பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர் பரமலிங்கம் மீதான தாக்குதலுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:18.15 PM GMT ]
இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 18.06.2015 வியாழக்கிழமை நள்ளிரவு அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுமதிக்கும் வகையில் தாக்குதல் செய்துள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய செயற்பாட்டில் நிற்கும் மனிதநேய பணியாளர் மீதான இத் தாக்குதலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கடுமையாக கண்டிகின்றோம்.
தாயகத்தில் எமது உறவுகளின் உரிமைக்குரல்கள் அடக்கப்பட்டு இருக்கும் நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் அந்தந்த நாடுகளில் அமையும் சட்டங்களுக்கு அமைய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றோம்.
அந்தவகையில் ஏனைய பல மனிதநேய செயற்பாட்டாளர்கள் போல் திரு பரமலிங்கம் அவர்களும் தேசத்துக்காக பணியாற்றி வந்த நிலையில் தான் இனம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
மனிதநேயமற்ற இச்செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் கண்டிப்பதோடு இத் தாக்குதலை நடாத்தியவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நிற்கின்றோம்.
திரு பரமலிங்கம் அவர்கள் மீதான தாக்குதல் தேசியத்துக்கு விரோதமாகவே பார்க்கப்பட வேண்டும்.
எமது தேசிய விடுதலைப் போராட்டப் பயணம் இன்று மிகப்பெரும் சவால் மிகுந்த காலகட்டத்தில் நிற்கின்ற நிலையில் தாயகத்திலும் , புலம்பெயர் தேசங்களிலும் அனைவரும் ஒன்றுபட்ட சக்தியாக திரண்டு ஓர் அணியில் மாவீரர்களின் மற்றும் மக்களின் கனவை நனவாக்குவோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க புதிய அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்கின்றதாம்!
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:20.16 PM GMT ]
விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி ஆதார வலையமைப்புக்களை பலவீனப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கையின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மங்கள சமரவீர மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக இதற்காக இலங்கையுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும், தீவிரவாத முறியடிப்பு மற்றும் நிதி ஆதார வலையமைப்புகளுக்கு எதிரான எல்லா நிபுணர்களுடனும் அரசாங்க முகவர் அமைப்புகள் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றன.
அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உறுதியாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கை நிலையானதாக இருக்கும்' என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் அறிக்கையின் வெளிப்பாட்டுத்தன்மையை நோக்கின் அது மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மகிந்த தோல்வியடைந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ச உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும் புலிகளை அவரால் முற்றாக அழிக்க முடியவில்லை என்றும், தற்பொழுது உள்ள அரசாங்கம் சர்வதேச ரீதியில் புலிகளின் வலையமைப்பை பலவீனப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten