எங்கள் இனத்தின் மீது வேண்டுமென்றே வஞ்சம் தீர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என வடக்கு தமிழ் மக்கள் ஆதங்கம் கொண்டுள்ளார்கள்.
அண்மைக்காலமாக வடக்கில் ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலையால் வடபகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் ஆழ்ந்து போயிருக்கின்றார்கள். பாடசாலை மாணவர்களின் கல்வியினை சிதைப்பதற்கும், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தினை மழுங்கடிப்புச்செய்வதற்கென்றும் புதிது புதிதாக வன்முறைகளும், தேவையற்ற பழக்க வழக்கங்களும் புகுத்தப்படுகின்றன.
குறிப்பாக வடக்கில் போதைப்பொருட்களின் பாவனை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. அதிலும் 2009ம் ஆண்டிற்கு பின்னரே இவ்வாறான போதைப் பொருள் பாவனை பெருகத்தொடங்கியிருக்கின்றது.
அதேபோன்று இலங்கையில் மதுபாவனை விற்பனையில் முதலிடத்தை வகிப்பது வடக்கு மாகாணம் தான் என இன்னொரு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வாள்வெட்டுக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தமிழ் அரசியல்வாதிகள் பெரிதாக கையில் எடுத்து தமது பேசுபொருளாக கொள்ளாமல் தனியே தமது சுயநல அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும்.
ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இது தொடர்பாக பேசுகின்றார்கள். மற்றையவர்கள் நடக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் எப்படியாவது ஒரு சீட் பிடிக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள் என்று மக்கள் விசனம் கொள்வதனை காண முடிகின்றது.
இதேவேளை தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை நாளுக்கு நாள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றும். எமது தேசத்தில் நச்சுக்கிருமிகள் ஊடுருவியிருப்பதாகவும். அவர்கள் அடுத்த தலைமுறையினரை குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருப்பதாகவும், அவர்களின் ஒரே இலக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை தேசிய உணர்வற்றவர்களாக மாற்றப்பட்டு வேறு திசையில் அவர்களை பயணிக்க வைப்பதாகவே காண்ப்படுகின்றது.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பழக்கவழங்களை சரியான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதையும், கையில் அவர்களுக்கு கொடுத்தனுப்பும் செலவுத் தொகையிலும் கவனம் செலுத்துமாறும், பிள்ளைகளின் கல்வி மற்றும் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர்களோடு கலந்துரையாடுவது அவசியம் என்றும் புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
தம்மை தாமே சுயமாக கட்டுப்படுத்தும் ஆற்றலை நமது அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க அனைவரும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் இது என்றும் அவர்கள் கருத்துரைக்கின்றார்கள்.
தன்னை தானே நிர்வாகிக்கும் திறமை ஒவ்வொரு மாணவர்களிடமும் ஏற்படுத்தப்பட்டால் எவராலும் அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கமுடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்விடத்தில் அதிகம் பெற்றோர்களும் வகுப்பாசிரியர்களும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
அவர்கள் தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறையினரை அழிக்க எந்த வடிவத்திலும் செயற்படுவார்கள். நாமே எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையாயின் அழிக்க நினைக்கும் அவர்களுக்கு நாமே வழியமைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.
Geen opmerkingen:
Een reactie posten