அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவினை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா அறிக்கை செப்பெரம்பர் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்பினையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வின் தொடக்க உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்களது உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சிறிலங்காவின் புதிய அரசாங்கம், அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீளப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நம்பகமான பொறிமுறைகளை உருவாக்கும் போது, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடும்.
இந்தப் பொறிமுறை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்துடன் பரவலான ஆலோசனைகளை நடத்தவும், பாதிக்கப்பட்ட அனைவரதும், அவர்களினது குடும்பங்களினதும் முழுமையான தேசிய ஆதரவை உறுதிப்படுத்தவும், இந்த செயல்முறைiயின் உரிமையை உறுதி செய்வதற்கும், சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyGSZSUfqzD.html
Geen opmerkingen:
Een reactie posten