தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி கொண்டவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரின் மிகப்பெரிய நகைச்சுவைகளில் ஒன்று வரும். ஆனா வராது.! இது போன்றதே இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் ஆனா கலைக்கப்படாது. என்று இருந்த பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.
2015 தை 08 ஆம் திகதியோடு இலங்கையின் தலையெழுத்து மட்டுமல்ல பல அரசியல்வாதிகளின் தலையெழுத்தும் மாற்றி எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைதிக்காப்போடு 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் உறுதியாக இருந்தார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட்டு பாராளுமன்றத்திடம் அவ்வதிகாரங்களை கொடுப்பதே அவரின் நோக்கமாகவும் இருந்தது.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியும் காட்டினார். இது அவரின் மகத்தான சாதனை என்று நாளை வரலாறு சொல்லும் என்பதிலும் ஐயமில்லை.
தேர்தலில் மகிந்த ராஜபக்ச சற்றும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் தோல்வியடைந்து அம்பாந்தோட்டைக்கு செல்லவேண்டிய நிலையாயிற்று. தம்பிகள் கைதுகள், விசாரணைகள், என்று அடுத்தடுத்து சனி பிடித்தது போல அலைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக வேண்டியவர்களாகவிருக்க, மகிந்தவின் இரத்தம் கொஞ்சம் கொதிக்க தான் செய்தது.
புலிகளை அழித்து நாட்டை மீட்ட நமது குடும்பத்திற்கே இந்த நிலையா? இது தான் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கையா என்று பல்வேறு கூட்டங்களின் போது அவர் மக்கள் முன் புலம்பியதும் ஞாபகம் இருக்கலாம்.
தேர்தலின் பின்னர் அம்பாந்தோட்டையில் இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரத்தொடங்கினார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.
இதில் மகிந்த தரப்பினருக்கு பெரும் சந்தோசம். மைத்திரிக்கு பெரும் தலையிடியாகவும் மாறியிருந்தது.
இந்த சூழலிலேயே கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்து அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்று மகிந்தர் அறைகூவல் விடுத்தார். இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் சொல்லியே வைத்தார்.
அவரின் அறைகூவலோ என்னமோ இன்று திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இனி நடக்கவிருப்பது தான் சுவாரசியமான நிகழ்வுகள்.
முதலில் தெற்கில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தேர்தலில் தோற்ற மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டையில் சொன்னது இது தான். தமிழர்கள் என்னை தோற்கடித்துவிட்டார்கள். அவரின் மறு அவதாரத்தின் ஆயுத எழுத்து தான்.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் புலிகளையும் தமிழர்களையும் தான் தனது வாயில் உச்சரித்துக்கொண்டிருக்கின்றார். இதை மைத்திரியும் கிண்டல் செய்திருக்கின்றார். மகிந்தரின் கண்ணுக்கு தான் புலிகள் தெரிகின்றார்கள் என்று. ஆனால் இது தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படும் என்பதை அவர் கருத்தில் கொண்டிருந்தார்.
எனவே நாளையில் இருந்து தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்படும். அதில் மகிந்தரின் முதலாவது பேசுபொருள். புலிகளின் மீள் உருவாக்கமும், வடக்கில் ஏற்படுகின்ற வன்முறைகளும், இராணுவக் காட்டிக்கொடுப்புக்களும் தான்.
இதுவரை காலமும் வெறும் புலி.. புலி.. என்று கூவியவருக்கு அமெரிக்காவும் ஒரு அறிக்கையை கையளித்துள்ளது. புலிகள் உள்நாட்டில் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் சர்வதேச பின்னணி பலமாகவே இருக்கின்றது. இது வெறும் வாயை சப்பிக்கொண்டிருந்தவருக்கு அவல் கிடைத்ததைப் போன்றது.
விடுவாரா? அமெரிக்காவே தெரிவித்திருக்கின்றது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துவிட்டது. தமது உயிரை தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்ற வெற்றியை இந்த அரசாங்கம் தாரைவார்க்கப் போகின்றது என்று தொடங்க,
பதிலுக்கு மகிந்த ராஜபக்ச புலிகளை உள்நாட்டிலேயே தோற்கடித்தார். ஆனால் அவரால் சர்வதேசத்திடம் வெற்றி பெற முடியவில்லை. சர்வதேசத்தில் புலிகளின் பலம் இவ்வளவு தூரம் வளர்ந்து புலிகளின் செயற்பாடுகள் விரிவாக மகிந்தவே காரணம்.
ஆனால் நாங்கள் புலிகளின் சர்வதேச வலையமைப்பை சிதைக்க இராஜதந்திர ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளின் தடையை நீடித்திருக்கின்றோம் என்பார்கள் இப்பொழுதைய அரசாங்க தரப்பினர்.
இவர்கள் ஒருபுறம் பலியான புலியை தூக்கி பிடிக்க, நாங்கள் என்ன உங்களை விட குறைந்தவர்கள் அல்ல. என்று நமது தரப்பினர் தொடங்குவார்கள். இனி தான் இவர்களுக்கு உண்மையான தேசிய பற்றும், புலிகளின் தியாகங்களும் கண் முன்னே வந்து போகும்.
தமிழ் இளைஞர்கள் செய்த தியாகங்களை நாங்கள் தாரைவார்த்துக்கொடுக்க மாட்டோம் என்பார்கள். எங்கள் சுயத்தை விட்டுக்க மாட்டோம். எங்களுக்கு அபிவிருத்தி முக்கியமல்ல, தேசியம், சுயநிர்ணயம் முக்கியம் என்பார்கள்.
முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்களின் நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து போகும். பிரபாகரன் தேசிய வீரராக தெரிவார்.
ஆக இம்முறை நடக்கவிருக்கும் தேர்தலில் புலிகள் தான் பிரதான பேசுபடுபொருளாக இருக்கப்போகின்றார்கள்.
பாவம் இனி முன்னாள் போராளிகளை விசாரணைக்கு அழைத்தல், தடுத்து வைத்தல் என்று எத்தனையோ விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் என்பதையும் இவ்விடத்தில் கூறிவைக்கின்றோம். இவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனத்திற்காக பலரை மீண்டும் உள்ளே அனுப்ப தயாராகின்றார்கள். அவர்கள் தமிழரின் சில தரப்பினரும், சிங்களவர்களில் முழுத்தரப்பினரும் இதில் குறியாக இருக்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
karu.bomi@gmail.com
karu.bomi@gmail.com
Geen opmerkingen:
Een reactie posten