காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய மூதூர் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
செயலக வளவில் நடைபெறும் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ் எதிரப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களால் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இருந்தார்கள்.
காலை 9.45 மணிக்கு குழுக்களாக வந்த சிவில் சமூக அங்கத்தவர்கள் மாவட்ட ரீதியாக இதில் கலந்து கொண்டார்கள்.
இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல்போனோரின் உறவினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு இந்த உள்ளக விசாரணையில் ஒரு வீதமும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் இவ்வாறான விசாரணை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற போது நானும் கலந்து கொண்டு எனது வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டிருந்தபோது விசாரணை செய்த நபர் நித்திரை கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் நான் அந்த நபரிடம் நான் எனது கணவர் காணாமல் போய் எனது 4 பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கஸ்டப்படும் நிலை குறித்தும் அவர் காணாமல் போன விடயம் குறித்தும் கண்ணீர் விட்டு சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பது சரியா? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன். நீங்கள் உங்களது பிரச்சினையை கூறுங்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் மேசையில் தூங்கியவாறு விசாரணைகளை மேற்கொண்டார்.
இது எந்த விதத்தில் காணாமல்போன எனது கணவரை மீட்கும் விடயத்தில் பாதிப்பு செலுத்தும் என்று பார்த்தால் வெற்றுப் பொருளாகத்தான் இருக்கும்.
எனவே தான் எங்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மாத்திரம் தான் காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவரையும் எங்களது உறவுகளையும் மீட்க முடியும். அதனால் தான் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார்.
மேலும், தனித்தனி மாவட்டங்களாக காணாமல்போன உறவினர்கள் கூடி கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியும் உரிய தீர்வு கிடைக்கப் பெறாத நிலையில் தான் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமல்போன உறவினர்களான நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கவனயீரப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம் என்றும் இங்கு கலந்து கொண்டோரால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணை வேண்டும், இடைக்கால அறிக்கையை வெளியிடு, காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகளுக்கு என்ன நிலை, எமக்கு எம் பிள்ளைகள் வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten