ளடங்குகின்றன என்பது ஒரு புறமிருக்க பல வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை மேம்படுத்தப்படுகிறது என்பதும் உண்மை தான்.
அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தடுப்பு முகாம்கள்
அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்ள நாடுகளுக்கு அகதிகள் அனுப்பப்பட்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஒரு சிலர் நௌருவுக்கும், மானஸ் தீவுகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அந்தத் திட்டத்திற்கும் வந்தது சிக்கல்.
மானஸ் தீவுகளின் எதிர்கட்சித் தலைவர் பெல்டேன் நாமாஹ் இந்தத் திட்டத்தை தீவிரமாக எதிர்த்து தேசிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஏகாதிபத்தியவாதிகள் எனது நாட்டுக்கு அறிவுறுத்தல் கொடுப்பதை நான் எதிர்க்கிறேன். அவுஸ்திரேலியா--- மானஸ் அரசாங்கங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் சட்ட வரைவிற்கு முரணானது.
அகதிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். தேசிய நீதிமன்றம் இதனை தடை செய்ய வேண்டும்." என்று முழங்கி வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அகதிகளை மானச தீவுகளுக்கு அனுப்புவதை தடை செய்யும் விதத்தில் இடைகாலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றார்.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் அகதிகள் அமைப்புக்கள் அவரது கருத்தையும் செயலையும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தன.
இது போதாதென்று, ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு, அவுஸ்திரேலியா கிரீன் கட்சி ஆகியவை நௌரு, மானஸ் தீவுகள் முகாம்களை நேரடியாகப் பார்வையிட்டு காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
அங்குள்ள தடுப்பு முகாம்களை மேம் படுத்தும் வரையில் அகதிகளை அங்கே அனுப்பக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டன.
மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று நடவடிக்கை ஆரம்பிக்கும் போதே, தேர்தல் பற்றிய அறிவித்தல் வந்தது. 2013 செப்டம்பர் 14ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
அவுஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட், தேர்தல் தேதியை 8 மதங்களுக்கு முன்பாகவே அறிவித்து இருக்கிறார். குடிவரவுத் துறையோடு சம்பந்தப்பட்ட அகதிகள் விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பெறத்தான் போகிறது.
அகதிகளை இந்த இரண்டு நாடுகளுக்கும் அனுப்புவது சிக்கலாகி விட்டது என்பது ஒரு புறம் இருக்க, அங்கிருக்கும் அகதிகளையும் திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுமோ என்னும் எண்ணமும் தலை தூக்கி இருக்கிறது.
செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் அப்படிப்பட்ட சூழல் உருவாவதை அரசாங்கம் விரும்பாது என்றே தெரிகிறது. ஆகவே அகதிகளை அவுஸ்திரேலியாவில் வைத்திருப்பது சாதகமான தெரிவாகக் கூடும்.
ஆயிரக்கணக்கான அகதிகளை தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதற்கு இடம் போதாமல் இருக்கிறது. bridging விசா கொடுத்து அவர்களை வெளியே விட்டால் தான் புதிதாகப் படகுகளில் வருபவர்களை உள்வாங்க முடியும் என்னும் நிலைமை இருக்கிறது. ஆகவே கட்டம் கட்டமாக வெளியே விடப்பட வேண்டியதும் கட்டாயமாகிறது.
அத்தோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்திரேலியப் படைகள் இவ்வருட இறுதியில் விலக்கிக் கொள்ளப்படும் போது மேலும் ஆப்கான் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனை சமாளிப்பதற்கும் அரசாங்கம் தயாராக வேண்டும்.
எதிர்க்கட்சியின் நிலைப்பாடு
சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த எதிர் கட்சி பேச்சாளர் Scott Morrison , அவுஸ்திரேலியா ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தங்களது கடும் போக்கை வெளிப்படுத்தினார். சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலியா கடற்படை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.
இலங்கையில் படகுகள் புறப்படும் போதே நிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். அகதிகள் அமைப்பின் கடும் கண்டனத்தை இக் கருத்துக்கள் சம்பாதிக்கின்றன.
ஜெனீவா சாசனத்தை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டாரா என்று எதிர் கேள்விகள் எழும்ப ஆரம்பித்து விட்டன.
ஆனால் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் ஆட்சியை பிடித்தால் இவை பற்றி யோசிக்கலாம்.
அப்படியே பிடித்தாலும், அவுஸ்திரேலியாவுக்குள் வந்து விட்ட அகதிகளுடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்ப முடியுமா என்ன? ஐக்கிய நாடுகள் அமைப்பு பார்த்துக் கொண்டிருக்கிறது.
வானவன்
Geen opmerkingen:
Een reactie posten