தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juni 2015

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விவாதம்

மஹிந்தவை விரட்டச் சென்ற நாம் வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளோம்!- ஹக்கீம்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:07.51 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விரட்டியடிக்கச் சென்ற நாம் வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தை விடவும் தற்போதைய அமைச்சரவை கடுமையாக நடந்து கொள்கின்றது.
அமைச்சரவையில் எமக்கு பேச இடமளிக்கப்படவில்லை.
கூட்டுப் பொறுப்பு காணப்படுவதனால் இவ்வாறு தடை ஏற்படுத்துவோரை பகிரங்கப்படுத்த முடியவில்லை. இது ஓர் மோசமான நடவடிக்கையாகும்.
தேர்தல் முறைமை மாற்றம் ஒன்றின் போது இதற்கு முன்னர் எப்போதும் அமைச்சரவை எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டதில்லை.
சில அமைச்சர்கள் சர்வாதிகாரிகளைப் போன்று நடந்துகொள்கின்றார்கள்.
இந்தக் கும்பலிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
20ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட முறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
ஜனாதிபதியின் தேர்தல் வெற்றிக்காக பங்களிப்புச் செய்த சிறு கட்சிகளை அழைத்து பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் நான் கோரினேன். நான் ஜனாதிபதியிடம் கெஞ்சினேன். எனினும் அது நடந்தேறவில்லை.
மறுநாள் நள்ளிரவில் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விவாதம்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:14.38 AM GMT ]
தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக விளக்கிக்கூறியுள்ளன. சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் புதிய தேர்தல் முறை மாற்றத்தினால் தமக்கு ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து இந்த விவாதத்தின் போது விளக்கமளித்துள்ளன.
தேர்தல் முறை மாற்றம் குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் கடந்தவாரம் வர்த்தமானியில் வெளியாகியிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரிக்கும் வகையிலேயே இந்தத் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இரட்டை வாக்குச்சீட்டு முறைமையற்ற இந்த திருத்த யோசனையானது சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி இந்தப் புதிய யோசனை தொடர்பில் ஆராய்ந்ததுடன் இதற்கு எதிராக கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து தமக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இந்த தேர்தல் முறை மாற்றயோசனை அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.
இந்த விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளான ஈ.பி.டி.பி., இ.தொ.கா., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளும் ஒற்றுமைப்பட்டிருந்தன.
இந்தக் கட்சிகளும் புதிய தேர்தல் முறைமாற்ற யோசனை சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்று குரல் எழுப்பியிருந்தனர். இதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் புதிய தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன.
தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதைப்போன்று தேர்தல் முறை மாற்ற யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமானால் அதற்கு எதிராக செயற்படுவது என்றும் மூன்றில் இரண்டு ஆதரவை பெறுவதை தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பது என்றும் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகள் முடிவு செய்திருந்தன.
இந்த நிலையில் தான், கடந்த திங்கட்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் புதிய தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்பில் இரண்டு தினங்கள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபால டி சில்வா கடுமையாக எதிர்த்துள்ளார். சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே புதிய யோசனை தயாரிக்கப்பட்டது. அமைச்சரவையிலும் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதனை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா விசனம் தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் சபை ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பித்த போது இந்த விவாதம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சபாநாயகர் சமல் ராஜபக் ஷ, விவாதத்திற்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தேர்தல் முறைமை தொடர்பில், பிரதான கட்சி களுக்கும் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
எனவே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சமூக பிரதிநிதிகளினதும் மக்களினதும் கருத்துக்களை அறிய வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருப்பதனாலேயே இந்த திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சகல கட்சிகளுடனும் பேசியே தேர்தல் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டது. அமைச்சரவையில் இதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தவேண்டிய அவசியம் இல்லை.
வேண்டுமானால் குழுநிலை விவாதத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இதனை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றவிடாது இழுத்தடிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிக்கின்றது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
விவாதத்தில் உரையாற்றிய சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இந்த யோசனையினால் தமது மக்களுக்கு ஏற்படவுள்ள அநீதிகள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தனர். புதிய தேர்தல் முறையானது யாழ். மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கையை 9 என்ற அடிப்படையில் நிலைபெறச் செய்ய வேண்டும்.
வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதி மிக்கதாகவும், அர்த்தபுஷ்டியுடையதாகவும், இருக்கும் வகையில் இந்த புதிய தேர்தல் முறை மாற்றம் அமையவேண்டும். புதிய தேர்தல் முறையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய தேவைப்பாடு கொண்டதாக இருக்கின்றது.
நாட்டினதும் மக்களினதும் ஜனநாயக வாக்குரிமை, வாக்களிப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும் என்று விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துக்கூறியிருந்தார்.
பரந்து பட்டு வாழ்கின்ற தமிழ் மக்களாலும், முஸ்லிம் மக்களாலும் வழங்கப்படுகின்ற வாக்குகள் அர்த்தபுஷ்டியானவையாக இருப்பதனை தேர்தல் முறை உறுதி செய்யவேண்டும். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கென 9 ஆசனங்கள் இருத்தல் வேண்டும் என்ற யோசனை புதிய தேர்தல் முறையில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேபோல் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று முன்தினம் சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் புதிய தேர்தல் முறையின் ஊடாக சிறுபான்மை கட்சிகளின் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களது பிரதிநிதித்துவம் குறைவடையும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
எனவே தொகுதிவாரி மற்றும் விகிதாசாரம் என்ற இரண்டு முறைமைகளிலும் தலா 50 சதவீத உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.
விவாதத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் புதிய தேர்தல் முறை யோசனை முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை மூன்றில் ஒன்றாக குறைத்துவிடும். எனவே இந்த யோசனையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியிருந்தார். இதேபோல் அமைச்சர் திகாம்பரமும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் ஒத்தி வைப்பு விவாதத்தின்போது தமது மன ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களது ஆதங்கங்கள் சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. எனவே இவ்விடயத்தில் சிந்தித்து புதிய தேர்தல் முறை மாற்ற யோசனை முன்வைக்கப்படுவதே சிறந்தது என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyGRZSUfw2B.html

Geen opmerkingen:

Een reactie posten