பொதுத்தேர்தலில் எந்தக்கட்சி சார்பில் களமிறங்குவதென்பதில் மகிந்த ராஜபக்ச மண்டையை பிய்த்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆதரவாளர்கள் சவடால் விடுவதைப்போல, அவர் சுதந்திரக்கட்சிக்கு அல்லு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மாற்றாக களமிறங்கும் சூழல் தற்போதுவரை இல்லையென்பதே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும் தகவலாக உள்ளது. சுதந்திரக்கட்சிக்காரர்களை மிரட்டிப்பார்ப்பதற்காகவே அவர் இடையிடையே தனிவழி செல்லும் அச்சுறுத்தலை விடுவதாக தெரிகிறது.
மகிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் மைத்திரி பாராளுமன்றத்தை கலைத்ததை தொடர்ந்து, நேற்று மாலை மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட மந்திராலோசனையொன்று நடந்துள்ளது. பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
பொதுத்தேர்தலில் களமிறங்கும் விருப்பத்தை அங்கு மகிந்த பகிரங்கமாக வெளியிட்டபோதும், எந்தக்கட்சி சார்பில் களமிறங்குவதென்பதிலேயே குழப்பமுள்ளதாக மகிந்த வெளிப்படையாக கூறியுள்ளார். சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள கட்சியொன்றினூடாக களமிறங்குவது தற்கொலைக்கொப்பானதென்பதை மகிந்த அங்கு கூறியுள்ளார். எனினும், சுதந்திரக்கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைமைப்பதவியை வைத்துள்ள மைத்திரி தான் அவர்களை சிந்திக்க வைக்கிறார். மகிந்தவிற்கு இனி இடமில்லையென்பதை மைத்திரி பகிரங்கமாகவே அறிவித்து விட்ட நிலையில், மகிந்தவை எப்படி வேட்பாளராக்குவது என்பதை பற்றி அங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten