தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ த.தே.கூட்டமைப்பு முன்வர வேண்டும்!- அஸாத் சாலி


ஹக்கீம் பங்கேற்கும் திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
[ புதன்கிழமை, 22 மே 2013, 10:43.13 AM GMT ]
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட விருக்கின்ற நூலகம் தொடர்பிலேயே மாகாண முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள எதிர்ப்பை அடுத்தே முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு தனி நபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டு 23.05.2013 வியாழக்கிழமை திறக்கப்படுவதாக மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மேற்படி வாசிகசாலை திறப்பு விழாவையும் பெயர் சூட்டும் நடவடிக்கையையும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ த.தே.கூட்டமைப்பு முன்வர வேண்டும்!- அஸாத் சாலி
[ புதன்கிழமை, 22 மே 2013, 11:00.08 AM GMT ]
வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும், அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும்  தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அசாத் சாலி இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு:
இந்த நாட்டில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் ஆட்சியாளர்களிடம் உரிய தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.
இவ்வாறான ஒரு சூழலில் அண்மைக்காலங்களாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான காணி அபகரிப்பு பிரச்சினைக்கு அந்த மக்கள் சார்பாக, தங்களது கட்சி மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் இந்த காணி அபகரிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயத்தில் யாரும் அவர்களுக்கு இதுவரை உதவ முன்வந்ததாகத் தெரியவில்லை.
நீங்கள் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையில் முஸ்லிம்களோடு தொடர்புபட்ட காணி அபகரிப்பு விடயங்களையும் இணைத்துக் கொண்டு இரண்டு சமூகங்களும் எதிர்நோக்கியுள்ள பொதுவான பிரச்சினையாக முன்னெடுத்துச் சென்றால் அது மேலும் வலுவுடையதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இந்த விடயத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி அவர்களையும் இணங்கச் செய்து இந்த நடவடிக்கையில் ஈடுபடலாம். அதற்குத் தேவையான சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் நாம் தயாராக உள்ளோம்.
சில முக்கிய பொதுவான விடயங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை ஏற்கனவே பல இடங்களில் நீங்கள் வலியுறுத்தி உள்ளீர்கள். அந்த வகையிலேயே நான் மேற்படி விடயத்தை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில் ஒரு கட்சி என்ற வகையில் இந்த விடயத்தில் சில ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிப்புடன் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Geen opmerkingen:

Een reactie posten