தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.
இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.
இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது.
அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் இன்று சுவிஸ் நாட்டின் நேரப்படி 5.30 மணியளவில் இவ்விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.
எனினும், தற்பொழுது நேரடிச்சாட்சியங்கள் பலர் ஐக்கிய நாடுகள் சபையோடு நேரடியான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதனால் வரவிருக்கும் செப்டெம்பர் மாத அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் கண்டமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை இராணுவத்தினரும் அரசாங்கமும் சந்தித்திருந்தன.
துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் மக்கள் மீது நடத்தப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்பொழுது அதன் தாக்கம் இன்னும் வீரியம் பெறும் நிலை உருவாகியுள்ளது. நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளாக மாறும் பொழுது அழுத்தங்கள் பலமடங்காக அதிகரிக்கும்.
இந்நிலையில் செப்டெம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும் அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என்கின்றார்கள் அரசியல் அவதானிகள்.
இதேவேளை இலங்கையின் இனவழிப்பு நடவடிக்கையை சுயாதீனமான விசாரணையை சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படுத்தி இனவழிப்பில் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெறுமதியான தீர்வினையும், போர்க்குற்ற விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனிவுரிமை ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.
இக் கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten