தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்து, டியூஸன் சென்ரர் ஒன்றிற்கு சேதம் விளைவித்த குழுவினருடன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனே கடும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.
இந்த மாணவர்கள் இருவரும் 2015 ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாககத் தெரிவித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு பாடசாலை அதிபரின் கடிதங்களை ஆவணமாகச் சமர்ப்பித்து, இவர்களுக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை. சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி மேல் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி இந்த நபர்கள் சம்பந்தமான முற்குற்றம் இல்லை என்றும், தற்சமயம் அவர்களுக்கு எதிராக வேறு வழக்குகள் எதுவும் இல்லை எனவும், உறுதிப்படுத்தியிருந்ததையடுத்து, நீதிமன்றம், கடும் நிபந்தனைகளை விதித்து இந்த மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்கி கட்டளைப் பிறப்பித்துள்ளது.
பிணையில் இருக்கும் காலத்தில் இவர்கள் இருவரும் ஏதாவது ஒரு குற்றம் புரிந்து, அது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டால், மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த பிணை உத்தரவை ரத்துச் செய்யுமாறு மல்லாகம் நீதவானுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசேட அனுமதி வழங்கி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இரண்டு சரீரப் பிணையாளிகள் கையொப்பமிட்டு இந்த மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்றும், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் காலை 9 மணிக்கு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten