யார் என்ன கூறினாலும் என் மீது புலிப்பட்டம் சூட்டி னாலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டேயிருப்பேன் என முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருவது எந்தவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பதை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வெறுமனே அரசியல் சுயநலத்திற்காக வீணான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை அவர் கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
சுயநல இனவாத செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போதில்லை. எனவே பேராசிரியரான பீரிஸ் இனியாவது தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கான எனது குரலை யாரும் தடுத்திவிட முடியாது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் என்னாலான நடவடிக்கைகளை நான் எடுத்துக்கொண்டே இருப்பேன்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் என்று விஜயகலா மனேஸ்வரன் கோரியுள்ளமை நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து கேட்டபோதே திருமதி விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் விசாரணையுமின்றி விடுதலையுமின்றி வாடுகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் மனைவி, பிள்ளைகளை குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்க்கை வெறுத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானவர்களை விடுதலை செய்யக் கோருவதில் என்ன தவறை பேராசிரியர் பீரிஸ் காண்கின்றார்.
யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட சரணடைந்த 12 ஆயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வரையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகளை பேராசிரியர் பீரிஸ் அங்கம் வகித்த அரசாங்கமே இவ்வாறு விடுவித்திருந்தது. கே.பி. உட்பட புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு பதவி கொடுத்து முன்னைய அரசாங்கமே பாதுகாத்தது. இவ்வாறு பேராசிரியர் பீரிஸ் அங்கம் வகித்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தற்போது அப்பாவியான அரசியல் கைதிகளை நான் விடுவிக்க கோரியதை பிழையென அவர் வர்ணிப்பதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அவர் கூறுவதும் மடமைத்தனமான செயலாகும். நான் தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
அந்த மக்களுக்காக நான் குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவுகளைப் பிரிந்து பெரும் துயரங்களின் மத்தியில் வாழ்வதை நான் நன்கு அறிவேன். புலிகளின் இயக்க முக்கியஸ்தர்களை வைத்து தாலாட்டிய முன்னாள் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பேராசிரியர் பீரிஸ் தற்போது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளை திசை திருப்புவதற்காக நான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருக்கின்றார். இது அவரது அரசியல் சுயநலப்போக்கையே காண்பிக்கின்றது என விஜயகலா மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten