தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 februari 2013

தினக்குரல் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் அமைப்பு கண்டனம் !


யாழ். புத்தூர் பகுதியில் நேற்று இனந்தெரியாதோரால் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மோசமாக தாக்கப்பட்டமையையும், தினக்குரல் பத்திரிகைகளும், மோட்டார் சைக்கிளும் எரியூட்டப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களும், ஊடக ஊழியர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், மிரட்டப்படுவதும் இலங்கையில் அதிகரித்துள்ளதை அண்மைக்கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஒரு வாடிக்கை நிகழ்வாகவே மாறிவிட்டுள்ள நிலைமை தோன்றியுள்ளது.
வடக்கு - கிழக்கு பகுதிகளின் உண்மை நிலவரங்களையும், அன்றாடம் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அடக்குமுறைகளையும், துன்பங்களையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் பணியை தமிழ் ஊடகங்களே துணிவுடனும், நேர்மையுடனும் செய்துவருகின்றன என்பதே இவ்வாறான தாக்குதல்களுக்கு முதன்மையான காரணமாகுமென்பதில் ஐயமில்லை.
குடாநாட்டில் எங்கும் எப்போதும் படையினரின் பிரசன்னம் இருக்கும்போது தாக்குதல்களை நடத்தியவர்கள் யாரென தெரியாதென்பது முழுப்பூசணியை சோற்றுக்குள் மறைப்பதற்கு ஒப்பானது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் பின்னருங்கூட நிலைமைகள் இவ்வாறே தொடர்வதென்பது அரசின் அதிமெத்தனப் போக்கையே காட்டிநிற்கிறது.
அண்மையில் தகவல் சுதந்திரத்திற்கான எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பு நாடுகளுக்கான பத்திரிகை சுதந்திர தர வரிசையில் இலங்கை 163வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதாக உலகநாடுகளுக்கு உறுதியளிக்கும் அரசு, ஊடகங்களின்மீதான இவ்வாறான தாக்குதல்களை தடுத்துநிறுத்தத் தவறுவது அதன் மீதான அவநம்பிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
ஊடக சுதந்திரம் மறுக்கப்படும்போது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளுமே மறுக்கப்படுகிறது. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இனங்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் புளொட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten