திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று இந்தியாவிற்கு சென்றிருந்தார். ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன.
இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் சென்ற ஜனாதிபதி புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து கொழும்புக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten