[ விகடன் ]
தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கான கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வீரலட்சுமியை சந்தித்த போது அவர் வழங்கிய செவ்வி:-
நீங்கள் யார்? உங்கள் பின்னணி என்ன?
என் சொந்த ஊர் சென்னை. என் தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் சிறு வயதில் இருந்தே எனக்கு நற்பண்புகளைச் சொல்லி வளர்த்தார். வீரமங்கை வேலு நாச்சியார் போல ஒரு சிறந்த போராளி ஆகவேண்டும் என்பதே என் இலக்கு. எந்த அமைப்புகளிலும் இருந்தது இல்லை. நான் அடிப்படையில் தொழிற்சங்கவாதி. 17 வயது முதலே போராட்டக் களங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவள். சுதந்திர இந்திய தேசியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து தொழிலாளர்களுக்குப் பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளேன். சோனியா, ஜெயலலிதா என பல தவறான முன்னுதாரணங்கள்தான் பெண்களை அரசியலுக்கே வரவிடாமல் தடுத்துவிட்டது. அதனை மாற்ற நான் துணிந்துள்ளேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.
தமிழர் முன்னேற்றப்படையின் கொள்கைகள் என்ன?
2009-ல் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளைப் போல இங்கேயும் நம் சொந்த மண்ணில் தமிழ் இனம் அழிந்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம். தமிழர் முன்னேற்றப்படை தொடங்கப்பட்டதே காலம் காலமாக நமது தமிழ் மக்களை தெலுங்கர்களும் கன்னடர்களும்தான் திராவிடர்கள் என்கிற போர்வையில் ஆட்சி செய்து வருகிறார்கள். அதனாலேயே இதுவரை தமிழனுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. சாதி மறுப்பு, பூரண மது ஒழிப்பு, அரசு மற்றும் தனியார் துறைகளில் தமிழனுக்கு 85 சதவிகிதம் இடஒதுக்கீடு, தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற நான்கு கொள்கைகள்தான் எங்களது உயிர்மூச்சு.
இந்தக் கொள்கைகள் அனைத்தும் ‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கைகள் போல இருக்கிறதே?
இருக்கலாம். ஆனால், எங்களின் போராட்டக்களம் அவர்களில் இருந்து மாறுபட்டது. வரும் 2016 சட்டமன்றத் தேர்தல் முதல், தேர்தல் அரசியலையும் கையில் எடுக்க உள்ளோம். முதற்கட்டமாக 41 தொகுதிகளில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்.
சோபன்பாபு சிலை அகற்றம், குஷ்பு வீடு முற்றுகை போராட்டத்துக்கான பின்னணிகள் என்ன?
பிரபாகரன் சிலையை வைத்தால் அகற்றுகிறது தமிழக அரசு. நம் மக்களின் 20 பேர் உயிரைப் பறித்தது ஆந்திர அரசு. அந்த மாநிலத்தின் நடிகர் சோபன் பாபுவின் சிலையை சென்னையின் முக்கிய இடத்தில் வைக்க அனுமதித்திருக்கிறது. அதையும் அகற்ற வேண்டும் தானே? அதனால்தான் போராட்டம் அறிவித்திருந்தோம். ஆனால், என் மீதும் எங்கள் நிர்வாகிகள் மீதும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். குஷ்பு யார்? அவருக்கும் தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு? ஒரு வடநாட்டுப் பெண்மணி சினிமாவுக்கு வந்தால் நடித்துவிட்டுப் போக வேண்டியதுதானே?
தமிழனைத் தமிழன் ஆளவேண்டும் என்கிற கொள்கை இங்கு செல்லுபடியாகுமா?
ஏன் ஆகாது. நம்மைச் சுற்றி இருக்கும் மாநிலங்களைப் பாருங்கள். அந்த மக்களை அந்த மண்ணுக்கான மக்கள்தான் ஆள்கிறார்கள். நாமும் சில துரோகிகளின் கையில் நாட்டைக் கொடுத்துவிட்டு ரோட்டில் நிற்கிறோம். விஷால் ஒரு தெலுங்கர். அவர் எப்படி தமிழ் நடிகர்களை நிர்வகிக்கலாம்? ஆலோசனை சொல்வதோடு அவர்கள் இருக்கட்டும். நாங்கள் அதிகாரம் செய்துகொள்கிறோம். யார் வேண்டுமானாலும் தமிழ் மண்ணில் இருக்கலாம். ஆனால், தமிழனைத் தமிழன்தான் ஆளவேண்டும். செய்த துரோகத்துக்காக காங்கிரஸை நம் மக்கள் கருவறுத்தார்கள்.
பி.ஜே.பி-யும் அந்த நிலையைக் கூடிய விரைவில் தமிழகத்தில் சந்திக்கும். விரைவில் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக மாறுவோம்.
Geen opmerkingen:
Een reactie posten