ரணில் விக்ரமசிங்க தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பில் இருந்து புதிதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் செய்தி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பெரும்பான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுத் தேர்தலில் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்துள்ள இவ்வேளையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய அரசாங்கத்தினை இரண்டு பிரதான இருகட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக்கொண்டன. எனினும் குறுகிய காலத்திலேயே கட்சி தாவல்களும், கட்சிப்பிளவுகளும் நிகழ்ந்து கட்சிகள் பெரும் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளன.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் காணப்படுகின்றன.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரவிருக்கும் இந்த வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன முதலில் கட்சியின் பிளவை சீர்செய்து, கட்சியை ஒழுங்கமைத்த பின்னரே நாடாளுமன்றத்தினை கலைத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தினை கலைத்து பொதுத்தேர்தலை அறிவித்துள்ளார்.
இது ஏன் என கடந்த நாட்களாக அரசியல் ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
கொழும்பில் இருந்த வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று இவ்வாறு விமர்சனம் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஏற்படுகின்ற பிளவுகள் ஒவ்வொன்றும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான பலம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவுகளை சீர் செய்யாத ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். அதாவது ரணிலை மைத்திரிபால சிறிசேன அடுத்த பிரதமராக்க அவர் விரும்புகின்றார். அல்லது ரணிலின் நிர்ப்பந்தத்தின், கட்டாயப்படுத்தலின் மூலம் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
இதுவொருபுறமிருக்க, மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் கடும்வாக்குவாதங்கள் நிகழ்ந்து வருவதாகவும், இதன் எதிரொலியாகவே மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten