தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்றனர். எம்மை பொறுத்த வரையில் கட்சியோ பதவியோ முக்கியமில்லை. தேவையானால் கட்சியினை கலைத்துவிடவும் தயார். ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாக எந்த கொள்கையினை முன்வைத்து கூட்டமைப்பு செயற்பட்டதோ அந்த நிலைக்கு முதலில் திரும்பவேண்டும்.
தமதுயிர்களை அர்ப்பணித்த மக்களுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும். ஒன்றுமே இல்லாத மாகாணசபையை கைப்பற்ற கூட்டமைப்பு பெரும்பாடுபடுகின்றது. தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையில் ஒன்றுமில்லையென காட்டப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர். அவ்வாறாயின் ஏன் தேவையற்று தேர்தலில் போட்டியிடவேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார் அவர்.
ஏட்டிக்கு போட்டியாக போராட்டங்களை நடத்தி அம்மக்களை நட்டாற்றில் விடுவது தான் கூட்டமைப்பின் வேலையே. அவர்களது ஏட்டிக்கு போட்டியான அறிவிப்புக்களையடுத்து ஒரு ஜந்து மாதம் எமது கட்சி போராட்டங்கிளிலிருந்து விலகி அமைதி காத்துவந்திருந்தது. ஆனால் கூட்டமைப்பு அக்காலப்பகுதியினுள் எதனையும் செய்திருக்கவில்லை.
இப்போது வலிவடக்கு மக்களது காணி சுவீகரிப்பு தொடர்பாக கூட்டமைப்பு எதனையும் கண்டுகொள்ளாது இருந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்களே எம்மை கோரியிருந்தார்கள். அதனையடுத்து மாவட்ட செயலகம் முன்பதாக எமது போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதற்கும் போட்டியாக தெல்லிப்பளையில் கூட்டமைப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு விடுத்திருந்தது. சாகும் வரையுண்ணாவிரதமென அறிவித்து விட்டு மதியவுணவுடன் அவர்கள் வீடுகளுக்கு போய்விட்டனர். இப்போது புதிதாக வழக்குப் போடப்போவதாக கூறுகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட வழக்குகளுக்கு என்ன நடந்ததென்பதை கூட்டமைப்பு தலைமையே சொல்லவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
மேதினத்தினில் கடந்த ஆண்டை விட இம்முறை கூடியளவில் மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இளம் தலைமுறையினரை சேர்ந்தவர்களே கூடிய அளவில் காணப்பட்டனர்.
மேதினம் இடம்பெற்ற மைதானப்பகுதியை சூழ பெருமளவிலான பொலிஸார் இம்முறை குவிக்கப்பட்டிருந்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten