சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக குடியேறியுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதால், தற்காலிக குடியேற்றத்தை தடை செய்யலாமா என்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் இருந்து ஐரோப்பாவில் குடியேற வரும் வெளிநாட்டினர்களின் முதல் குறிக்கோள் ஆல்ப்ஸ் மலை சூழ்ந்த சுவிட்சர்லாந்து நாடாக தான் இருக்கும்.
ஆப்ரிக்காவிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்கள் வடக்கு ஐரோப்பாவை நெருங்க வேண்டுமென்றால், இத்தாலி, கிரீஸ் நாடுகளின் எல்லைகளை கடந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தான் குடியேற விரும்புவார்கள்.
இவ்வாறு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? நடப்பு மாதமான யூன் மாத தொடக்கத்திலேயே சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கும் அதிக எண்ணிக்கையில் சுவிஸில் நுழைய காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சுவிஸின் புலம்பெயர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆண்டு இறுதிக்குள் சுவிஸில் குடியேற அனுமதி கேட்கும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்தாண்டை விட 6000 கூடுதல் என்று தெரிவித்துள்ளது.
சுவிஸில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், சுவிஸில் தற்காலிகமாக குடியேறுவோர்களின் எண்ணிக்கையும் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
ஆனால், இவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்து கிடைக்காது. சுவிஸில் தற்காலிகமாகவே குடியேறியுள்ளவர்களாக கருதப்படுவார்கள்.
தனது தாய் நாட்டில் உள்ள பிரச்சனைகளால் நேரடியாக பாதிக்கப்பட்டு, நாடு திரும்பினால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை உள்ள நபர்களுக்கு மட்டுமே அகதிகள் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டு சுவிஸில் குடியேற அனுமதி கிடைக்கும்.
ஆனால், அகதியாக குடியேற அனுமதி கிடைக்கப்பெறாமலும், தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ள நபர்களுக்கு Temporary Residence என்ற தற்காலிக குடியேற்றத்தை அரசு வழங்குகிறது.
சில தினங்களுக்கு முன்னர் வெளியான புள்ளிவிபரத்தில், சுவிஸில் தற்காலிகமாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் 6-வது இடத்தில் உள்ளனர்.
அதாவது, இலங்கையை சேர்ந்த சுமார் 1,703 பேர் சுவிஸில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர். இவர்களுக்கு தற்காலிக குடியேற்றத்திற்கான ‘F’ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுவிஸில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வசித்து வரும் ஒரு வெளிநாட்டினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் தற்காலிகமாக குடியேறியுள்ள நபர்களுக்கு கிடைக்காது என்பது தான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.
ஒரு அகதிக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக குடியேறியுள்ள நபருக்கு கிடைக்காது. ஏனெனில், அவர்கள் அரசால் முழுமையாக அங்கீகரிக்கப்படாதவர்கள். அவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளை அடையாளம் காணுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
மேலும், தற்காலிகமாக குடியேறியுள்ளவர்கள் குறிப்பிட்ட மண்டலத்தில் தான் வசிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவர்களை சரியாக இனம் கண்டுக்கொள்ள வேலை அளிக்கும் முதலாளிகளுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி தற்காலிக குடியேற்ற நபருக்கு வேலை கிடைத்தாலும், அவருடைய வருமானத்தில் அரசிற்கு சுமார் 10 சதவிகிதம் வரி கட்ட வேண்டும்.
ஆனால், அகதிகளுக்கு இந்த நிலை இல்லை. அவர்களுக்கு பிற சுவிஸ் மற்றும் ஐரோப்பிய குடிமகன்களுக்கு கிடைக்கும் சமூக நல நிதி உதவி கிடைப்பதால் வருமானத்தில் பிரச்சனை இல்லை.
கடந்த மே மாதம் இறுதி வரை சுவிஸில் தற்காலிகமாக குடியேறியுள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 31 ஆயிரம் ஆகும்.
இவர்கள் அனைவரையும் குறித்து தெளிவான, தேவையான தகவல்கள் கிடைக்கப்பெறாததால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தொடர்ந்து சிக்கல்கள் எழுந்து வருகிறது.
குறிப்பாக இவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதும், அதற்கும் குறைவான வயதில் உள்ளதால், அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வது கடினமாக உள்ளது.
இத்தனை குறைபாடுகள் உள்ள இந்த தற்காலிக குடியேற்றத்தை நிரந்திரமாக தடை செய்யலாமா என்பது தான் சுவிஸ் அரசியல் தலைவர்களின் தற்போதைய பேச்சுவார்த்தையாக இருக்கிறது.
சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Heinz Brand என்பவர் கூறுகையில், எரித்தியா, இலங்கை உள்ளிட்ட குடிமக்களுக்கு தற்காலிக குடியேற்ற அனுமதி வழங்குவது எளிது தான். ஆனால், அவர்களை நாடு திரும்ப செய்வது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற வேண்டும்.
ஏனெனில், தற்காலிகமாக குடியேறியுள்ள நபர்கள் தங்களது நாட்டிற்கு திரும்புவதற்கு ஒரு வருடம், சில சமயத்தில் 10 வருடங்கள் கூட ஆகிறது. இது சுவிஸின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
மேலும், சுவிட்சர்லாந்து போன்ற சிறிய நாட்டில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக குடியேற்றத்தை அனுமதிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், தற்காலிக குடியேற்றத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என Heinz Brand வலியுறுத்தியுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten