தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juni 2015

யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் நேற்று கைது! - தொடர்புடைய 7 பேர் இன்று கைது



யாழ்ப்பாணம்- சுதுமலை பகுதியல் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பல்கலைக்கழக மாணவன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்த படைச் சிப்பாய் நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரிடமிருந்து பல கொள்ளை மற்றும் வன்செயல்களுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்குமார் கபிலராஜ் என்ற குறித்த நபர் முன்னர் காங்கேசன்துறை படைமுகாமில் சிப்பாயாக கடமையாற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மேற்படி நபர் தான் தற்போது படையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல கொள்ளை மற்றும் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை கை துண்டாடப்பட்ட பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 சந்தேகநபர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இராணுவ சிப்பாயின் வழிநடத்தலில் யாழ்.குடாநாட்டில் பல்வேறு கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் இன்றைய தினம் அதிகாலை மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து பெருமளவு பணம், நகை, வாள், தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டதில் குறித்த மாணவனின் கை துண்டாடப்பட்ட நிலையில் குறித்த மாணவன் தற்போது வரையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராஜ்குமார் கபிலராஜ்(வயது24) என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவல் அடிப்படையில் இன்றைய தினம் கிளிநொச்சி- சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பகுதிகளைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், இவர்களிடமிருந்து நகைகள், 4 மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள், ஐபாட்கள், 6 லட்சத்து 96 ஆயிரம் ரூபா பணம் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த கும்பல் யாழ்.குடாநாட்டில் பல கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten