தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juni 2015

தமிழரசுக் கட்சியின் கழுத்துக்கு விடுதலைப் புலிகள் போடும் சுருக்குக் கயிறு இதுதானா ?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன. தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர் ஈழத்து காந்தி என்று அறியப்படுகின்ற எஸ். ஜே. டபிள்யூ. செல்வநாயகம் ஆவார். அன்றில் இருந்து அகிம்சைக் கட்சியாக தமிழரசுக் கட்சி வெளிப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நான்காம் ஈழப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிற்பாடு தமிழரசுக் கட்சி இரத்தக் கறை படாத கட்சியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்ள பார்க்கின்றது. புலிகளை சர்வதேச சமூகமும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி உள்ள சூழலிலேயே தமிழரசுக் கட்சி தலைவர்கள் இவ்விதம் வெளியில் காட்டிக் கொள்கின்றனர்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவை. இவற்றுடன்தான் தமிழரசுக் கட்சியின் கூட்டு உள்ளது. தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் தியாகம், தலைவர் வே. பிரபாகரனின் வீரம் ஆகியவற்றை பேசியே தமிழரசுக் கட்சியும் வாக்குச் சேர்க்கின்றது. இதே நேரம் அகிம்சையின் பெயரைச் சொல்லிக் கொண்டு புலிகள் இயக்க முன்னாள் போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓரம் கட்டி வைத்திருக்கின்றது. ஆனால் புலிகள் இயக்க முன்னாள் போராளியின் மனைவியை கூடவே வைத்திருக்கின்றது. உண்மையில் தமிழரசுக் கட்சி அகிம்சையை, வன்முறைகள் அற்ற பாதையைத்தான் கடந்து வந்திருக்கின்றதா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்கிற பதிலே வரும்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் வாட்டசாட்டமான அடியாட்களை வைத்திருந்தார். தமிழரசுக் கட்சியின் போக்கை அன்று தட்டிக் கேட்க முயன்ற இளையோர்கள் இந்த அடியாட்களால் நன்றாக நையப் புடைக்கப்பட்டனர். இவரின் புதல்வரான பகிரதன் என்பவர்தான் தமிழீழ தேசிய இராணுவத்துக்கு தலைமை தாங்கினார். இதே நேரம் தமிழரசுக் கட்சியால் உசுப்பேற்றப்பட்ட இளையோரே சாரைசாரையாக இளைஞர் பேரவையில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகிம்சைப் போர் நடத்த இணைந்தவர்கள் அல்லர். இவர்கள் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கவில்லை. மாறாக மாவை சேனாதிராசா மீதுதான் அதீத நம்பிக்கை வைத்து இருந்தனர். ஏனென்றால் மாவை சேனாதிராசா வாட்டசாட்டமான உடலை கொண்டிருந்தார். அத்துடன் வீராவேச வசனங்களை விளாசுவார். எனவே இவர் ஆயுத போராட்டம் மூலம் ஈழத்தை பெற்றுத் தருவார் என்று இளையோர்கள் விசுவாசித்தனர். இவரை தளபதியாக வரித்துக் கொண்டனர். இவரை சந்திக்கின்றமையை பெரும் பேறாக கருதினர். மரணம் பஞ்சு மெத்தை, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்றெல்லாம் முழங்கினர். தமிழரசுக் கட்சியின் மேடைகளில் உடலில் கத்தியால் கீறி நெற்றியில் இரத்தத் திலகம் இட்டுக் கொண்டனர்.
ஆயுதப் போராட்டத்தை முடுக்கி விட்டனர். தமிழீழ தாயகத்தை அடைய உயிரை ஆகுதி ஆக்கினார்கள். தமிழ் நஷனல் எலையன்ஸ் என்பதன் சுருக்கமாகவே ரி. என். ஏ அறியப்படுகின்றது. ஆனால் தமிழ் நஷனல் ஆர்மி என்பதன் சுருக்கமும் ரி. என். ஏதான். முன்னதன் தமிழாக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது. பின்னதன் தமிழாக்கம் தமிழ் தேசிய இராணுவம் என்பது. இதை மனதில் வைத்துத்தான் ரி. என். ஏ என்கிற சுருக்கப் பெயரை புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கி இருக்கின்றார். புலிகள் என்கிற ஆயுத போராட்ட இயக்கத்தின் அரசியல் படையாகவே 2009 ஆம் ஆண்டு வரை ரி. என். ஏ இயங்கியது. புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் பிரபாகரனை தமிழ் மக்களின் தேசிய தலைவர் என்றும் ரி. என். ஏ அறிவித்து வந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாக தமிழரசுக் கட்சி இன்று நடிக்கின்றது. மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் போன்றோர் இதை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டி கண்டிக்கின்றனர்.
வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வந்தபோது மலர்ந்தது தமிழரசு என்று இரட்டை அர்த்தத்தில் உதயன் பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரித்தது. தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு இருந்த ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் ஆனார். கடந்த காலங்களில் ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கூட்டு வைத்திருக்க மாட்டார் என்று பச்சையாகவே சொல்லி சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்ற பங்காளிகளுடன் இவர் நிழல் யுத்தம் நடத்துகின்றார்.பங்காளிக் கட்சிகளின் நெருக்குதல்களால் தமிழரசுக் கட்சி துவண்டு போய் உள்ளது. வட மாகாண சபையின் தமிழரசு ஆட்சி இது வரை எந்தவொரு பயனையும் பெற்றுத் தரவே இல்லை என்று தமிழ் மக்கள் அனுபவத்தில் கண்டு கொண்டு உள்ளார்கள். இதே போல சிங்களத்துடன் தமிழ் தேசிய தலைமை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்ற இணக்க அரசியல் புலம்பெயர் தமிழர்களையும் கொதிப்படைய வைத்து உள்ளது. இச்சூழலில்தான் இன்னொரு சுருக்குக் கயிறும் தமிழரசுக் கட்சியின் கழுத்தை இறுக்கத் தயாராகின்றது.
புலிகள் இயக்கத்தின் முன்னிலைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ரூபன். ஆத்மலிங்கம் ரவீந்திரா என்பது இவரின் சொந்தப் பெயர். கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர். தலைவர் பிரபாகரனின் மிக நெருக்கமான சகாக்களில் ஒருவர். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இரா. சம்பந்தனை தலைவர் பிரபாகரனிடம் சிபாரிசு செய்தவர்.1985 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்புச் சிறையில் தடுப்பில் இருந்தார். இவர் அரசியலிலும் சிறந்த அனுபவம் கொண்டவர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து புலிகளால் வடக்கு - கிழக்கில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் உறுப்பினராக விளங்கினார். ஜனாதிபதி பிரேமதாஸவுடன் பேச்சு நடத்த புலித் தலைவரால் அனுப்பப்பட்ட குழுவிலும் இடம்பிடித்து இருந்தார். இப்போது இவர் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டு தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றார். இதற்காக எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக நிற்க ஆசைப்படுகின்றார். இதற்கான கோரிக்கையை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு எழுத்தில் அனுப்பி வைத்து உள்ளார்.
இந்நிலையில்தான் தமிழரசுக் கட்சி அவசர கூட்டம் ஒன்றை திருகோணமலையில் நடத்தி உள்ளது.
மண்ணின் மைந்தன்

Geen opmerkingen:

Een reactie posten