அரசியல் பேதமற்ற வகையில் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்!- பா.உ யோகேஸ்வரன் இந்திய தூதுவருக்கு கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:22.29 PM GMT ]
இந்திய அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டதாக வழங்கப்பட்ட 300 வீடுகளில் கிரான் பிரதேசத்தில் 100 வீடுகள் அமைப்பது சார்பாக எந்தவித கூட்டமும் கிரான் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரான மாகாணசபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனால் நடாத்தப்படவில்லை என பா.உ சீ. யோகேஸ்வரன் இந்திய தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்திய அரசாங்கம் இரண்டாயிரம் வீடுகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிப்பதற்காக வழங்கியுள்ளது. இவ்வீடுகள் சார்பாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தூதரகத்திற்கு அழைத்து விளக்கமளித்துள்ளீர்கள்.
அந்தவகையில் முதற்படியாக 300 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் 100 வீடுகள் வெல்லாவெளி பிரதேசத்திலும், 100 வீடுகள் வவுணதீவு பிரதேசத்திலும், 100 வீடுகள் கிரான் பிரதேசத்திலும் கட்டப்படவுள்ளது.
இவ்வேளை இவ்வீடுகள் அமைப்பது சார்பாக வெல்லாவெளி பிரதேசத்திலும், வவுணதீவு பிரதேசத்திலும் அதன் பிரதேச அப்விருத்திக்குழு தலைவர் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அப்பிரதேச அமைப்புகளும் அழைக்கப்பட்டு அரசியல் வேறுபாடு அற்ற நிலையில் தெரிவுகள் நடைபெற்றுள்ளது.
ஆனால் கிரான் பிரதேசம் கல்குடா தொகுதியில் உள்ளது. இப்பிரதேசத்திற்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராக மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் உள்ளார். ஆனால் இப்பிரதேச வீடுகள் வழங்கல் சார்பாக இதுவரை எக்கூட்டமும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை பெறும் நோக்குடன் வீடுகள் வழங்குவதாக தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து வீடு வழங்கும் விண்ணப்பம் என தமது ஆதரவாளர்களுக்கு வழங்கியது.
ஆனால் தற்போதைய இந்திய அரசாங்கம் வழங்கும் வீடுகளை தமது கட்சி ஆதரவாளர்களுக்கு தான் வழங்கிய விண்ணப்பத்திற்கமைய வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையிலே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேசத்தின் மக்களுக்கு அரசியல் பேதமற்ற முறையில் இந்திய அரசாங்கத்தின் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றோம். அதுவும், இவ் உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
ஆனால் கிரான் பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது அரசியல் ரீதியாக இந்திய அரசாங்க வீட்டை வழங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே விரைவாக இந்திய தூதரகம் இவ்விடயமாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பேதமற்றமுறையில் வீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு அறிவித்தல்களை வழங்கி அவர் ஊடாக பிரதேச செயலாளர்களின் கீழ் எதுவித அரசியல் பேதமற்ற முறையில் வீடு வழங்கல் சார்பான ஒன்றுகூடலை நடாத்தி தெரிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மடலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொம்மாதுறையில் பெண் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம்!
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:00.27 PM GMT ]
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதிஸ்டவசமாக குறித்த பெண் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இருந்து கொம்மாதுறை பகுதிக்கு வருகை தந்திருந்த பெண்மணி ஒருவர் மீது கொம்மாதுறை மதுபானக் கடைக்கு அருகாமையில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் சைலன்சர் பொறுத்தப்பட்ட கைத்துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால் குறித்த பெண் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததுடன் மேற்படி சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆயுததாரிகளின் நடமாட்டம் குறித்து பொலிசார் கொம்மாதுறை வர்த்தகர்கள் பலரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten